“இந்த சீசனில் ஒரு நியூ ரோலை செய்யப்போகிறேன்” என தோனி சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“கான்வேக்கு காயம் ஏற்பட்டு விட்டதால் தோனியே ஓப்பனிங் இறங்கப்போகிறார்” என கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ரசிகர்கள் தங்களின் யூகங்களைப் பகிர்ந்து வந்தனர். கடைசியில் பார்த்தால் அது ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக தோனி செய்த பதிவென தெரியவந்தது. இதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடுவோம். தோனி இந்த சீசனில் எந்த ரோலை எடுத்துக் கொண்டு களமிறங்குவார் என்பது பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

தோனி

ஐ.பி.எல்-ஐ பொறுத்தவரைக்கும் பேட்டராக தோனியின் ஆகச்சிறந்த சீசன் 2018 சீசன்தான். இரண்டு வருடத் தடைக்குப் பிறகு சென்னை கம்பேக் கொடுத்த அந்த சீசனில் தோனி 455 ரன்களை 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். பல போட்டிகளை மிகச்சிறப்பாக நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து வென்று கொடுத்தார். அதற்கடுத்த 2019 சீசனிலுமே தோனி 416 ரன்களை எடுத்திருந்தார். இந்த சீசன்களுக்குப் பிறகு எல்லா சீசன்களிலுமே தோனி சுமாராகத்தான் ஆடியிருந்தார்.

2020 சீசனில் 200 ரன்கள், 2021 சீசனில் 114 ரன்கள், 2022 சீசனில் 232 ரன்கள் என்றே எடுத்திருந்தார். 2020 சீசனில் சென்னை அணி கடுமையாகத் திணறியிருந்தது. தோனியும் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் திணறியிருந்தார்.

அதுவரை நடுவரிசையில் களமிறங்கி வந்த தோனி, அந்த சீசனுக்குப் பிறகு தன்னுடைய பேட்டிங் ஆர்டரை இன்னும் கீழிறக்கிக் கொண்டார். கடந்த சீசனில் முழுக்க முழுக்க பேட்டிங் ஆர்டரில் தன்னுடைய முக்கியத்துவத்தை தோனி குறைத்துக் கொண்டார். நம்பர் 7, நம்பர் 8 என கீழ்வரிசையில் களமிறங்க தொடங்கினார். பெரும்பாலும் கடைசி ஓவரில்தான் பேட்டிங் செய்யவே வந்தார். பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் பந்துகளை எதிர்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் உள்ளே வர வேண்டும். பேட்டைச் சுழற்றி சிக்ஸர் அடிக்க வேண்டும். இது மட்டும்தான் தோனியின் திட்டமாக இருந்தது. இது நல்ல பலனையும் கொடுத்திருந்தது.

தோனி |Dhoni

சீசன் முழுக்கவும் சேர்த்து 104 ரன்கள்தான் அடித்திருந்தார். ஆனால், 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். இதுதான் ஹைலைட்! கடைசி ஓவரை குறிவைத்துதான் பயிற்சியில் அதிகமாக ஹார்ட் ஹிட்டிங் ஷாட்களை மட்டுமே ஆடி வந்தார். கூடவே ரேம்ப் ஷாட்களையும் ஆடி பயிற்சி எடுத்து வைத்திருந்தார்.

ரேம்ப் ஷாட்டையெல்லாம் தோனி பெரிதாக ஆடவேமாட்டார். ஆனாலும் கடைசி ஒரு சில பந்துகளை மட்டும்தான் ஆடப்போகிறோம் எனும்போது இந்த ஷாட்டுக்கான தேவை ஏற்படும் என்றே அதையெல்லாம் பயிற்சி செய்து வைத்திருந்தார். கடைசி ஓவர் + விக்கெட் கீப்பிங் என்பதுதான் தோனி கடந்த சீசனில் எடுத்துக்கொண்ட ரோலாக இருந்தது. கடந்த சீசனின் கடைசியிலேயே தோனியின் முட்டி பயங்கரமாக அடி வாங்கியிருந்தது. அந்த சீசன் முடிந்தவுடனேயே முட்டியில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார்.

இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதுதான். முன்னர் போலவே மிடில் ஆர்டரிலோ, பினிஷராகவோ தோனி களமிறங்கினால், அதிகப்படியாக ஓடியே ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். அது அவரின் கால்களுக்குக் கூடுதல் பிரச்னைக்கே வழிவகுக்கும். எனவேதான் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் பணியை துபே போன்றவர்களிடம் கொடுத்துவிட்டு தோனி டெயில் எண்டராக களமிறங்குகிறார்.

தோனி

உடல்நிலையைத் தாண்டி, அணியில் தன்னுடைய முக்கியத்துவத்தை மெதுமெதுவாக குறைத்துக் கொண்டு இளம் வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிறைவாக ஓய்வு பெறுவதுதான் தோனியின் எண்ணமாக இருக்கும். ஆக, தோனி ஓப்பனிங்கிலோ மிடில் ஆர்டரிலோ இறங்க வாய்ப்பே இல்லை. கடந்த சீசனைப் போலவே கடைசி ஓவர் + விக்கெட் கீப்பிங் என்பதுதான் தோனி எடுத்துக்கொள்ளப்போகும் பணியாக இருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.