2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றதை மத்தியப் பிரதேச மாநிலம் பர்கான்பூரில் உள்ள மோகத் நகரில் சில இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும், அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து IPC பிரிவுகள் 120B (குற்றச் சதி) மற்றும் 153A (மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரண்டு சிறுவர்கள் உட்பட 18 இஸ்லாமியர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தது.

தற்கொலை செய்துகொண்ட ரூபாப் நவாப் மனைவி

இந்த கைது நடவடிக்கையின் போதே, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் 60 வயது தந்தை அதிர்ச்சியால் உயிரிழந்தார். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரூபாப் நவாப் (40) தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்டதால் மனமுடைந்து 2019-ம் ஆண்டு மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பான வழக்கு மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி தேவேஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும், இது காவல்துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் நீதிமன்றம் 17 பேரையும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ம் ஆண்டில் விடுவித்திருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாகத் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய வழக்கறிஞர் ஷோப் அகமது,“`கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்திய அரசுக்கு எதிராகச் சதி செய்து, பாகிஸ்தானை ஆதரித்து இனிப்புகளை விநியோகித்தனர். பட்டாசுகளை வெடித்தனர். அதனால், அந்த கிராமத்தில் அமைதியின்மை நிலவியது. மேலும், இந்திய நாட்டை அவமதித்து, நாட்டின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்’ என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பு சாட்சியான சுபாஷ் கோலி அளித்த புகாரின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக காவல்துறை விளக்கமளித்தது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி

ஆனால், உண்மை நிலவரம் வேறு… ஆனால், சுபாஷ் கோலி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில்,’ நான் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தபோது என் நண்பர் ஷாஹித் மன்சூரி உள்ளிட்ட சிலரை காவல்துறை கைது செய்ததை அறிந்தேன். உடனே நானும் காவல் நிலையத்திற்குச் சென்றேன். ஸ்டேஷன் இன்சார்ஜ் என்னை இரண்டு முறை கன்னத்தில் அறைந்தார். என் நண்பர் ஷாஹித்தை ஒரு அறையில் பூட்டி, அவரைத் தாக்கினார். என்னுடைய செல்போனிலிருந்து 100 எண்ணுக்கு அவரே அழைத்துக்கொண்டார்.

அடுத்த நாள், காவல்துறை என்னை மிரட்டி எழுத்துப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட வைத்தனர். அந்த ஆவணத்தைப் படிக்கவும் அனுமதிக்கவில்லை. என்னிடம் எந்த வாக்குமூலமும் வாங்கவில்லை’ என காட்சியளித்தார். மற்ற அரசுத் தரப்பு சாட்சிகளும்,`நாங்கள் யாரும் பட்டாசு வெடிப்பதையோ, இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புவதையோ நாங்கள் பார்க்கவில்லை. காவல்துறையிடம் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை’ என்றும் மறுத்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகப் புகார்தாரர் மற்றும் அரசு சாட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தீர்ப்பு

இந்த விசாரணைகளுக்குப் பிறகே நீதிபதி,`அரசுத் தரப்பு சாட்சிகள் வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. எனவே இந்த புகார் தொடர்பாகக் கைது செய்த அனைவரும் நிரபராதி என இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது’ என்று தீர்ப்பளித்தது” எனக் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அப்போது 16 வயதுடைய முபாரக் தத்வி, ஜுபைர் தத்வி என்ற இரண்டு சிறார்களும், சிறார் நீதிமன்றத்தால் 2022-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். பள்ளி சென்றுகொண்டிருந்த இருவரும் பள்ளிக்கு மீண்டும் திரும்பவில்லை. இந்தூரில் உள்ள கோயில் பராமரிப்பாளராக இருக்கும் ஜுபைர் தத்வி,”நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் இப்போது என் படிப்பையே விட்டுவிட்டேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறை

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தென்னிந்திய மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் விவசாயத் தொழிலாளர்கள். தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான இமாம் தத்வி,“நாங்கள் கைது செய்யப்பட்டபோது காவல் நிலையத்திற்குத் தேநீர் வழங்க வந்தவர் கூட எங்களைப் பயங்கரவாதிகள் என்று கூறி உதைத்தார். விசாரணையின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடவேண்டியிருந்தது.

அதனால், உள்ளூரிலேயே மிகக் குறைவான சம்பளத்துக்கு 10-12 மணி நேரம் வேலைபார்க்கக் கட்டாயப்படுத்தப்பட்டோம். எங்களிடம் சரியாகச் சாப்பிடவே பணம் இல்லை. இதில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாட இனிப்புகள் வாங்கினோம் என்கிறார்கள். எனக்கு அப்போது விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் கூட தெரியாது. ஆனால், அவர்களால் என் வாழ்க்கை அழிந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர் இம்ரான் ஷா (32),” தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதால் என் குழந்தைகள் உள்ளூர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

விடுதலை

என் குழந்தையும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நான் பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சிய பிறகு அனுமதி வழங்கப்பட்டது. நான் ஆந்திராவில் விவசாயக் கூலியாக வேலை பார்த்தேன். இப்போது எனக்கு ரூ.1.5 லட்சம் கடன் இருக்கிறது. நான் ஒவ்வொரு மாதமும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு நிறையப் பணம் செலவழித்தேன். இந்த வழக்கு பெரும் நிதிச்சுமையாக மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.