கடந்த ஆண்டு அஜர்பைஜானில் நடந்த உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 2-வது இடம் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார் பிரக்ஞானந்தா.

‘உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் சென்ற இளம் வீரர்’… ‘விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்த இரண்டாவது இந்திய வீரர்’ போன்ற சிறப்புகளும் பிரக்ஞானந்தாவுக்குக் கிடைத்தன. அப்போது, பிரக்ஞானந்தாவை ஊக்கப்படுத்தும் விதமாக கார் பரிசளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

அறிவித்தபடியே, தற்போது பிரக்ஞானந்தாவிற்கு எக்ஸ்.யு.வி 400 எலக்ட்ரிக் காரைப் பரிசளித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். உற்சாகத்தில் இருக்கும் பிரக்ஞானந்தாவின் அம்மா நாகலட்சுமியிடம் வாழ்த்துகள் கூறிப் பேசினேன்.

நாகலட்சுமி

“ஆனந்த் மஹிந்திரா சார், காரை கிஃப்டா கொடுத்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க வீட்ல காரே கிடையாது. எங்க போனாலும் சைக்கிள், ஸ்கூட்டர்லதான் போவோம். அதனால, காரெல்லாம் எங்க குடும்பத்துக்குக் கனவாத்தான் இருந்துச்சு. பிரக்கோட அப்பா மாற்றுத்திறனாளி. சின்ன வயசிலேயே போலியோ பாதிச்சதால, அவரால சரியா நடக்க முடியாது. அவ்வளவு சிரமத்திலும் குடும்பத்துக்காக அப்படி உழைச்சார். அவர் உழைக்கலேன்னா இன்னைக்கு பிரக்ஞானந்தாவையும் வைஷாலியையும் விளையாட்டு வீரர்களா பார்த்திருக்கவே முடியாது. அவங்களோட வெற்றியில் அவரோட பங்கு முக்கியமானது.

அவரோட ஆபிஸ் முன்னாடி தி.நகர்ல இருந்துச்சு. இப்போ, பாரீஸ்ல மாத்திட்டாங்க. வீட்டிலிருந்து 25 கிலோமீட்டார் த்ரீ வீலர்லதான் ஆபிஸ் போய்ட்டு வந்திட்டிருந்தார். அவ்வளவு தூரம் போய்ட்டு வர்றது அவருக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதனால போன வருஷம்தான் அவருக்காகவே லோன் போட்டு ஒரு கார் வாங்கினோம். இப்போ, அந்தக் கார்லதான் ஆபிஸ் போய்ட்டு வந்திட்டிருக்கார். மாதந்தோறும் அந்த காருக்கு இ.எம்.ஐ கட்டிட்டுதான் இருக்கோம். ஆனா, ஆனந்த் மஹிந்திரா சார் கொடுத்தது கிஃப்ட். காரை வாங்கினவுடனேயே பசங்களோட ஸ்பெயினுக்கு வந்துட்டேன். பயிற்சியில இருக்காங்க…” என்றவரிடம், “ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இத்தனை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தத் தாமதம் ஏன்?” என்று கேட்டோம்.

எலக்ட்ரிக் காருடன் பிரக்ஞானந்தா குடும்பம்

“கார் லேட்டா கொடுக்க ஆனந்த் மஹிந்திரா சார் காரணம் இல்லை. பிரக்ஞானந்தாவோட தேதிதான் கிடைக்கல. தொடர்ந்து பயிற்சிகளிலும் போட்டிகளிலும் வெளிநாட்டிலும் இருப்பதால அவனால இந்தியா வரமுடியல. அவன் இப்போதான் வந்தான். அவன் தேதி கிடைச்சவுடனேயே மஹிந்திரா நிறுவனம் காரைக் கொடுத்துடுச்சு. காரை நாங்க தாமதமா வாங்கினாலும் அட்வான்ஸ்டா, அந்தக் காரை ரெடி பண்ணிக் கொடுத்திருக்காங்க. காரைப் பார்க்கும்போது, ரொம்ப அழகா இருக்கு. காரோட விலை 20 லட்சமாம். அந்தக் கார்லதான் குடும்பத்தோட வீட்டுக்கு வந்தோம். இதெல்லாம் என் மகனோட திறமைக்குக் கிடைச்சிருக்குன்னு நினைக்கும்போது ஒரு அம்மாவா பெருமையா இருக்கு” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.