தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பங்கீடு முடித்து, தேர்தல் பணிகளை தொடங்கவுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 சீட்டுகளை ஒடுக்கீடு செய்யப்பட்டது.

சிபிஎம்

ஏற்கெனவே சிட்டிங் எம்.பி-க்களாக உள்ள தொகுதிகளே ஒதுக்கப்படும் என்றிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதிக்கு சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தில் 2 முக்கிய அமைச்சர்கள் இருப்பதால், எப்படியும் தி.மு.க-வுக்கு சீட் கிடைக்கும் என கடந்த மாதமே கட்சியினர் சுவர் விளம்பரம், திண்ணை பிரசாரம் என தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருந்தனர். கடந்த எம்.பி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வேலுச்சாமி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றும், மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும்… திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க-வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி

இதற்கிடையே திண்டுக்கல் தொகுதியில் மிகவும் அறியப்பட்ட நபரான சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. மேலும் மாவட்ட 2 தி.மு.க அமைச்சர்கள் இருப்பதால், எளிதில் ஜெயிக்கலாம் என்ற நிலை இருப்பதால், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், சம்பத் உள்ளிட்டோரும் சீட் பெற விருப்பம் தெரிவித்ததாக, பேச்சுகள் அடிபட்டன.

இந்த நிலையில் சென்னையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதில் திண்டுக்கல் எம்.பி தொகுதிக்கு, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்டு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சச்சிதானந்தம்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் கிராமம், கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (53). இவருக்கு எஸ்.கவிதா என்ற மனைவியும், வைசாலி, மிருணாளினி ஆகிய மகள்கள் உள்ளனர். பி.எஸ்.சி பட்டதாரியான இவர், 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கங்களில் இருந்தார். பிறகு திண்டுக்கல் நகர தலைவர், மாவட்டச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், மாநில துணைச் செயலாளராக இருந்துள்ளார். தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக 26 வயதில் தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து 2 முறை தலைவராக இருந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

பாலபாரதி

இவரின் தேர்வு குறித்து மூத்த கட்சியினரிடம் கேட்டபோது, “அகில இந்திய அளவில் சி.பி.எம் கட்சியில் 3 முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த வகையில்தான் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் அவரைத் தவிர கட்சியில் அறியப்பட்ட நபர்கள் யாரும் இல்லை. இதனால் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள பிற பகுதியைச் சேர்ந்த பலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டாலும்கூட, திண்டுக்கல் தொகுதியை நன்கு அறிந்தவர், உள்ளூர் நபரே வேட்பாளராக இருக்க வேண்டும் என முடிவெடுத்து, மாவட்டச் செயலாளரான சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்டார்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.