“ரெண்டு வாரமா குணா குகைக்குப் போலாம்னு கேட்டுட்டு இருக்கேன். இதோ அதோனு இழுத்துட்டு இருக்கீங்க?’’ – கலைவாணி பாத்திரத்தை உருட்டும் சத்தம் ஹால் வரை கேட்கவும் எழுந்து வந்தார் ராஜேந்திரன்.

“டிவி சீரியல் மட்டும் பாத்துட்டு இருந்த காலத்துல, அந்த நடிகை கட்டியிருக்குற மாதிரி புடவை வேணும், கம்மல் வேணும், வளையல் வேணும்னு தானே கேட்டிட்டு இருந்தே… இப்ப ரீல்ஸ் பாக்க ஆரம்பிச்சதுல இருந்து இந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க … அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு ஒரே அலப்பறையா போச்சுடி உன்னோட’’ – கலைவாணியை கிண்டல் செய்த திருப்தியில் ஒரு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தார்.

குணா திரைப்படம் வெளியான காலத்தில் இருவருமே பள்ளி மாணவர்கள். கலைவாணி, ராஜேந்திரனுக்கு ஒன்றுவிட்ட மாமன் மகள். கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டிக்குப் போகும்போது இருவரும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வார்கள். தோப்புக்குப் போய் மாங்காய் பறிப்பது, கொய்யாய் பறிப்பது என கிராமத்து வாழ்க்கையில் போதும் போதுமென வாழ்ந்துவிட்டு பிறகு திருமணம், வேலை என இப்போது நகரவாசிகளாகிவிட்டார்கள். ஒரு மகன், ஒரு மகள் என இவர்களின் பிள்ளைகள் இருவரும் வெளியூரில் படித்துக் கொண்டிருக்க, கலைவாணி – ராஜேந்திரன் தம்பதிக்கு இது இரண்டாம் இன்னிங்ஸ் காலம்.

Guna

“சின்ன வயசுல மாங்காய் வேணும்னு கேட்டப்ப, மரத்துல ஏறி பறிச்சுட்டு வந்து கொடுத்தீங்க. கல்யாணம் ஆன புதுசுல தியேட்டர் தியேட்டரா சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனீங்க… இப்ப எனக்கு குணா படத்தை மறுபடியும் தியேட்டர்ல பாக்கணும். கூட்டிட்டுப் போக முடியுமா சொல்லுங்க?’’ – சவால் விட்டார் கலைவாணி.

“அதுக்கென்ன, இப்பதான் ஒவ்வொரு படமா தியேட்டர்ல ரீரிலீஸ் பண்றாங்களே… அந்த மாதிரி `குணா; தியேட்டருக்கு வரட்டும். கூட்டிட்டுப் போறேன்.’’

“ஆக, மொத்தம் என்னை குணா குகைக்குக் கூட்டிட்டுப் போகப் போறதில்ல. சொல்லிட்டீங்கள்ல… விடுங்க’’ – ஒரு குழந்தையைப் போல் கோபித்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போனார் கலைவாணி. வெள்ளை நிற சாமந்திப் பூக்கள் பூந்திருந்த சிறிய தொட்டிக்குப் பக்கத்தில், பெரிய தொட்டி ஒன்றில் புதினா செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. டப்பாவில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்து புதினா இலைகள் மீது மெதுவாகத் தெளிக்கவும், அதன் வாசம் நாசி வரை எழுந்து பரவியது. அடுத்து, தென்னை மரத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டும். டப்பாவில் கொண்டு போய் ஊற்றிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாதென்று, நீர் பாய்ச்சும் பைப்பை இழுத்துக் கொண்டிருந்தார். ஒழுங்காக சுற்றி வைக்கப்படாத ரப்பர் பைப்பை தென்னைமரம் வரைக்கும் ஒரே சீரான நீளவாக்கில் இழுத்து இழுத்து மூச்சு வாங்கவும் அங்கேயே மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார் கலைவாணி.

மூக்கு வேர்த்தபடி பின்னால் இருந்து சிரித்தவாறு தோட்டத்துக்கு வந்தார் ராஜேந்திரன். “பாத்தியா… இதுக்குதான் உன்ன குணா குகைக்கு கூட்டிட்டுப் போக மாட்டேன்னு சொன்னேன். உன்னால இந்த ரப்பர் பைப்பையே இழுக்க முடியலையே… நான்லாம் தப்பித் தவறி குகையில விழுந்தா நீயெல்லாம் என்னை கயிறு கட்டி இழுப்பியா சொல்லு?’’ – கெக்கே பெக்கெவென்று சிரித்து வைத்தார்.

“யாரு… நீங்கதான் குணா குகைல விழுற ஆளா? என்னை தள்ளிவிட்டுட்டு மேல இருந்து பார்த்து இப்டிதான் கெக்கெ. பெக்கனு சிரிப்பீங்க’’ – பதிலுக்கு சொல்லிவிட்டு மறுபடியும் சமையல்கட்டுக்குப் போனார் கலைவாணி.

சூடாக இருந்த தண்ணீரில் கொஞ்சம் தேயிலையும் இஞ்சி, புதினா, லவங்கப்பட்டையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கினாள். மசாலா ப்ளாக் டீயின் வாசம் தோட்டம் வரைக்கும் வீசி ராஜேந்திரனை உள்ளே இழுத்தது.

“இப்ப என்ன குணா குகைக்குத் தானே… போலாம். ஆனா அங்க போய் என்ன பண்ணப் போறோம்? முட்டி தேய்ஞ்ச காலத்துல இதெல்லாம் வேணுமா சொல்லு?’’

ராஜேந்திரன் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டு என்றாலும் `முட்டி தேய்ந்த வயதான காலம்’ என்பது கலைவாணியை வெகுவாக உறுத்தியது. இத்தனை காலத்தில் இரண்டு முறை சிறுநீரகப் பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ராஜேந்திரன். சிறுநீர் பையோடு மாதக்கணக்கில் படுக்கையில் இருந்து குணமான நாளிலிருந்து இப்போது வரை அவர் உடல்பாதைகளை தான் கிண்டல் அடித்ததில்லை. இவர் மட்டும் எப்படி அப்படிச் சொல்லலாம். `முட்டி’ என்று அவர் குறிப்பிட்டுச் சொல்வது தன் இயலாமையைச் சொல்கிறாரா, மூப்பாகிவிட்டால் தன்னால் இனி எதற்கும் கம்பெனி கொடுக்க முடியாது என்று அவராகவே நினைத்துவிட்டாரா? – குழப்பங்களோடு போய் ஊஞ்சலில் உட்கார்ந்தார்.

மெதுவாக அசைந்த ஊஞ்சல் தன் பங்குக்குச் சய்ய்ய்ங்… சய்ய்ய்ங் என சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது.

“இப்ப எதுக்கு இப்டி மூஞ்ச தூக்கி வச்சிருக்க? நான் நாளைக்கே கூட்டிட்டுப் போறேன் ‘’ – கலைவாணியின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் டி.வியின் சத்தத்தைக் கூட்டினார் ராஜேந்திரன். அங்கிருக்கப் பிடிக்காமல் படுக்கை அறைக்குப் போய் தூங்குவது போல் பாவனையில் மூழ்கினார் கலைவாணி. தூர இருந்து எட்டிப்பார்த்த ராஜேந்திரன், கலைவாணி தூங்குவது போல் தெரியவும் டிவியின் சத்தத்தைக் குறைத்தார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் சுவாரஸிமாகப் போய்க் கொண்டிருந்தது.

முன்பெல்லாம் சொந்த ஊரில் இருந்தவரை கிரிக்கெட் பார்ப்பதென்றால் தெருவில் இருந்த இளைஞர்கள் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடிவிடுவார்கள். நகரம் வந்த பிறகு பையன் வெளியூர் போகும் வரை அவன் தான் ராஜேந்திரனுக்கு கிரிக்கெட் பார்ட்னர். இப்போது அவனும் இல்லை. தனியாக கிரிக்கெட் பார்ப்பதெல்லாம் அவருக்குக் கொடுமையாக இருந்தது. ஊரில் இருந்த தன் நண்பன் சீனுவுக்குப் போன் போட்டார்.

“மேட்ச் பாக்குறீயாடா சீனு.. அந்த பால் மட்டும் கேட்ச் பிடிக்காட்டி சிக்ஸ் எடுத்திருக்கலாம்டா. கோட்டை விட்டுட்டானுங்க. கிரிக்கெட்லாம் தனியா பாத்தா போரடிக்குதுடா.. கிளம்பி ஊருக்கு வர்றீயா?’’ நண்பனிடம் போனில் கேட்டுக் கொண்டிருந்தார். எதிர்முனையில் சீனு சொன்னதைக் கேட்டு சட்டென போனை வைத்தவர் கலைவாணி படுத்திருந்த அறையை திரும்பிப் பார்த்தார். கொஞ்ச நேரம் எதுவும் தோணாமல் மறுபடியும் சீனுவுக்குப் போன் போட்டார்.

“சீனு.. ஆயிரம் இருந்தாலும் எம் பொண்டாட்டி மாதிரி வராது. நான் தனியா கிரிக்கெட் பாக்குறதுக்கு கஷ்டப்படுவேன்னு எனக்கு முன்னாடியே உனக்கு போன் பண்ணி வர சொல்லி இருக்கான்னா, அவ எனக்கு மட்டுமில்லடா… நம்ம இத்தனை வருஷ ப்ரெண்ட்ஷிப்புக்கு எவ்ளோ மரியாதை கொடுக்குறான்னு பாரேன்’’ – ராஜேந்திரனுக்குப் பேசப் பேசப் பெருமிதம்.

கோபத்தில் தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்ததை இன்னும் கொஞ்ச நேரம் தொடரலாம் என்று நினைத்தார் கலைவாணி. “சீனு… காத கொடேன்.. ஒரு ரகசியம் சொல்றேன். இப்ப கூட ஏதோ மஞ்சுமெல் பாய்ஸ்னு ஒரு படம் வந்துருக்கும் போல. அந்தப் படத்தை எனக்குத் தெரியாம பாத்துட்டு, லவ் ஃபீலிங்குல குணா குகைக்குப் போலாம்னு அடம் புடிச்சிட்டு இருக்கா. கூப்ட ஒடனே வர்றேன்னு சொல்லிட்டா, இந்த வயசுல உன் முகர கட்டைக்கு லவ்வு கேக்குதானு கேலி பண்ணுவா.. அதான் நானே அவளை இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையாடினு சொல்லி கிண்டல் பண்ணிவிட்டேன்’’ – சொல்லிவிட்டு மீண்டும் கெக்கேபெக்கே என்று சிரிக்கவும் எதிரில் வந்து நின்றார் கலைவாணி.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’

“ஏய்ய்ய்… ஏய் நீ தூங்கலையாடி?’’ – வாய் உளற ஆரம்பித்ததும் எழுந்து நின்றார் ராஜேந்திரன்.

“எனக்கு வயசாகிடுச்சுனு சொன்னீங்க பாருங்க .. அத கூட மறந்துருவேன். ஆனா மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் போய் லவ்வர்ஸ் படம்னு பேசிட்டு இருக்கீங்களே… உங்களை எல்லாம்….’’

“எது… அந்தப் படத்துல கண்மணி அன்போடு பாட்டெல்லாம் வருதுனு நீதானடி சொன்னே… அப்ப அது லவ் படம் இல்லையா?’’ – ராஜேந்திரன் ஷாக்காகி கேட்கவும், துண்டிக்கப்பட்ட சீனுவின் அழைப்பு மீண்டும் வந்தது. போனை ஸ்பீக்கரில் போட்டார்.

“டேய் சீனு. அந்த குணா குகையை காட்டுற புதுப்படம் லவ் படம் இல்லையாடா?’’

“அதை சொல்றதுக்குள்ள தான் போன் கட்டாகிடுச்சே… அது நம்மளை மாதிரி நல்ல நண்பர்கள் பத்தின படம்டா. குணா குகைக்கு டூர் போலாம்னு தங்கச்சி என்னையும் ஃபேமிலியோடதான் வரச்சொல்லியிருக்கு. உன் முகரக் கட்டைக்கு லவ்ஸ் வேற. அப்டியே தங்கச்சி உன்ன கடத்திட்டுப் போய் `கண்மணி அன்போடு’னு பாட்டெல்லாம் படிக்கப் போகுது…’’ – சீனு சிரிப்பது ஹால் முழுக்க எதிரொலிக்க, இது கலைவாணியின் தருணம். பதிலுக்கு ராஜேந்திரனைப் போலவே கெக்கபெக்கேவென்று சிரித்து வைத்தார்.

ராஜேந்திரன் – கலைவாணி தம்பதி திருமணமான இந்த 30 ஆண்டுகளில் பார்க்காத சண்டைகள் இல்லை. எவ்வளவு நடந்தாலும் இதுவரை ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்ததுமில்லை.அதே நேரத்தில், இளம்வயதில் அவர்கள் எதிர்கொண்ட விளையாட்டுப் பேச்சுகள் இப்போது அவற்றின் எல்லையை குறைத்துக்கொண்டதை அவர்களும் அறிவார்கள்.

கிண்டல் என்பதன் அளவு இன்னொருவரை காயப்படுத்தாத வரை அதன் ஆயுள் குறைவுதான். ஆனால், அது கிண்டல் அல்ல வேண்டுமென்றே சொல்லப்பட்டதாக எதிர்த்தரப்பு புரிந்து கொள்ளும்படி அமைந்துவிட்டால், தன்னுடைய இணை தன்னை எவ்வளவு சமாதானம் செய்தாலும் அதை சமாதானப்படுத்துவது சற்று கடினம் தான்.

இந்தச் சம்பவத்தில், ஒருவேளை கலைவாணி நிஜமாகவே தூங்கி இருந்தாலோ, ராஜேந்திரன் சீனுவுக்குப் போன் செய்து உண்மையை தெரிந்து கொள்ளாமல் இருந்திருந்தாலோ கலைவாணிக்கு ஏற்பட்ட இந்த சிறிய மனவருத்தம் பெரிய சண்டையாகக் கூட மாறியிருக்கலாம். நல்வாய்ப்பாக அன்றைய நாளின் சூழல் அவர்களுக்கு சண்டை ஏற்படாமல் காப்பாற்றிவிட்டது.

முத்தம்

“ஆமா அந்தப் படம்தான் லவ்வர்ஸ் படம் இல்லையே… அப்பறம் எதுக்கு குணா குகைக்கு என்னை கூப்புடுறே? நீயும் சீனு வைஃப்பும் சேர்ந்து மொட்டை மாடியில வடாகம் போடுவீங்களாம். நானும் சீனுவும் குணா குகைக்குப் போகப் போறோமாம்’’ – சோபாவில் உட்கார்ந்திருந்த ராஜேந்திரன் மறுபடியும் ஒரு கெக்கபெக்கே.

அருகில் நின்றிருந்த கலைவாணி அவர் தலை மீது கைவைத்து அவரை தன்னருகே இழுத்து மார்பின் மீது சாய்த்துக் கொண்டார். ஒரு குழந்தையைப் போல் தன் மனைவியின் மார்பில் புதைந்தார் ராஜேந்திரன்.

கிரிக்கெட் அலைவரிசை இசை அலைவரிசைக்கு மாறியிருந்தது.

`உண்டான காயமிங்கு தன்னாலே ஆறிப்போன மாயமென்ன பொன்மானே…’

பாடலின் ஓசைக்கிடையில் மெதுவான குரலில் கேட்டார் ராஜேந்திரன்.

“உன் காயம் ஆறுச்சானு தெரியாது. ஆனா நீ போட்ட மசாலா டீ ஆறிடுச்சு. இன்னொரு கப் கிடைக்குமா?’’

வீடெங்கும் தேயிலை வாசம்!

– ரகசியங்கள் தொடரும்.

– அர்ச்சனா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.