மும்பை தாராவி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அங்குள்ள குடிசைகள்தான். அக்குடிசைகளை இடித்துவிட்டு அதில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டும் பணியை மாநில அரசு அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. தாராவியையொட்டி இருக்கும் சயான் கோலிவாடாவிலும் பெரும்பாலும் குடிசைகள்தான் அதிகமாக இருக்கிறது. தாராவி சயான் கோலிவாடா பகுதியில் இருந்து முதன்முறையாக உமேஷ் டில்லிராவ் (26) என்ற வாலிபர், ராணுவ அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடிசை வீட்டில் வசித்து வரும் உமேஷ், சென்னை ராணுவ பயிற்சி அகாடமியில் படித்து முடித்து அதிகாரியாகப் பதவியேற்றுள்ளார். பள்ளிப் பருவத்திலேயே என்.சி.சி-யில் இடம் பெற்றிருந்த உமேஷிற்கு ராணுவ அதிகாரியாக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் அக்கனவு அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. 2013-ம் ஆண்டு உமேஷ் தந்தை பக்கவாதம் ஏற்பட்டு, பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

உமேஷ்

அதன் பிறகு குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு உமேஷ் தலையில் விழுந்தது. படிப்பையும் கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். உள்ளூர் இன்ட்டர்நெட் சென்ட்டரில் பகுதி நேரமாக வேலை செய்வது மற்றும் கிடைத்த வேலைகளை செய்து அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு படிக்கவும் செய்தார். அவர் படிப்பில் சிறந்து விளங்கியதால் டாடா ட்ரஸ்ட், மகாலட்சுமி கோயில் ட்ரஸ்ட் போன்றவற்றின் கல்வி உதவித்தொகை மூலம் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

குடும்பத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு டி.சி.எஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். ஆனாலும் ராணுவ அதிகாரியாக வேண்டும் என்ற கனவை மட்டும் கைவிடவில்லை. ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக 13 முறை முயற்சி செய்த பிறகுதான், அதில் அவரால் தேர்ச்சி பெற முடிந்தது. தேர்ச்சி பெற்றவுடன் வேலையை உதறிவிட்டு, ராணுவ அதிகாரி பயிற்சிக்கு சென்றுவிட்டார். இப்போது சென்னையில் 11 மாதங்கள் பயிற்சி எடுத்து ராணுவ அதிகாரியாக மாறி இருக்கிறார்.

இந்திய ராணுவம்

இது குறித்து உமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது சாதனை எனது பகுதியில் உள்ள மற்ற இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன். இளைஞர்கள் வாழ்க்கையில் எதாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்தால் கடினமாக உழையுங்கள். உங்களால் சாதிக்க முடியும். அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொள்ளுங்கள். தேர்வில் தோல்வி அடைந்தால், தொடர்ந்து பயிற்சி எடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ அதிகாரியாக பதவியேற்கும் விழாவிற்கு தனது குடும்பத்தினர் அனைவரையும் உமேஷ் அழைத்துச் சென்றிருந்தார்.

வாழ்த்துகள் உமேஷ்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.