தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில், வேன் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி கடந்த 5 நாட்களாகக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கட்சிகளுள் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அசோக்ராஜிடம் பேசினோம். அவர் நம்மிடம் பேசுகையில், “சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 37). வேன் ஓட்டுனரான முருகன், ஆன்மிக பயணமாக அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களைப் பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வேனில் அழைத்துச்சென்றுள்ளார். அவர், சங்கரன்கோவில் நகர் பிரதான சாலையில் வந்தபோது நெருக்கடி காரணமாக அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.

மக்கள்..

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வேன் ஓட்டுநர் முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முருகனால், வேன் ஓட்ட முடியவில்லை. எனவே வேனிலிருந்த பயணிகளை இறக்கிவிட்டு, மற்றொரு ஓட்டுநர் மூலமாக சங்கரன்கோவில் நகரக் காவல்நிலையத்திற்கு முருகனை, விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குத் தொடர்ச்சியாக, முருகன் மயக்க நிலையிலிருந்ததால் பதற்றமடைந்த போலீஸார், அருகே‌ உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு முருகனைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து சத்தமில்லாமல், அவரின் உடலை வேனுக்கு எடுத்துச்சென்ற போலீஸார், வேனுக்குள் கிடத்தியபடி முருகனின் உடலைப் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் விசாரணைக்காக முருகனை போலீஸ் அழைத்துச்சென்ற தகவலறிந்து காவல் நிலையம் வந்த அவரின் உறவினர்கள், வேனில் அவர் இறந்துகிடப்பதை கண்டு ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து, முருகனின் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முருகனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சங்கரன்கோவில் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடிய, விடியப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்‌.

அசோக்ராஜ்
முருகன்

இதில், முருகனைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக முருகனின் உறவினர் சங்கர்குமார்(30) கொடுத்த புகாரின் பேரில், முருகனைத் தாக்கியதாக அடையாளம் தெரியாத 3 போலீஸார் மீது சங்கரன்கோவில் நகரக் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முருகனின் உடலும் உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தநிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட முருகனின் உடலைப் பெற்றுச் செல்லுமாறு போலீஸ் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்படுகிறது. முருகனைத் தாக்கி அவரின் இறப்புக்குக் காரணமான போலீஸ் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காமல் முருகனின் உடலை வாங்கி இறுதிச்சடங்கு செய்யும் எண்ணம் அவரின் உறவினர்களுக்கு இல்லை.

பேரணி

உயிரிழந்த வேன் ஓட்டுநர் முருகனுக்கு, மீனா என்கிற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். ஆகவே அந்த குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த ஒரே நபரை இழந்து நிற்கும் அந்த குடும்பத்திற்கு உரிய நீதியை அரசு தரவேண்டும். இந்த விஷயத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், முருகனின் இறப்புக்குக் காரணமான போலீஸாரை கைது செய்வதோடு அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும், முருகன் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50 கிராம மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் புதிய தமிழகம், நாம் தமிழர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளும் களத்தில் உள்ளன.

மக்கள்..

ஆனால், கடந்த ஐந்து நாட்களாக போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் பொருட்டு செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசும் காவல் துறையும் மெத்தனம் காட்டுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்று 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தன் எழுச்சியாக சங்கரன்கோவில் தேரடி திடல் முன்பு திரண்டு பாதிக்கப்பட்ட முருகனின் குடும்பத்திற்கு ஆதரவாகப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போராட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வணிகர்களும் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு நல்கினர்” எனக் கூறினார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, “வேன் ஓட்டுநர் முருகனின் இறப்பு குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தி வருகிறது. முருகனின் உடற்கூறு ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றபின் அதன் அடிப்படையில் அவரின் இறப்புக்கான காரணம் குறித்து வெளிப்படைத்தன்மையாக விசாரணை நடத்திப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.