வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

சமீபத்தில் “நெஞ்சுக்கு நீதி” படத்தை தியேட்டரில் பார்த்தபோது அந்தப் படத்தில் இடம்பெறும் பாடகர் குரு அய்யாத்துரை குரலில் ஒலித்த “செவக்காட்டு சீமையெல்லாம்” பாடலை தியேட்டர் எஃபெக்டில் கேட்டதும் உடல் சிலிர்த்துவிட்டது. கண்களும் கலங்கிவிட்டது. அவ்வளவு வலியுடன் அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக “கொட்டுற தெய்வம் கூரைய பிச்சு கொட்டும்னு தானே சொன்னாங்க… கூரையுமில்லா எங்கள எதுக்கு கொன்னாங்க…”

“கல்லான கடவுளுக்கே கருணை அது எங்கிருக்கு?” போன்ற வரிகள் தனித்து தெரிந்தன. இதேபோல எப்போதுமே நம் கண்களை கலங்க வைக்கும் அழுத்தமான நான்கு துயர பாடல்கள் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல்களை பற்றிப் பார்ப்போம்.

ராகவா லாரன்ஸ்

1. புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக் கோனே

இயக்குனர் தங்கர் பச்சானின் தென்றல் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் இது. சிறைக்குள் அடைபட்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தன் சிறைத்தோழர்களுடன் தன் சோக கதையை கூறி ஆடிப்பாடும் இப்பாடலில் தனக்கும் அப்பாவுக்கும் பறைக்கும் உள்ள தொடர்பை விளக்கி இருப்பார். பறையிசை கலைஞரான தன் அப்பாவின் கைகளை ஆதிக்க சாதிக்காரர்கள் வெட்டிவிட அதை கண்கூட பார்த்த மகன் லாரன்ஸ் அந்தக் கொடுமைகாரர்களை பாரபட்சம் பார்க்காமல் சட்சட்டென்று வெட்டிவிடுவார். அந்த துயரத்தை லாரன்ஸ் பாடி முடித்ததும் எஸ்பிபி குரலில் ஒலிக்கும் “இது விடுதலை இசை” என்ற வரிகளை கேட்கும்போது இயற்கையாகவே சிலிர்த்துவிடுகிறது.

குறிப்பாக “அம்மா வயித்துக்குள்ள இருக்கும்போது தெரியுமாமே ஒரு இருட்டு… அது இப்ப தெரியுது… பத்திரமா பாத்துக்குங்க என் பறைய… நான் மறுபடியும் பொறந்து வருவேன்டா…” என்று கூறியபடி மழையில் நனைந்தபடி சுருண்டு படுக்கும் லாரன்ஸின் அந்தப் பாடலை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடிய இந்தப் பாடலுக்கு, யுகபாரதி எழுதிய இந்தப் பாடலுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைக்காமல் போனது வருந்ததக்க ஒன்று.

2. ஆக்காட்டி ஆக்காட்டி

இயக்குனர் சேரனின் “தவமாய் தவமிருந்து” படத்தில் வரும் பாடல் இது. ஆக்காட்டி பறவை எங்கெங்கே முட்டையிட்டது… எத்தனை குஞ்சு பொறித்தது… தன் குஞ்சுகளுக்கு இரை தேடி சென்றபோது கண்ணிக்குள் எப்படி சிக்கிக்கொண்டது… அந்தப் பறவையின் கண்ணீர் பெரிய பெரிய நீர்நிலைகளாக மாறி அந்தக் கண்ணீர் நீர்நிலைகளில் விலங்குகள் குளித்தெழுவது பற்றி… மிக அழுத்தமான வரிகளுடன் அந்தக் காட்சிகளை கூத்துக்கலைஞர்களை வைத்து படமாக்கி இருப்பார் சேரன். வேதனை அனுபவிக்கும் மனிதர்களுக்கு அந்த தருணங்கள் ரொம்பவே நெருக்கமானதாக இருக்கும். அந்தக் காட்சிகளை எதர்ச்சையாக பார்க்கும் ராஜ்கிரண் குஞ்சுகளை காக்க போராடும் அந்த தாய்ப்பறவையுடன் தன்னை ஒப்பிட்டு தன்னுடைய இரண்டு மகன்களையும் தன் உடலோடு இறுக்கிக்கொள்வார். சிறிது நேரம் துயரப் பாடலாக ஒலிக்கும் அந்தப் பாடல் சட்டென அந்தப் பறவையை விடுதலை அடைய வைத்து “ஏழைக்குருவி நீ ஏங்கி அழக்கூடாது” என்றொலித்து அற்புதமான ஒரு தன்னெழுச்சி பாடலாக மாறி இருக்கும்.

தவமாய் தவமிருந்து

இந்தப் பாடலை பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தன் இணையத்தில் பகிர்ந்த வரிகள்:

“சேரனின் தவமாய் தவமிருந்து படத்திற்காக படமாக்கபட்ட ஆக்காட்டி ஆக்காட்டி என்ற இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை, இப்பாடல் நாட்டுபுறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது, வலையென்ன பெரும் கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா என நம்பிக்கையூட்டும் விதமாக இதை மாற்றி எழுதியவர் தோழர் எஸ்ஏபெருமாள், பாடலை மேடைகளில் பாடி புகழ்பெறச் செய்தவர் டாக்டர் கே. ஏ.குணசேகரன். படத்திற்காக இந்தப் பாடலை நாடக இயக்குனர் பிரளயன் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், பாடலும் படமாக்கபட்ட விதமும் அற்புதமாக உள்ளது.”

3. எங்கும் புகழ் துவங்க

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான “பரியேறும் பெருமாள்” படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் இது. பெண் வேடமிட்டு நடனமாடும் கூத்துக் கலைஞரான அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள தொடர்பை இந்தப் பாடலில் விளக்கி இருப்பார் மாரி. பரியேறும் பெருமாள் BABL மேல ஒரு கோடு என்பதை பார்த்து பரியனின் ஆசிரியர் “இதென்னடா BABL மேல ஒரு கோடு” என்று கேட்க பரியன் அதற்கான விளக்கத்தை சொல்வான். “பாத்துடா கடைசி வரைக்கும் அந்தக் கோடு வர மாதிரி இல்லாம பாத்துக்கு…” என்பார்.

எங்கும் புகழ் துவங்க பாடலில் “பட்டம் பெறாமலே பாதியிலே பறந்தோடினாய்” என்ற வரி, அப்பாவோ இப்படி கஷ்டப்பட்டு பெண் வேடமிட்டு கூத்துக்கட்டி சம்பாதித்து படிக்க வைக்க… மகன் பரியனோ கல்லூரியில் நிகழும் சாதி அரசியலால் பட்டம் வாங்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதை இந்தப் பாடல் அழுத்தமாய் உணர்த்தும். நாட்டுப்புற பாடகர்களான ஆண்டனி தாசனும் கல்லூர் மாரியப்பனும் இந்தப் பாடலை அவ்வளவு உணர்வுபூர்வமாய் பாடியிருப்பார்கள்.

எங்கும் புகழ் பாடல்

4. ஜில்லா விட்டு

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் உருவான “ஈசன்” படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் இது. மேற்கண்ட மூன்று பாடல்களிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள பாசத் தொடர்பை துயரம் கலந்து பாடியிருப்பார்கள். ஆனால் இந்தப் பாடலில் ஒரு பெண்ணுக்கும் அப்பாவுக்கும் உள்ள பாச தொடர்பை பற்றி “அஞ்சு புள்ள பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டி தான்… வாழ்க்கையில பூண்டியாம்… எட்டாவதா பெத்தெடுத்த எங்கப்பனுக்கு அது தெரியல…” என்றும், “சுகத்த விக்குற பொண்ணுக்கும் மனசு இருக்குது கேளுய்யா…” “ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்குறேன்…” என்றும் பாலியல் தொழிலாளி ஒருவர் வேதனையுடன் ஆடி பாடுவது போல் படமாக்கி இருப்பார் சசி.

அந்தப் பாடலை பாடிய பாடகர் தஞ்சை செல்விக்கு அந்த ஆண்டுக்கான சிறந்த பாடகிக்கான விஜய் டிவி விருது கிடைத்தது. சுப்ரமணியபுரம் படத்திற்காக “மதுர குலுங்க குலுங்க” என்கிற பாடலை அவ்வளவு துள்ளலுடன் உருவாக்கியிருப்பார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவருடைய இசையில் உருவான இந்த “ஜில்லா விட்டு” பாடலும் பட்டிதொட்டியெல்லாம் செம ஹிட். இயக்குனர் சசியும் ஜேம்ஸ் வசந்தனும் மீண்டும் இணைய வேண்டும் என்பது பலருடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

இந்த நான்கு பாடல்களுமே கலைநேர்த்தியுடன் எடுக்கப்பட்ட துயரமுணர்த்தும்… ஒருபோதும் நினைவிலிருந்து அகற்ற முடியாத தனித்துவமான பாடல்கள். இந்த மாதிரியான பாடல்களை தந்த நாட்டுப்புற பாடகர்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருந்ததக்க ஒன்று.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.