கேரள மாநிலத்தில், 5 வயது சிறுவனிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, 13 வயது சிறுவன்மீது கேரள போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் 342 (முறையற்ற சிறைவைப்பு), 377 (இயற்கைக்கு மாறான பாலியல் குற்றம்) மற்றும் POCSO சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 13 வயது சிறுவன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “குற்றம்சாட்டப்பட்டவர் 13 வயது சிறுவன். இத்தகைய குற்றங்களுக்காக ஒரு மைனர்மீது வழக்கு தொடர முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர் மைனர் என்பதாலும், இது போன்ற குற்றங்களைச் செய்ய அவருக்கு எந்தக் குற்ற உள்நோக்கமும் இருக்க முடியாது என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதிரான விசாரணை சட்டவிரோதமானது என அறிவித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

போக்சோ சட்டம்

வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஜி.அஜித்குமார், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (POCSO) மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (Juvenile Justice (Care and Protection of Children) Act 2015) ஆகியவற்றின் விதிகளை ஆய்வு செய்து, மைனர்களும் குற்றவாளியாக இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், குற்றம்சாட்டப்பட்ட குழந்தையை சிறார் நீதிச் சட்டத்தின்படி மட்டுமே கையாள முடியும் என்பதால், இவ்வழக்கை சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “மேற்கூறிய POCSO சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ஒரு குழந்தை பாலியல் குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவராக இருக்கும்பட்சத்தில், அவரை சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. அவரை சிறார் நீதிச் சட்டத்தின்படி மட்டுமே கையாள முடியும் என்றிருந்தாலும், POCSO சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு குற்றத்தை செய்ததாக கருதப்படும், சட்டத்துடன் முரண்பட்ட ஒரு குழந்தைக்கு எதிராக POCSO சட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

மேலும், விசாரணை அமைப்பு இறுதி அறிக்கையை தாக்கல் செய்து, உரிய விசாரணைக்குப் பிறகு , மனுதாரரான 13 வயது சிறுவன் குற்றம் செய்துள்ளார் எனக் கண்டறியப்பட்டால், சிறார் நீதி வாரியம், சிறார் நீதிச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ளும்.

கேரள உயர் நீதிமன்றம்

விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட குழந்தையின் நலனும் கவனத்தில் கொள்ளப்பட்டு, பாதுகாக்கப்படும். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமானது, ஒரு குழந்தையை குற்றவாளியாக்குவது அல்ல, சட்டத்துடன் முரண்பட்ட குழந்தையினை சீர்திருத்தம் செய்து, மீண்டும் சமூகத்துடன் நல்ல முறையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே ஆகும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறும், குற்றம்சாட்டப்பட்ட குழந்தையை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.