ஓய்வுக் கால திட்டமிடலில் மூன்று முறையான முதலீட்டு திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை:

  • முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP)

  • முறையான பரிமாற்ற திட்டம் (Systematic Transfer Plan – STP)

  • முறையாகப் பணம் எடுக்கும் திட்டம் (Systematic Withdrawal Plan- SWP)

ஆகும். இவை பற்றி விரிவாக பார்ப்போம்.

முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP)

இது ஓய்வுக் காலத்துக்கு தேவையான தொகையை சேர்க்க உதவும் முக்கியமான முதலீட்டு முறை ஆகும். வங்கி, தபால் அலுவலகங்களில் உள்ள தொடர் வைப்பு திட்டமான ஆர்.டி. போன்றதுதான் இந்த எஸ்.ஐ.பியும். ஆர்.டியில் முதலீடு செய்யப்படும் பணம் அப்படியே ரூபாயாக வரவு வைக்கப்படும்; வருமானம் என்பது நிலையான வட்டியாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டுத் தொகை மற்றும் என்.ஏ.வி மதிப்புக்கு ஏற்ப முதலீட்டாளரின் கணக்கில் யூனிட்களாக வரவு வைக்கப்படும்.

எஸ்.ஐ.பி முறையில் அதிகபட்சம் 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். ஓய்வுக் காலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 12%க்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

முறையான பரிமாற்ற திட்டம் (Systematic Transfer Plan – STP)

கையில் மொத்தமாக லட்சக் கணக்கில் பணம் இருக்கிறது. இந்தப் பணத்தை ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்ய வேண்டும். இந்த  நிலையில் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது. மொத்தமாக ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் சந்தை திடீரென அதிகமாக இறங்கி விட்டால், குறுகிய காலத்தில் அதிக இழப்பாகி விடும். மேலும், இந்த இழப்பிலிருந்து மீண்டு லாபத்துக்கு வர அதிக காலம் எடுக்க கூடும். இது போன்ற நிகழ்வை தடுக்க, மொத்த தொகையை ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றுக்கு முதலீட்டை குறிப்பிட்ட இடையில் மாற்றுவதுதான் முறையான பரிமாற்ற திட்டமாகும்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை, ஓய்வுக் காலம் நெருங்கும் போது பாதுகாப்பான முதலீடாக மாற்ற எஸ்.டி.பி முறையை பயன்படுத்த வேண்டும். அதாவது, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலிருந்து கடன் சார்ந்த திட்டங்கள் அல்லது ஹைபிரீட் ஃபண்ட்களுக்கு முதலீட்டை மாற்ற உதவும் முதலீட்டு முறையாக இது உள்ளது.இந்த முதலீட்டு முறையின் முக்கிய நோக்கம் பங்குச் சந்தை சார்ந்த திட்ட ரிஸ்க்கை குறைப்பதாகும்.

முறையாகப் பணம் எடுக்கும் திட்டம்: 

பணி ஓய்வுக் காலத்தின் போது, மாதம் தோறும் செலவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து பணம் எடுக்கும் முறை, முறையாகப் பணம் எடுக்கும் திட்டம் ஆகும். 

கட்டுரையாளர்: கே.கிருபாகரன்,
நிறுவனர், www.moneykriya.com

 ஒரு காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme  – MIS) ஒன்று இருந்தது. அதுதான் இப்போது எஸ்.டபிள்யூ.பி என்பதாக மாறி உள்ளது. எஸ்.டபிள்யூ.பி முறையில் தேவைக்கு பணம் எடுக்கும் போது, வரிக்கு பிந்தைய நிலையில் அதிக தொகை கிடைக்கும்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஓராண்டுக்கு பிறகு யூனிட்களை விற்று பணமாக்கும் போது வருமான வரி கட்ட வேண்டி இருக்காது அல்லது குறைவாக கட்ட வேண்டி இருக்கும். அதாவது, ஈக்விட்டி ஃபண்களில் ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரிக் கட்டினால் போதும்.

 அடுத்த வாரம், ‘’ ஓய்வுக் கால தொகுப்பு நிதி : எத்தனை ஆண்டுகளில் செலவாகி விடும்?” என்பதை பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.