கோவை ‘பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி’யில் நடைபெற்ற சிறுவாணி இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு, புலவர் செந்தலை கவுதமன் சிறப்புரையாற்றினார்.

பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் பெயர் காரணத்தில் தொடங்கியவர் அடுத்தடுத்து கோவையின் இலக்கிய வரலாறுகளை அடுக்க ஆரம்பித்தார். அவரின் உரையில் “ஆங்கிலேயர்கள், ‘இந்த கோவை மாநகரில், மக்கள் வாழ்வதற்கான தகுதிகள் இல்லை’ என்றார்கள். ‘இங்கு இருக்கின்ற நீர், நோயை உண்டாக்கும்’ என்றார்கள். ‘மக்களே, போய் விடாதீர்கள் கோவைக்கு’ என்று ஆங்கிலேயர்கள் அறிவுறுத்தினார்கள். ஆங்கிலேயர் இரண்டு புத்தகங்களில் அதைப்பற்றி எழுதியுள்ளார்கள்.‌ அப்பேர்பட்ட புகழ்மிக்க ஊர் கோவை. அதை மாற்றியமைக்கக் கொண்டு வரப்பட்டது, சிறுவாணி. அதை, மக்கள் வாழும் ஊராக மாற்றியது, சிறுவாணி. அதனால் தான் இந்த இலக்கியத் திருவிழாவிற்குச் சிறுவாணி இலக்கியத் திருவிழா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

புலவர் செந்தலை கவுதமன்

சிறுவாணி என்பது 40 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகுதான் கோவைக்கு வந்தது. சிறுவாணி, அட்டப்பாடியில் உருவாகி சத்தியமங்கலத்திற்கு அருகே கலக்கிறது. அன்றைய காலத்தில் அட்டப்பாடி கோவையில்தான் இருந்தது.”

“அட்டப்பாடியில் இருக்கும் சிறுவாணியைக் கோவைக்குக் கொண்டு வர வேண்டுமென்றால், மலையைக் குடைய வேண்டும் என்றார்கள். அதற்கானத் திட்டத்தைக் கொடுத்தவர், செ.பா.நரசிம்மலு நாயுடு. 1889ம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சி, 1979இல் ரத்தினசபாபதி முதலியாரால் நிறைவேற்றப்பட்டது. அவர் தண்ணீர் வரி என்றொரு வரி போட்டார். இருக்கிற வரியையே கொடுக்க முடியவில்லை, இதில் இன்னொரு வரியா?’ என்றார்கள். ‘முடிந்தவர் கொடுங்கள் முடியாதவர்களுக்கு நான் கொடுக்கிறேன்’ என்றார். அவர்தான் ரத்தினசபாபதி முதலியார். அந்த நன்றியுணர்விற்காக எழுப்பிய ஊர் தான், ரத்தினசபாபதிபுரம் என்ற ஆர்.எஸ் புரம். 40 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவாணி வந்தது. சிறுவாணி வந்ததால் கோவை வாழ்ந்தது.” என சிறுவாணியால் கோவை உயிர்பெற்ற வரலாற்றைப் பேசியவர், கோவையின் இலக்கிய வரலாற்றுக்குள் நுழைந்தார்.

“கோவையை வாழ வைத்தவை, மூன்று இலக்கிய விழாக்கள். மூன்றுமே நடந்தது ஒரே ஆண்டில் தான். 1950இல் கோவையில் ‘கொங்கு நாட்டுப் புலவர் மாநாடு’ நடந்தது. அரசின் சார்பில், அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி மாநாடு இரண்டு நாள் நடந்தது. ரத்தினசபாபதிபுரத்தில், சாஸ்திரி மைதானத்தில் ‘முத்தமிழ் மாநாடு’ நடைபெற்றது. மூன்றுமே தமிழ் சார்ந்த மாநாடுகள். இந்த இலக்கிய மாநாடுகளால் கோவை விழித்தது, எழுந்தது!

பாரதியார்

எழுத்தாளர் மாநாட்டில், பாரதியாருடைய எழுத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது கோவை. சுப்ரமணிய பாரதியாருக்குப் ‘பாரதியார்’ என்ற பட்டத்தைக் வழங்கியது கோவை. அவினாசியைச் சேர்ந்தவர், சிவஞான யோகி. அவர் வழங்கிய பட்டம் தான் ‘பாரதி’. சுப்ரமணிய பாரதியோடு இன்னொரு பாரதியும் இருந்தார். அவர் சோமசுந்தர பாரதி.‌ இரண்டு பாரதிக்கும் பட்டம் வழங்கியது கோவை. பாரதியாருடைய பாடல்கள், திரைப்படங்களில் இடம்பெறக்கூடாது என்றிருந்தக் காலகட்டத்தில்தான், கோவையில் உருவாக்கிய முதல் திரைப்படமான, ‘மேனகா’வில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றன. இப்படி, பாரதிக்கும் கோவைக்கும் உள்ள தொடர்புகள் ஏராளமானவை.

1908 ஆம் ஆண்டு கோவை சிறையில் இருந்தார் வ.உ.சிதம்பரனார். அந்த சிறையில்தான், ஜேம்ஸ் ஆலனுடைய ஆங்கில நூலை ‘மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தார் வ.உ.சி. அப்போது தன்னைப் பார்க்க வந்தவரிடம் பாரதிக்குக் கடிதம் கொடுத்து அனுப்பினார். ‘சென்னை மாகாணத்தைவிட்டு உடனடியாக வெளியேறச் சொல்லுங்கள், பிரிட்டிஷ் இந்தியாவைவிட்டு வெளியேறச் சொல்லுங்கள்’ என பாரதிக்கு வ.உ.சி. கோவையில் இருந்துதான் செய்தி அனுப்பினார். பாரதியார் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து, பிரெஞ்சு இந்தியா செல்வதற்குக் காரணமாக இருந்தது இந்தக் கோவை.

கோவையில்தான், வண்ணச்சரப தண்டபாணி சுவாமிகள் எழுதிய, ‘குருபர தத்துவம்’ என்ற முதல் ‘தன் வரலாறு’ நூல் வெளியானது. முதல் மொழிபெயர்ப்பு காப்பியம் உருவாகியதும் இந்தக் கோவையில்தான். ‘பிருகத்கதா’ என்ற வடமொழி நூலை ‘பெருங்கதை’ என்று கொங்குவேளிர் மொழிபெயர்த்தார். இந்தக் கோவை மாநகரில் மூன்று சங்கங்கள் இருந்தன. ஒன்று, ‘கோவில்பாளையம் தமிழ்ச் சங்கம்’. இன்னொன்று, ‘கோவை தமிழ்ச் சங்கம்’. அதை உருவாக்கியவர்கள் கோவை கிழாரும், சி. கே.சுப்பிரமணிய முதலியாரும். இது எல்லாவற்றுக்கும் முன்னோடி ‘விஜயமங்களம் தமிழ்ச் சங்கம்’. இந்தச் சங்கத்தில் தான் சீவகசிந்தாமணி அரங்கேற்றப்பட்டது.

சீவகசிந்தாமணியை எழுதிய திருத்தக்கத் தேவர் வாழ்ந்த ஊர் தாராபுரம். கொங்கு நாட்டிற்கு உரிய ஊர். நன்னூலை எழுதியது பவணந்தி என்று நமக்குத் தெரியும். அவர் வாழ்ந்தது எந்த ஊர் என்று தெரியுமா? அவர் வாழ்ந்த ஊர், சனகை. சனகை தான், விஜயமங்களத்திற்கு அருகே உள்ள இன்றைய சீனாபுரம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இருந்த ஊர், விஜயமங்களத்திற்கு அருகே இருக்கிற நிரம்பை. தமிழிலே முதன்முதலில் ஒரு வட்டாரப் புதினம் வந்ததும் கொங்குநாட்டில்தான். இப்படி எல்லா வகையிலும் பெருமையுடையது இந்தக் கோவை.

கலைஞர்

திரைபடத்திற்கும் கோவை தான். கோவையில் தான் கலைஞர் தன்னுடைய முதல் திரைப்படமான ‘அபிமன்யூ’வை எழுதினார். மேலும், ‘ராஜகுமாரி’யும் எழுதப்பட்டது கோவையில் தான். அவைதான் கருணாநிதியை, கலைஞர் கருணாநிதி ஆக்கின. அண்ணாவின், ‘ஓர் இரவு’ நாடகம் திரைப்படமாக்கப்பட்டதும் கோவையில் தான். கண்ணதாசன் கவிஞர் ஆனதும் கோவையில் தான்.

‘எனது நினைவுகள்’ என்ற தன் வரலாற்றை எழுதியவர் ஐயா முத்து. ஊர் வரலாற்றோடு இணைந்ததுதான், மக்கள் வரலாறு. அது சமூக வரலாற்றின் ஒரு பகுதி என்று எழுதியிருப்பார். ‘பித்தன்’ என்ற பெயரில் மாணவர் இதழை உருவாக்கியவர் பெரியசாமி தூரன். தமிழில் மாணவர்களுக்காக வந்த முதல் இதழ் இது. பெரியசாமி தூரனால் உருவாக்கப்பட்டதுதான் கலைக் களஞ்சியம். அந்தக் கலைக்களஞ்சியம் தான், இந்திய மொழிகளில் முதன்முறையாக உருவான என்சைக்ளோபீடியா. நூலகத்துறைக்கு என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்ததும் கோவை தான். பாரதியின் உரைநடைகளைப் ‘பாரதி தமிழ்’ என்ற நூலில் திரட்டியவர் பெ.தூரன். இவரைத் திரட்ட வைத்தவர் தமிழ்த் தென்றல் திரு.விக. இப்படி கோவை மாநகருடன் இணைந்திருக்கிற இலக்கியப் பெருமைகள் ஏராளம்.”

இங்கிருந்து வந்தவைதான் பிங்கல நிகண்டும், உரிச் சொல் நிகண்டும். இவற்றையெல்லாம் பதிப்பித்தவர், கோவை அரசுக் கல்லூரியின் பேராசிரியர் பொள்ளாச்சி சிவன்பிள்ளை. உ.வே.சா.விற்குச் சுவடிகளைக் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. இங்ஙனம், கோவை மாநகரோடு இணைந்த இலக்கியப் பெருமைகள் ஏராளம்” என்று கொங்கு நாட்டின் நீண்ட நெடிய இலக்கிய வரலாற்றை மடமடவென அடுக்கி வைத்தார் புலவர் செந்தலை கவுதமன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.