கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், கண்ணூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். எனவே, காங்கிரஸ் பொறுப்பு தலைவராக யூ.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளரான எம்.எம்.ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எம்.ஹசன் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கேரள மாநிலத்தில் தேர்தல் கமிஷன் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நிறைய நிர்வாகிகளுக்கு சிரமமாக உள்ளது. போலிங் ஏஜென்ட்டுகள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானவருக்கு வெள்ளிக்கிழமை என்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாக்களிக்கச் செல்வதிலும் சிரமம் உள்ளது. வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால், தேர்தலை மற்றொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது சம்பந்தமாக கேரள மாநில காங்கிரஸ் சார்பில் நானும், எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசனும் சேர்ந்து தலைமை தேர்தல் கமிஷனருக்கு மெயிலில் கடிதம் அனுப்பி உள்ளோம். கேரளாவில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களான விஷூ, (சித்திரை விஷூ) ஈஸ்டர், ரம்ஜான் ஆகிய நாள்களில் தேர்தல் வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வாக்குப்பதிவு வைப்பது மக்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும். எனவே வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவை மாற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

இந்திய தேர்தல் ஆணையம்

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளாவில் நடந்த போராட்டத்தின்போது, சுமார் 835 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இன்னும் 502 வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. பெரிய அளவில் குற்றங்களைக்கொண்ட வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகளை ரத்து செய்வதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பல வழக்குகளை வாபஸ் வாங்குவதற்காக அரசு சார்பில் கோர்ட்டில் என்.ஓ.சி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தேர்தலை மனதில்வைத்தே செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரிய குற்றங்களைக் கொண்ட வழக்குகள் என்றால் என்னவென்று விளக்கம் இல்லை.

கேரளா மாநில காங்கிரஸ் பொறுப்பு தலைவர் எம்.எம்.ஹசன்

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சாலைமறியல் உள்ளிட்ட குற்றங்களைத் தவிர, மோடி மற்றும் அமித் ஷாவின் உருவபொம்மைகளை எரித்தார்கள். முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரிக்கவில்லை. மோடி, அமித் ஷா உருவபொம்மைகளை எரித்தது பெரிய குற்றம் என கருதி அந்த வழக்குகளை மட்டும் வாபஸ் பெறாமல் இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பினராயி விஜயன்

விழிஞ்ஞம் துறைமுக திட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதாக அரசு தீர்மானித்தது. அதிலும் பெரிய குற்றமுள்ள வழக்குகள் அல்லாத பிற வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்கள். அதில் பிஷப் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெறாமல், மற்றவர்கள் மீதான வழக்குகளை மட்டும் வாபஸ் பெற்றதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அரசு அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

கேரளாவில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்த ஏற்கெனவே முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.