மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த 2022-ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. பா.ஜ.க தான் சிவசேனாவை உடைத்தது என உத்தவ் தாக்கரே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இப்போது உத்தவ் தாக்கரே தனது கட்சியின் அடையாளமான சின்னத்தையே எதிரணியிடம் இழந்து நிற்கிறார். வாக்காளர்களிடம் புதிய சின்னத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர்.

சிவசேனாவை வரும் காலங்களில் பா.ஜ.க அழித்துவிடும் என்று கருதியும், முதல்வர் வேட்பாளர் தொடர்பான மோதலிலும் 2019-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றார். அவ்வாறு வந்ததற்கு உத்தவ் தாக்கரே கடுமையான இழப்பை சந்தித்து இருக்கிறார். தற்போது நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்திருக்கிறது. சிவசேனாவில் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஏக்நாத் ஷிண்டேயிடம் சென்றுவிட்ட நிலையில் கட்சிப்பணியாற்ற தலைவர்கள் இல்லாத நிலை உத்தவ் தாக்கரேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே தனக்கு இது போன்ற ஒரு துரோகத்தை செய்வார் என்று உத்தவ் தாக்கரே எதிர்பார்க்கவில்லை. எனவே ஷிண்டேயிக்கு தக்க பாடம் கற்பிக்கவேண்டும் என்ற வேகத்தில் உத்தவ் தாக்கரேயும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேயும் வேலை செய்து வருகின்றனர். சிவசேனாவின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் தொகுதிப்பங்கீடு கூட முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார். தனது கட்சியை பிளவுபடுத்திய பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியை ஒவ்வொரு இடத்திலும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு தனக்கு துரோகம் செய்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா வேட்பாளர்களை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்று தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேயின் சொந்த ஊரான தானே மற்றும் அவரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே போட்டியிடும் கல்யாண் தொகுதியில் உத்தவ் தாக்கரே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். கல்யாண் தொகுதிக்கு பா.ஜ.க வும் குறி வைத்துள்ளது. எனவே இன்னும் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. தானே தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் ராஜன் விச்சாரேயை மீண்டும் உத்தவ் தாக்கரே களத்தில் இறக்கி இருக்கிறார். உத்தவ் தாக்கரே எப்போதும், ஏக்நாத் ஷிண்டேயை முதுகில் குத்தியவர் என்றும், கட்சியை பிரிக்க கோடிகளை பா.ஜ.க விடம் வாங்கியவர் என்றும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயின் எம்.பி. ராகுல் ஷெவாலேயிடம் பேசிய போது, ”எங்களிடம் பால் தாக்கரேயின் வில் அம்பு சின்னம் இருக்கிறது. அதோடு பால்தாக்கரே கடைப்பிடித்து வந்த இந்துத்துவா கொள்கை மற்றும் பிரதமர் மோடி இருக்கிறார். மக்கள் எப்போதும் வளர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அனுதாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்” என்றார்.

சஞ்சய் ராவத்

இது குறித்து சிவசேனா(உத்தவ்) தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறுகையில், ”வரும் மக்களவை தேர்தலில் துரோகிகள் தோற்கடிக்கப்படுவார்கள். மக்களுக்கு உண்மையான சிவசேனா எது என்பது தெரியும். எங்களது சின்னம் ஏற்கனவே மக்களிடம் சென்றடைய ஆரம்பித்துவிட்டது. தேர்தலில் துரோகிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் அஜித் பவார் கணிகசமான எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் அசோக் சவான், பாபா சித்திக், மிலிந்த் தியோரா போன்ற சில முக்கிய தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கூட்டணி கட்சிகள் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளன.

கடைசி நேரத்தில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியும் கூட்டணி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது. இதனால் பட்டியலின மக்களின் வாக்குகள் கணிசமாக பிரியும் என்ற அச்சமும் உத்தவ் தாக்கரே தரப்பிடம் இருக்கிறது. இது அனைத்தையும் கடந்த இந்த தேர்தல் உத்தவ் தாக்கரே சாதிப்பாரா… பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.