உச்ச நீதிமன்றம் கடந்த மாதம், தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டத்தைச் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. அதோடு, தேர்தல் பத்திரங்களின் அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-க்குள் எஸ்.பி.ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை மார்ச் 13-க்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் – எஸ்.பி.ஐ

ஆனால், நான்கு மாத காலம் எஸ்.பி.ஐ அவகாசம் கேட்க, `மார்ச் 12-க்குள் மொத்த தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டது. அதன்படி மார்ச் 12-ம் தேதி மாலை தேர்தல் பத்திர தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ அளித்த தேர்தல் பத்திர தரவுகளை, தேர்தல் ஆணையம் இரண்டு பட்டியலாகத் தனது இணையதளப் பக்கத்தில் 14-ம் தேதி வெளியிட்டது.

அதில், ஒரு பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள்/தனிநபர் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று தரவுகள் இருக்கின்றன. மற்றொரு பட்டியலில், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றன என்று தரவுகள் இருக்கின்றன. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றன எனத் தரவுகள் இல்லை. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் `ஏன் தேர்தல் பத்திர எண்களை வெளியிடவில்லை.

அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பின்படி, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர், வாங்கிய/பெறப்பட்ட தேதி உட்பட, தேர்தல் பத்திரங்கள் மற்றும் மீட்டெடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். அதன்படி இன்று தேர்தல் ஆணையம் எஸ்.பி.ஐ வழங்கிய ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது. அதில் இருக்கும் புதிய தரவுகளின் பட்டியல்…

நன்கொடையாளர்களின் அடையாளத்தை வெளியிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளில் ஒன்றான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடி பெற்றுள்ளது.

அதில் சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியும், மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் ரூ.105 கோடியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.14 கோடியும், சன் டிவி ரூ.10 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க ரூ.6.5 கோடி நன்கொடையாக பெற்றிருக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.5 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியிருக்கிறது. லக்‌ஷ்மி மிஷின் நிறுவனம் ரூ.1 கோடியும், கோபால் சீனிவாசன் என்ற தனி நபர் ரூ.5 லட்சமும் வழங்கியிருக்கின்றனர்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மொத்தம் ரூ.6,986.5 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றிருக்கிறது. இதில் அதிகத் தொகையாக ரூ.2,555 கோடியை 2019-20-ல் பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.1,334.35 கோடியை பெற்றிருக்கிறது.

ஒடிசாவின் பிஜேடி கட்சி ரூ.944.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பெற்றிருக்கிறது.

பிரதமர் மோடி

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.442.8 கோடியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ரூ.181.35 கோடியும் பெற்றிருக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றிருக்கிறது.

தெலங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ் கட்சி, ரூ.1,322 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ14.05 கோடி, பெற்றிருக்கிறது.

சீதாராம் யெச்சூரி

பஞ்சாப் மாநிலத்தின் சிரோன்மணி அகாலிதளம் ரூ.7.26 கோடியும், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் பெற்றிருக்கின்றன.

சீதாராம் யெச்சூரி தலைமையிலான சி.பி.ஐ(எம்), அஸாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM , மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிதியையும் பெறவில்லை என்பதும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.