ரஞ்சி கோப்பை போட்டியின் அரையிறுதியில் மும்பைக்கு எதிரான போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது.

7 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதி வரை முன்னேறிய தமிழக அணியின் கனவு நொறுங்கிப் போயிருக்கிறது. இந்த அரையிறுதிப் போட்டி மும்பையின் BKC மைதானத்தில் நடந்திருந்தது. பரோடாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலை எடுத்ததன் காரணமாக மும்பை அணி அரையிறுதிக்கு வந்திருந்தது. அதேமாதிரி தமிழக அணி சௌராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்ததன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. இரண்டு அணிகளும் நல்ல ஃபார்மில் இருந்ததால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை அணி

ஆனால், அரையிறுதியில் மும்பை அணியின் கையே ஓங்கியிருந்தது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 146 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணியுமே தடுமாறியது. 106 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தமிழக அணி சார்பில் கேப்டன் சாய் கிஷோர் மிகச்சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் எடுத்திருந்தார். ஆனால், திடீரென ஷர்துல் மட்டையை வேகமாக சுழற்றி மும்பை அணியை சரிவிலிருந்து மீட்க தொடங்கினார். இவரை தமிழக அணியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கேமியோ இன்னிங்ஸ் ஆடுவார் என நினைக்கையில் நின்று சதமடித்து மும்பையை கரை சேர்த்தார். மும்பை அணி 232 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாம் இன்னிங்ஸில் தமிழக அணிக்கு பெரிய சவால் காத்திருந்தது. ஆனால், இங்கேயும் அவர்களால் சோபிக்க முடியவில்லை.

தமிழக அணி

162 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகினர். மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி இதற்கு முன்பு 41 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதி வரை முன்னேறிய தமிழக அணி சாதித்து 36 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கையில் மோசமாகத் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.