‘ஏக் கிலோ கிராம் மாத்ர உந்தீஸ் ரூபியே’
‘ஒக கிலோ இரவது தொம்மிதி ரூபாய்லு மாத்திரமே’
‘ஒந்து கிலோ இப்பத்தொம்பது ரூபாய்களு மாத்ரா’
‘மாத்ர ஏக் கிலோ கிராம் ஒகல் த்ரீஸ் ருபியா’
இப்படி இந்திய மொழிகள் அத்தனையிலும் ஓயாமல் கூவியபடியே இருக்கிறார்கள்- பாரதத்தைக் காத்து ரட்சித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் பாரத் அரிசியைப் பற்றி!
அரிசி விலையானது எகிறிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ‘ஒரு கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை’ என பிப்ரவரி மாதம் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ‘பாரத் அரிசியை’ அறிமுகப்படுத்தியது. ‘கடந்த ஓராண்டில் மட்டும் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விலை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உயரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவே இந்த ஏற்பாடு’ என்று இதற்கு விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.

Rice

5 கிலோ, 10 கிலோ!

சரி, இந்த அரிசி எங்கே… எப்போது விற்பனைக்கு வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பாரத் அரிசி விற்பனையின் தொடக்கப்புள்ளியாக வேளாண் கூட்டுறவு நிறுவனங்கள் (NAFED- National Agricultural Cooperative Marketing Federation of India Ltd), என்சிசிஎஃப் (NCCF-The National Cooperative Consumers’ Federation of India Ltd)  மற்றும்  கேந்திரிய பந்தர் (Kendriya Bhandar)   ஆகியவற்றில் 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசியானது 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளாக விற்கப்படும் அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாரத் அரிசி விற்பனைக்காக 100 நடமாடும் ஊர்திகளையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, ‘வாங்கிவிட்டீர்களா… பாரத் அரிசி. வாங்க மறந்துவிடாதீர்கள். மறந்தும் இருந்துவிடாதீர்கள்’ என்கிற ரேஞ்சுக்கு பாரத் அரிசி பையுடன் வாட்ஸப் ஃபார்வேர்ட்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன.

‘அந்தத் தெருவில் பாரத் அரிசி வேன் வந்திருக்கிறது. அங்குள்ள அத்தனை வீடுகளிலும் அதை வாங்கியுள்ளனர்’, ‘நடேசன் நகரில் வண்டி வந்து நிற்கிறதாம்… ஓடுங்க ஓடுங்க…’, ‘தி.நகர் வெங்கட்ராமன் தெரு உட்வார்ட் அப்பார்ட்மென்ட்ல வண்டி நிக்குது உடனே வரவும்’ (இப்படி ஒரு அப்பார்ட்மென்ட்டே இல்லை என்று விசாரித்து தெரிந்துகொண்டது தனிக்கதை) என்கிற ரேஞ்சுக்கு ஆளாளுக்கு பேச… என்னதான் நடக்கிறது என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.

அரிசி

29 ரூபாய் அரிசியைத் தேடி மக்கள் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். அது ஏதோ ஏழு கடல் தாண்டி ஒரு தீவுக்குள் விற்கப்படுகிறது என்கிற ரேஞ்சுக்குக் களைத்துதான் போயுள்ளனர்.  

சில இடங்களில் வழங்கப்பட்டதாக வாட்ஸப்பில் ஃபார்வேர்டு ஆன அரிசி பைகளில் இரண்டு போன் நம்பர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதிலிருந்த வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை (044-28292610) அழைத்தோம். அந்த எண் பயன்பாட்டில் இல்லை என்று பதில் கிடைத்தது.

சாம்பிள்தான் கொடுத்தாங்க!

அதே பையில் ‘மேனுபேக்சர்ட் அன்ட் பேக்ட்’ என்று குறிப்பிட்டு ஒரு தொலைபேசி எண் (044-2815 1984) கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு அழைத்தபோது, ”பாரத் அரிசிதானே… எத்தனை கிலோ வேணும்?” என்று எதிர்முனையில் கேட்கப்பட… மனம் குளிர்ந்துபோய், ”50 கிலோ வேணும்” என்றோம்.
”ஒரு சிப்பத்துக்கு 50 கிலோ பாக்கெட் 5 இருக்கும். எத்தனை சிப்பம் வேணும்?”
”அப்படியா… மூணு சிப்பம் கிடைக்குமா?”
”நாளைக்கு காலையில போன் பண்ணுங்க” என்று எதிர்முனை ‘டொக்’ ஆனது!
”ஆகா… மூணு மூட்டையாச்சே… மூணு மூட்டை” என்கிற ஆர்வத்தோடு, அதே எண்ணுக்கு அழைத்தோம்.
”என்ன நான் சொல்றது… 29 ரூபாய் அரிசிதானே… மூணு மூட்டைதானே… அது அது…” என்று இழுத்த எதிர்முனைக்குரல்… “மக்கள் வாங்கறாங்களா?னு பாக்க குறைஞ்ச அளவுல சாம்பிள் அரிசிதான் கொடுத்தாங்க. உங்களுக்கு அரிசி வேணும்னா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லி செல்போன் எண்ணை (98412 92092) கொடுத்தார். அந்த எண்ணுக்கு ஓயாமல் அழைத்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு சமயம், பிஸியாக இருக்கிறது. மறுசமயம், மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. முயற்சியும் தொடர்கிறது. 

Rice

இப்ப வருமோ… எப்ப வருமோ?

அண்ணா நகர் 15- வது தெருவிலிருக்கும் கேந்திரிய பந்தர் எனும் அங்காடியில் (மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் இருக்கும் கடை) விற்கப்படுவதாகச் சொல்லப்படவே, அங்கு நேரடியாகச் சென்று விசாரித்தோம். ”அது வந்து… மொபைல் வண்டியில எப்பவாச்சும் கொண்டு வருவாங்க. ஒரு ரெண்டு மணி நேரம் இருந்துட்டு போயிடுவாங்க. மத்தபடி எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. திரும்ப என்னிக்கு  வருவாங்கனு சொல்ல முடியாது” என்று பதில் கிடைத்தது.  

ஸ்டாக் தீர்ந்துருச்சு!

இதற்கிடையில், பாரத் அரிசி மொபைல் வேன் டிரைவர் எண்’ என்று சொல்லி, இன்னொரு செல்போன் எண் (7358240472) கிடைத்தது. அதையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று உடனே அழைத்தோம். 

“பாரத் அரிசியா… ஸ்டாக் தீர்ந்துருச்சு. குறைவாதான் எங்களுக்கு கிடைச்சுது. திரும்ப வந்துச்சுன்னா கால் பண்றோம்“ என்று பதில் வந்தது.
‘’மறக்காம கூப்பிடுங்கண்ணா… மூணு மூட்டை மனசுல வெச்சுக்கோங்க’’ என்று சொல்லி, இந்த ‘மகாபாரத்’ கதைக்கு, தற்போதைக்கு கால்புள்ளி வைக்கிறோம். அதேசமயம், இந்த விஷயத்தில் மனதில் ஏறிவிட்ட ‘பாரத்’தையும் இங்கே இறக்கி வைக்கிறோம். அரிசி மூட்டையத்தான் நினச்சபடி இறக்க முடியல. இதையாவது இறக்கி வெப்போம்!

ஷேம்… ஷேம்… பப்பி ஷேம்!

அரிசி விலை எகிடுதகிடாக இருக்கும் சூழலில் 29 ரூபாய் பாரத் அரிசி என்பது வரப்பிரசாதமே! ஆனால், அங்கே கிடைக்கிறது… இங்கே கிடைக்கிறது என்கிற குரல்கள்தான் கேட்கின்றன. எங்கெங்கே கிடைக்கும் என்று அரசாங்கமே  தெளிவாக ஓர் அறிவிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும். அப்படி வெளியிட்டிருந்தால், இத்தனை பேருக்கு போன் போட்டு, கடைசியில் அரிசி கிடைக்காமல் வெறும் வாயை மெல்லும் நிலை ஏற்பட்டிருக்காது.

ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் அறுவடை செய்வதற்கான அறிவிப்பு என்றால், அதுவே பா.ஜ.க-வுக்கு எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

 ”பா.ஜ.க அரசு செய்யும் இந்த நற்செயல் பிடிக்காமல், தி.மு.க ஏதோ தில்லாலங்கடி வேலை செய்யுது. அதனாலதான்  இங்க 29 அரிசி சரியா கிடைக்கல” என்றொரு பட்சி போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றது. ம்… அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, ஆளுநர் ஆர்.என். ரவி என்று பற்பல ஆயுதங்களை வைத்துக் கொண்டிருந்தும்கூட, தி.மு.க இப்படியொரு வேலையைச் செய்கிறது என்றால்… ஷேம்… ஷேம்… பப்பி ஷேம் பா.ஜ.க!  

பா.ஜ.க!

‘இல்லையே… அரிசி எல்லா இடங்களிலும் கிடைக்கிறது’ என்று யாராவது 29 ரூபாய் அரிசியை வாங்கியிருந்தால், வாங்கிய வழிமுறைகளுடன் இங்கே பதிவிடுங்கள். கிடைக்கும் விலாசம்… வண்டி நம்பர் அதையெல்லாம் மறந்துவிட வேண்டாம்.

சிக்கினால், நாங்க ஒரு மூணு மூட்டை எடுத்துக்கிறோம். அடுத்த தெருவுல சொல்லிவிட்டா… அவங்க ஒரு ஐம்பது மூட்டை எடுத்துக்கட்டும்! என்ன நாஞ்சொல்றது?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.