திருமண சந்தோஷங்களில் முக்கியமானது, ஆபரணங்கள் ஷாப்பிங் அனுபவம். அவற்றை வாங்கும்போதும், பராமரிப்பின்போதும் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம், முத்து மற்றும் கல்வைத்த நகைகளின் பராமரிப்பு பற்றியும் அதன் தரத்தை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்…

தங்க நகை

தங்கம்…

* நகை வாங்கும் முன்னர், அதில் ஹால் மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ் (BIS – Bureau of Indian Standards), தங்க நகைகளுக்கு வழங்கும் ‘ஹால் மார்க்’ முத்திரையில் கீழ்க்காணும் அம்சங்களின் அடிப்படையில் அதன் தரம் உறுதிசெய்யப்படுகிறது.

1. தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.

2. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கிய ஹால் மார்க் சென்டரின் முத்திரை.

3. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்தும், 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்தும், 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்தும்… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் வரிசை நகர்ந்துகொண்டே வரும்).

4. நகை விற்பனையாளரின் முத்திரை.

தங்க நகை

* தங்க நகைகளை வைக்கும் வெல்வெட் பெட்டிகளில் இருக்கிற பசையில், மயில்துத்தம் போன்ற கெமிக்கல் இருந்தால் அது தங்கத்துடன் ஏதாவது வேதிவினை புரியலாம். இப்போது பல நகைக்கடைகளில் பிளாஸ்டிக் நகைப் பெட்டியில் காட்டன் துணிக்குள் நகைகளை வைத்துத் தருகிறார்கள். அதையே பின்பற்றலாம்.

* நகைகளை குளோரின் கலந்த தண்ணீரிலும், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் தண்ணீரிலும் சுத்தம் செய்யவே கூடாது. அதேபோல், சுத்தம் செய்வதற்கு முன் சோப் வாட்டரில் நகைகளை ஊறவைக்கக் கூடாது.

வெள்ளி…

* வெள்ளி நகைகளை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, பிறகு காட்டன் துணியால் துடைக்கலாம். வெள்ளி நகைகளை காட்டன் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பாக்ஸில் வையுங்கள். வெள்ளிக்கும் நோ வெல்வெட் பாக்ஸ்.

* கல், மண் இல்லாத சுத்தமான விபூதியால் வெள்ளிப் பொருள்களைச் சுத்தம் செய்யலாம். சுத்தமில்லாத விபூதி, வெள்ளிப் பொருள்களின் மேல் கீறல்களை ஏற்படுத்தலாம்.

வெள்ளி கொலுசு

* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைத்தால் சீக்கிரம் கறுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் வீடுகளில் இரும்பு பீரோதான் இருக்கிறது என்பதால், காட்டன் துணியில் சுற்றி, மரப்பெட்டியில் வைத்து, இரும்பு பீரோவில் வைத்துவிடலாம்.

* தரமான வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரையைப் பார்த்து வாங்குங்கள்.

வைரம்…

* வைரத்தையும் பிளாஸ்டிக் பாக்ஸில்தான் வைக்க வேண்டும். வெல்வெட் பாக்ஸில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், பூஞ்சை வந்து வைரத்தின் நிறமே மாறலாம். அப்படி நிறம் மாறினால் வைரத்தின் தரமே குறைந்துவிடலாம்… கவனம்.

* வைரத்தில் ஓப்பனிங் செட், குளோஸிங் செட் என இரண்டு வகைகள் இருக்கின்றன. ஓப்பனிங் செட்டில் வைரக்கல்லுக்குப் பின்னால் முழுதாக மூடப்பட்டிருக்காது. இதனால், சீக்கிரம் அழுக்காகி விடும். மூக்குத்தி, கம்மல் என இந்த வகை வைர நகைகளை வீட்டில் எப்போதும் அணிந்திருப்பவர்கள், அவற்றை வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்துவிடுங்கள். குளோசிங் செட் என்றால், நகையின் பின்னால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இந்த வகை நகைகளில் 5 முதல் 10 வருடங்களுக்குள் எண்ணெய் இறங்கிவிடும். அப்போது, நகையில் இருக்கிற வைரங்களை எடுத்துவிட்டு, வேறு நகையில் பதித்துத் தருவார்கள் (கல்வைத்த நகைகளையும் இந்த முறையில்தான் பராமரிக்க வேண்டும்).

வைரம்

* வைரம் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருந்தால் அது முதல் தர வைரம். இளமஞ்சள் நிறத்தில் இருந்தால் இரண்டாம் தர வைரம்.

* வைரத்தை தோஷம் பார்த்து வாங்க வேண்டும் என்பார்கள். அப்படியென்றால் என்ன தெரியுமா? வைரத்தில் வெற்றுக் கண்களுக்கு தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய கார்பன் துணுக்குகள் இருக்கும். இதைத்தான் தோஷம் என்பார்கள். தோஷமற்ற வைரம் வாங்க வேண்டுமென்றால் V V S1, V V S2 வைர நகைகள் வேண்டும் எனக் கேட்டு வாங்குங்கள்.

பிளாட்டினம்…

* தங்கத்துக்கு 916 (91.6%) எப்படியோ, அப்படியே பிளாட்டினத்துக்கு 950 (95%). மீதம் 5 சதவிகிதத்துக்கு கோபால்ட் பெலினியம் சேர்ப்பார்கள்.

* பிளாட்டின நகைகளை தங்கத்துடன் சேர்த்து அணிந்தால் கீறல் விழும்.

* பிளாட்டின நகைகள் வாங்கும்போது தரப்படும் தரச் சான்றிதழில், நீங்கள் வாங்கிய நகையின் அடையாள எண் ஒன்று இருக்கும். அதே எண் நீங்கள் வாங்கிய நகையிலும் இருக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் வாங்கிய பிளாட்டினம் நகையின் எண் 515 என்று வைத்துக்கொள்வோம். இதே எண்ணில் வேறு பிளாட்டின நகையே கிடைக்காது.

பிளாட்டினம்!

முத்து…

* முத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யக் கூடாது. தோலுரிந்துவிடும். முத்துக்குக் குளிர்ந்த நீர்தான் சரி. மற்றபடி, மற்ற நகைகளைப் போலவே நோ வெல்வெட் பாக்ஸ்.

* விலை குறைவான முத்துகள் அளவில் சிறியதாகவும், ஒரே வடிவத்திலும் இருக்கும். விலை அதிகமான முத்துகள் அளவில் பெரியதாகவும், விதவிதமான வடிவங்களிலும் இருக்கும்.

– ஆ.சாந்தி கணேஷ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.