இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோயில் நிர்வாகப் பிரச்னையின் காரணமாக, வயதைக் காரணம் காட்டி கோயில் வளாகத்திலுள்ள மரங்களுக்குத் திருமணம் செய்வதற்கு தடை கோரிய மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மரங்கள்

கரூர் மாவட்டம், புகளூர் அருகே பஞ்சமாதேவி புதூரிலுள்ள கோயிலுள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, ராமகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “அரச மரத்தை ஆணாகவும், வேப்ப மரத்தை பெண்ணாகவும் கருதுகின்றனர். அரசமரத்தை விட வேப்ப மரம் வயது அதிகமானது, அதனால் இந்த திருமணம் நடைபெறக் கூடாது என்றும் மரங்களுக்கு திருமணம் நடைபெறுகின்ற நாள், நல்ல நாள் இல்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

மரங்களுக்கு திருமணம் செய்வது புனிதமானதாக கருதுகிறேன். இதோடு தொடர்புள்ள பக்தி மற்றும் மதத்தை மறந்துவிடுவோம். மரங்கள் இயற்கையின் ஒரு அங்கம். மரங்கள் இல்லாவிட்டால் ஒரு நொடி கூட நம்மால் வாழ முடியாது. பீட்டர் வோல்பென் என்பவர் மரங்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை, மரங்களின் உணர்வுகள், மரங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது குறித்து நூல் ழுதியுள்ளார். அதில் மரங்களுக்கிடையேயான காதல் மற்றும் இனச்சேர்க்கை குறித்து தனி அத்தியாயம் உள்ளது.

ஜி.ஆர்.சுவாமிநாதன்

மரங்களுக்கான திருமணத்தை அவைகளின் வயது வித்தியாசத்தை காரணம் காட்டி தடுக்க முயல்வதை ஏற்க முடியாது. வயது வித்தியாச அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிப்பது காலவாதியான ஆணாதிக்க அணுகுமுறை. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அவரைவிட 6 வயது மூத்தவர்.

மரங்களின் திருமண நாள் நல்ல நாளில்லை என்கிறார். நீதிமன்றம் எல்லா விஷயத்திலும் தலையிட முடியாது. தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மதுரை உயர் நீதிமன்றம்

தகராறுகளை தீர்த்து வைப்பது மட்டுமே நீதிமன்றங்களின் கடமை. எல்லா சர்ச்சைகளிலும் தலையிட முடியாது, தீர்வு காணப்படுபவை மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

கோயில் நிர்வாக பிரச்னையில் வருவாய்த்துறை சமாதானக் கூட்டங்களில் தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். இரண்டு அறக்கட்டளைகளுக்கு இடையேயான கோயில் நிர்வாக ரீதியான பிரச்னையை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணவும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.