ஐ.பி.எல் பயணத்தை சாம்பியன் பட்டத்தோடு ஆரம்பித்தது இரண்டே இரண்டு அணிகள்தான். ராஜஸ்தான் அணி 2008 சீசனில் அந்தச் சாதனையை செய்திருந்தது. குஜராத் அணி 2022 சீசனில் அந்தச் சாதனையை செய்திருந்தது.

ராஜஸ்தான் அணியால் தாங்கள் முதல் சீசனில் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த சீசன்களில் தக்கவைக்க முடியவில்லை. சீரான வெளிப்பாடு அந்த அணியிடம் இல்லை. குஜராத் கொஞ்சம் வித்தியாசமான அணி. அந்த அணி முதல் சீசனில் சாம்பியன். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். அவர்களின் மூன்றாவது சீசன் இது. இந்த முறை என்ன செய்யப்போகிறார்கள்?

Hardik Pandya

குஜராத் அணியின் யானை பலமாக வீற்றிருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ட்ரேடிங் முறையில் அள்ளிச் சென்றுவிட்டது. முதல் முறையாக கேப்டன் பதவியை ஏற்றிருந்த போதும் தன்னுடைய தனிப்பட்ட குணாதிசயங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு பக்குவமாக அணியை வழிநடத்தி வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். கேப்டன் என்பதைத் தாண்டி அவர் ஆல்ரவுண்டர். பேட்டிங்கில் தன்னுடைய ரோலை அப்படியே தலைகீழாக மாற்றி நம்பர் 4-5 இல் எல்லாம் களமிறங்கி சிறப்பாக ஆடியிருந்தார். பௌலிங்கிலும் தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்திருந்தார். எக்கச்சக்கமான பாக்ஸ்களை டிக் அடிக்கும் ஒரே ஆப்சனாக இருந்த ஹர்திக் இந்த சீசனில் அந்த அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உண்டாக்கியிருக்கிறது. ஹர்திக்கிற்குப் பதில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக்கப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் அந்த அணி சுப்மன் கில்லை வருங்காலத்திற்கான சாய்ஸாக பார்ப்பதாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் கில்லுக்குமே இது ஒரு பெரிய வாய்ப்பு. முன்னாள் சாம்பியனான ஒரு பெரிய அணியை முன் நின்று சில ஆண்டுகளுக்கு வழிநடத்தப்போகிறார். இந்திய அணியுமே இப்போது மாற்றத்துக்கு உள்ளாகும் சூழலில் இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் அணிக்குள் பெரிய மாற்றமே நிகழலாம். அதற்குள் இங்கே சில சீசன்களில் கில் வெற்றிகரமான கேப்டனாகச் செயல்படும்பட்சத்தில், இந்திய அணியின் கேப்டனுக்கான ரேஸிலுமே கில் இணையக்கூடும். ஆனால், கில்லின் முன் இருப்பது பெரிய சவால். அவர் பெரிய பெரிய திமிங்கலங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Shubman Gill

கடந்த சீசனில் ஒரு பேட்டராகத் தீரமிக்க படைவீரனைப் போல நின்று குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது கில்தான். 17 போட்டிகளில் ஆடி 890 ரன்களை அடித்திருந்தார். சராசரியாக ஒரு போட்டிக்கு 52 ரன்களை அடித்திருந்தார்.

இத்தனை வலுவான பேட்டர் இந்த முறை இரட்டை பொதியை சுமக்க வேண்டும். பவுண்டரி லைனில் நின்று ஆலோசனைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் பயிற்சியாளர் நெஹ்ராவிற்கு காது கொடுத்துக் கொண்டு சூழலுக்கேற்ற சரியான முடிவை எடுக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவுகளின் அவுட்புட் எப்படியாக இருந்தாலும் அது அவரின் பேட்டிங்கின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது. கேப்டன் என்பதாலயே கூடுதல் பொறுப்புடன் ஆடுகிறேன் என நினைத்துக் கொண்டு கூடுதல் சுமையையும் ஏற்றிக்கொள்ளக் கூடாது. கேப்டனாக கே.எல்.ராகுல் பல சமயங்களில் இப்படி செய்து சிக்கலில் சிக்கியிருக்கிறார். இதிலெல்லாம் கில் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை சாதாரண ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவர். இனி தடைகளைத் தாண்டி ஓட வேண்டும்.

குஜராத் ஒரு குட்டி தமிழ்நாடு அணி. சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர், ஷாரூக்கான் மற்றும் தமிழ்நாட்டிற்காக ஆடும் சந்தீப் வாரியர் என எல்லாரும் குஜராத்தில் பறக்கும் தென்னிந்திய பறவைகள்.

சாய் கிஷோர் ரஞ்சியில் 50+ விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதால் தனிப்பட்ட முறையில் ஒரு வீரராகவே நன்றாகவே முழுமையை நோக்கி நகர்ந்திருக்கிறார். சாய் சுதர்சன் கடந்த சீசனிலேயே கிடைத்த வாய்ப்புகளில் 362 ரன்களை 51 ஆவரேஜில் எடுத்திருந்தார். இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்களை எடுத்திருந்தார். நல்ல ஃபார்மில் இருக்கிறார். சாய் சுதர்சன் குஜராத்தின் ப்ளேயிங் லெவனில் முதல் சாய்ஸாக இல்லையென்றால் நஷ்டம் அவர்களுக்குதான்.

Sai Sudharsan | சாய் சுதர்சன்

விஜய் சங்கர் கட்டாயம் மிடில் ஆர்டரில் இடம்பெறுவார். ரஞ்சியில் நன்றாக ஆடியிருக்கிறார். அவ்வபோது சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும் ஒரு சீசன் முழுவதுக்குமான தாக்கத்தை விஜய் சங்கர் கொடுக்க மறுக்கிறார். அதை இந்த சீசனில் நிவர்த்தி செய்ய வேண்டும். ஷாரூக்கான் ஒரு ஃபினிஷர். வேறு எந்த அணியில் இருந்திருந்தாலும் அவர் முதல் சாய்ஸாக இருந்திருப்பார். ஆனால், இங்கே அதே ரோலை செய்ய ஏற்கெனவே ராகுல் திவேதியா இருக்கிறார். அவருடன் ஷாரூக்கானையும் ப்ளேயிங் லெவனில் எடுப்பார்களா எனும் விஷயத்தில் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சந்தீப் வாரியர் காயமடைந்திருக்கும் ஷமியை ரீப்ளேஸ் செய்கிறார். ஷமி கடந்த சீசனில் மட்டும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த சீசனில் அவரின் இடத்தை சந்தீப் வாரியர் அப்படியே நிரப்புவது அசாத்தியம். ஆனாலும் இவர் ஒரு நல்ல ஆப்சன்தான்.

எப்படித் தமிழ்நாட்டு வீரர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அதேமாதிரி ஆப்கன் வீரர்களும் அந்த அணியில் அதிகமாகவே இருக்கிறார்கள். ஹஸ்மத்துல்லா ஒமர்சாயை ஏலத்தில் எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் நன்றாக ஆடியிருக்கிறார். இதே குஜராத் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் சிறப்பாக ஆடி 97 ரன்களை அடித்திருந்தார். மிடில் ஆர்டரில் அணிக்கு பலம் சேர்ப்பார். ரஷீத் கான் பற்றி எந்த விளக்கமும் தேவை இல்லை. ஒரு சூப்பர் ஸ்டாராக இந்த முறையும் குஜராத் ரசிகர்களின் இதயங்களைக் குஷிப்படுத்தும் செயல்பாட்டைக் கொடுக்க வேண்டும். இடதுகை ஸ்பின்னரான நூர் அஹமதுவும் மெதுவான பிட்ச்களில் அணிக்குப் பலம் சேர்ப்பார்.

Rashid khan

டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட் போன்றோரும் அணியில் இருக்கிறார்கள். டேவிட் மில்லர் கட்டாயம் லெவனில் இருப்பார். மற்ற இருவரும் காம்பீனேஷனைப் பொறுத்து அணியில் இருப்பார்களா மாட்டார்களா என்பதை முடிவு செய்வார்கள். விக்கெட் கீப்பராக ஜார்க்கண்ட் வீரர் ராபின் மின்ஸை முயன்று பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

வேகப்பந்துவீச்சுதான் அந்த அணியில் பின்னடைவாக இருக்கிறது. கடந்த முறை ஷமி ஒரு பிரதான வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அவருடன் மோகித் சர்மா நன்றாக ஒத்துழைத்திருந்தார். இந்த முறை ஷமி இல்லை. மோகித் சர்மா பிரதான பௌலராக பௌலிங் யூனிட்டை வழிநடத்துபவராக இருப்பாரா என்பது சந்தேகமே.

Shami

உமேஷ் யாதவ்க்கும் அதே கதைதான். தர்ஷன் நலகண்டே, கார்த்திக் தியாகி போன்ற இளம் வீரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் எதிரணியை மிரட்டும் வகையிலான பௌலர்களாக இவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒத்தாசைக்கு ஒரு பெரிய ஓவர்சீஸ் பௌலரும் இல்லை. அணியின் பயிற்சியாளர் ஒரு பௌலர்தான். அவர் இந்த பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆன் பேப்பரில் குஜராத் எப்போதுமே வலுவான அணியாகத் தெரிந்ததில்லை. அவர்களிடம் பல ஓட்டைகள் இருக்கும். ஆனாலும் களத்தில் சாதித்து விடுவார்கள். அதுதான் அவர்களின் சிறப்பம்சம். இந்த முறையும் இந்த `குஜராத் மாடல்’ வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.