ஒருவழியாக நம் அரசாங்கத்தின் இரக்கப் பார்வை – வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்களின் மீது விழுந்துவிட்டதுபோல் தெரிகிறது. டெஸ்லா போன்ற வெளிநாட்டுத் தயாரிப்பு கார் நிறுவனங்களைப் பார்த்து ‛இதற்குத்தானா ஆசைப்பட்டாய் டெஸ்லா’ என்பதுபோல் ஒரு பாலிசியை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 

ஆம், வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு Import Duty எனப்படும் இறக்குமதி வரியை 15% வரை குறைத்து அறிவித்திருக்கிறது நம் மத்திய அரசின் ஹெவி வெஹிக்கிள் இண்டஸ்ட்ரி.  இது Vinfast போன்ற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும்தான். நிச்சயம் இது டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். 

‛‛இந்தியாவை ஒரு மையப்புள்ளியாக வைத்து, குறைந்த விலை கார்களைத் தயாரித்து உள்ளூர் மார்க்கெட்டுக்கும், ஏற்றுமதிக்கும் பயன்படுத்தலாம் என்று இருந்தோம்!’’ என்று இது சம்பந்தமாக பிரதமர் மோடியையும், தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்திக்கக்கூடச் செய்திருந்தார் எலான் மஸ்க். 

சந்தித்தபிறகு, ‛இந்தியாவில் கால் பதிப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை போல’ என்று பெருமூச்சு விட்டிருந்தார். கார்களுக்கான இறக்குமதி வரி விஷயத்தில் நம் அரசு கறார் காட்டியதைத்தான் அவர் இப்படிச் சோகப் பெருமூச்சோடு பதிவிட்டிருந்தார். 

Elon Musk

அதைத் தொடர்ந்து இப்போது 15% வரை இறக்குமதி வரியைக் குறைத்திருப்பது நல்ல விஷயம்தானே! அதுவும் 5 ஆண்டுகளுக்குத்தான். ஆனால், அதற்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறது நம் அரசு. அதாவது, நம் உள்நாட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தால்தான் இந்த 15% இறக்குமதி வரி கிடைக்கும் என்பதுதான் அது. 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது நம் ஊருக்கு சுமார் 4,150 கோடி ரூபாய் அளவில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும்.

அது வாகன உற்பத்தித் தொழிற்சாலையாக இருக்கலாம்; சார்ஜிங் கட்டமைப்பாக இருக்கலாம்; பேட்டரி தயாரிப்பு ப்ளான்ட்டாக இருக்கலாம். அது மட்டுமல்லாமல், முதலீடு செய்து தொழிற்சாலை ஆரம்பித்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

அப்போதுதான் நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்; வணிகமும் செழிப்படையும் என்பதற்கான ஐடியாவுடன் இந்தக் கண்டிஷனைச் சொல்லியிருக்கிறது. 

இப்போதைக்கு நீங்கள் ஒரு வெளிநாட்டு காரை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 35,000 டாலர் எனும் பட்சத்தில் (சுமார் 29.2 லட்சம்) நீங்கள் அதை இந்தியாவில் கொண்டு வருவதற்கு சுமார் 35% இறக்குமதி வரி மட்டும் செலுத்த வேண்டும். இதுவே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களைக் கொண்டு வந்து ஓட்ட வேண்டும் என்றால், 100% வரி மட்டும் எக்ஸ்ட்ரா கட்ட வேண்டும். அதாவது, அப்படியே காரின் விலையை விட டபுள் மடங்காகும். உதாரணத்துக்கு, ஒரு ஹம்மர் H2 காரின் விலை அமெரிக்காவில் 75 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் இந்தியாவில் ஓட்ட வேண்டும் என்றால், சுமார் 1.5 கோடிக்கு மேல் ஆகும். ஆனால், இதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்போதுதான் உள்நாட்டுத் தயாரிப்புகளின் விற்பனை படுஜோராக நடக்கும் என்பதற்குத்தான் இந்த அதிகப்படியான வரி என்று சொல்லப்பட்டது. 

Tesla Model 3

டெஸ்லாவை எடுத்துக் கொண்டோமானால், அதில் விலை குறைந்த காராக Model 3 எனும் கார் இருக்கிறது. இதன் ஆரம்ப விலை அமெரிக்காவில் சுமார் 39,000 டாலர். இந்திய மதிப்பில் சுமார் 32.25 லட்சம். 100% வரியோடு அதை நீங்கள் இங்கே ஓட்ட வேண்டுமென்றால் சுமார் ரூ.64.5 லட்சம் ஆகும். இது தவிர ஜிஎஸ்டி மற்றும் மற்ற வரிகள் தனிக் கணக்கு. 

இந்தப் புதுத் திட்டத்தின்படி என்றால், அதே டெஸ்லா மாடல் 3 காரின் விலை – இந்தியாவில் சுமார் 37 லட்ச ரூபாய்தான் வரும் – (5% GST வரி, சாலை வரி, மற்ற வரிகள் தனி). வெளிநாட்டு சொகுசு கார் வாங்க நினைக்கும் உள்ளூர் தனவான்களுக்கு இது நல்ல விஷயம்தான்! 

Vinfast Electriic Cars

லேட்டஸ்ட்டாக, Vinfast என்றொரு வியட்நாம் கம்பெனி ஒன்று, நம் தமிழ்நாட்டு அரசுடன் ரூ.2 பில்லியன் டாலர் அளவு.. சுமார் 16,000 கோடிக்கு முதலீடு செய்து, எலெக்ட்ரிக் ஆலை அமைக்க ஒப்பந்தம் போட்டிருந்தது. தூத்துக்குடியில் இதற்கான விழாவும் சிறப்பாக நடந்தது.

ஐபோன்களுக்கு எலெக்ட்ரானிக் சிப் தயாரிக்கும் Foxconn நிறுவனம்கூட, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியைத் தமிழ்நாட்டில் தொடங்கும் என்றும் தெரிகிறது. ஏற்கெனவே BYD என்றொரு சீன நிறுவனம், நம் ஊரில் காரை விற்பனை செய்யவே தொடங்கிவிட்டது.  மேற்கண்ட திட்டம் மூலம், டெஸ்லாவைப் போலவே வின்ஃபாஸ்ட் நிறுவனமும் வெளிநாடுகளில் விற்பனை செய்து கொண்டிருக்கும் தங்கள் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் ஒரு செம வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

Vinfast

டெஸ்லா, வின்ஃபாஸ்ட், ஃபாக்ஸ்கான், BYD என வெளியூர் ஆட்டக்காரங்க வருவது ஹேப்பிதான். அதேநேரம் – மஹிந்திரா, டாடா என்று நம் உள்ளூர் ஆட்டக்காரங்களையும் கைவிட்டுடக் கூடாது அரசே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.