காடுகள் அடர்ந்த கல்லூரி ஒன்றில் பெண்கள் தொடர்ச்சியாக பலியாகிறார்கள். ஏன், எதற்கு, எப்படி என த்ரில்லர் கதை சொல்ல முயல்கிறது D பிளாக்.

கோயம்புத்தூரின் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே ஒரு பொறியியல் கல்லூரி இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் கல்லூரிப் பெண்கள் வெளியே வரக்கூடாது; மொட்டை மாடிக்கு துணி காயப்போட செல்லக்கூடாது; அறையில் விளக்குகள் எரியக்கூடாது என ஏகப்பட்ட கண்டிசன்களுடன் செயல்படுகிறது லேடீஸ் ஹாஸ்டல் நிர்வாகம். அப்படியும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால், பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் எனத் தீர்ப்பை எழுதுவிட்டு கமுக்கமாய் இருக்கும் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிறார் முதலாம் ஆண்டு மாணவரான அருள்.

D BLOCK விமர்சனம்

அருளுக்கு ஸ்ருதியைப் பார்த்ததும் காதல். அப்படியே தன் நண்பர்களான விஜய், மைலோவுடன் கேன்டீனில் ஜாலியாகக் காலம் தள்ளுகிறார். எவ்வளவோ சொல்லியும், எல்லோரும் எதிர்பார்த்தது போல, அருள் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அந்தத் துயரம் நடந்துவிடுகிறது. இந்த கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை தன் நண்பர்களுடன் இணைந்து அருள் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் டி பிளாக்கின் மீதிக்கதை.

அருளாக அருள்நிதி. காலேஜ் மாணவருக்கான தோற்றத்தில் பக்காவாக இருக்கிறார். அருளின் காதலியாக வரும் அவந்திகா மிஸ்ராவுக்கு சில காட்சிகள் வைத்திருக்கிறார்கள். பெரிதாக நடிக்க எந்த ஸ்கோப்பும் இல்லை. அருளின் நண்பர்களாக ஆதித்யா கதிரும், படத்தின் இயக்குநர் விஜய்யும் வருகிறார்கள். ஆதித்யா கதிரின் காமெடி சில இடங்களில் சிரிக்கவும் பல இடங்களில் முறைக்கவும் வைக்கின்றன. தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ் என சீனியர் நடிகர்கள் படத்தில் இருந்தாலும் யாரும் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. ‘வாம்மா மின்னல்’ என்கிற வேகத்தில் வந்து போகிறார் கரு.பழனியப்பன். ஆனால், அந்த கேப்பிலும் தனக்கே உரித்தான நக்கலுடன் சாமியார்கள் குறித்த ஒரு வசனத்தைப் பேசிவிட்டுப் போகிறார்.

படத்தின் ஆகப்பெரும் பிரச்னை அதன் நம்பகத்தன்மை. தமிழ்நாட்டில் இருக்கும் பல கல்லூரிகள் ஊரைத் தாண்டி காட்டுக்குள் இருக்கின்றன என்பதால் அதை மட்டும் எளிதாக நம்ப முடிகிறது. படம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் தோன்றும் லாஜிக் கேள்விகள் எல்லாம் படம் பார்க்கும்போதே தோன்றினால், அந்தப் படக்குழு கதையை சிரத்தையுடன் எழுதவில்லை என்றே அர்த்தம்.

கல்லூரிக்குள் வந்து செல்லும் அமானுஷ்ய மனிதர் என்னும் சுவாரஸ்ய ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஆனால், சிறுத்தையின் கைக்கும் இரும்புக்கும் வித்தியாசம் இருக்காதா என்ற கேள்வியில் ஆரம்பித்து கல்லூரி ஏன் அதை மூடி மறைக்கிறது, எப்படி எல்லா பெற்றோர்களும் அமைதியாக இருக்கிறார்கள் என அத்தனை சங்தேகங்கள் தோன்றுகின்றன.

D BLOCK விமர்சனம்

அதேபோல் படத்தின் மையக்கருவுக்கு வராமல் வெறுமனே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் அநாவசிய காட்சிகளே படத்தின் முதல் பாதியை நிறைத்துவிடுகின்றன. கணேஷ் சிவா எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் குமார் ராஜேந்திரன். எல்லா கல்லூரிகளிலும் சொல்லப்படும் பகீர் திகில் கதைகளை நம்பி ஒரு ஒன்லைனை சுவாரஸ்யமாய் எழுதியிருக்கிறார். ஆனால், அதில் இன்னும் கவனம் செலுத்தி சுவாரஸ்யமான காட்சிகளை நம்பும்படி திரைக்கதையில் இணைத்திருக்கலாம். கௌசிக் கிரிஷின் பின்னணி இசை சில இடங்களில் மட்டும் திகில் தன்மையைக் கூட்டுகிறது.

பகீர் காட்சிகளைக் கடந்து, மொத்த படமும் இன்னும் அழுத்தமாய் நம்பும்படி இருந்திருந்தால் நாமும் பயந்திருக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.