பிரதமர் மோடி, “ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கலும், இரட்டை வழி ரயில் பாதைகளுக்கான பணிகளும் தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையேயான இணைப்பை சிறப்பாக்கும். இதனால் திருநெல்வேலி நாகர்கோவில் பகுதியின் மீது படியும் தாக்கமும் அழுத்தமும் குறையும்.

தமிழ்நாட்டின் சாலை வழி கட்டமைப்பை மேலும் நவீனமயமாக்க 4500 கோடி ரூபாய் செலவில் நான்கு பெரிய திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். கடல் வாணிபத் திட்டங்கள், சாலைவழி திட்டங்கள் ரயில் பாதை திட்டங்கள் இன்று ஒன்றாக தொடங்கப்பட்டிருக்கின்றன. இது தமிழ்நாடு வளர்ச்சியின் வேகத்தைக் கூட்டும்.” என்றார்.

“தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையேயிருக்கும் நல்லுறவு மேலும் அதிகரிக்கும்” – பிரதமர் மோடி

பிரதமர் மோடி, “ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பாரதத்தின் முதல் மக்கள் பயணப் படகு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. காசியின் கங்கை ஆற்றின் மீதும் இந்த பயண படகு வெகு விரைவில் தனது பயணத்தை தொடங்கவிருக்கிறது. இது நடக்கும்போது தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையேயிருக்கும் நல்லுறவு மேலும் அதிகரிக்கும் . இது என்னுடைய தொகுதி காசி மக்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் கொடையாகும். இந்த திட்டங்களால் தூத்துக்குடி தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சியின் முக்கிய மையமாக மாறும்.” – என்றார்.

பிரதமர் மோடி, “நேரடியாக முந்தையை UPA 2அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை வைக்க விரும்புகிறேன். இங்கே இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் நலத்திட்டங்கள் பல தசாப்தங்களாக வெறும் கோரிக்கைகளாகவே இருந்து வந்தன. இன்று பிரதம சேவகனாக உங்களின் கனவுகளை நனவாக்க இங்கு வந்திருக்கிறேன்.” என்றார்.

`2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்திருந்தேன்; இன்று நிறைவேறியிருக்கிறது!’

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இன்று தேசம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்திருந்த போது, வ.உ.சி துறைமுகத்தை கப்பல் போக்குவரத்தின் பெரிய மையமாக மாற்றித் தருவேன் என்று வாக்களித்திருந்தேன். இன்று அந்த உத்தரவாதம் நிறைவேறியிருக்கிறது.

இந்த ஒரு திட்டத்தில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. கடல் வாணிபத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த புத்துயிர் காரணமாக தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.” என்றார்.

`தமிழ்நாடு இன்று தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது’

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாடு இன்று தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டங்கள் முன்னேற்றமடைந்த இந்திய வரைபடத்தின் முக்கிய பகுதி. இந்தத் திட்டங்கள் வேண்டுமானால் தூத்துக்குடியில் இருக்கலாம். ஆனால், இந்தியா முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். ” என்றார்,

ரூ.17,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்திறங்கிய பிரதமர் மோடி, அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார். அதையடுத்து, தூத்துக்குடியில், இன்று காலை ரூ.17,000 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி

குறிப்பாக, வ.உ.சி துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை அறிமுகம் செய்தல், ரயில்வே அமைச்சகத்தின் ரூ.1,477 கோடி மதிப்பிலான வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் ரயில்பாதை திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், ரூ. 4586 கோடி மதிப்பிலான சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நான்கு திட்டங்களை மோடி தொடங்கிவைப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

பிரதமர் மோடி – தூத்துக்குடி

அதன்படி, இன்று காலை தொடங்கிய நிகழ்ச்சியில், ரூ.17,000 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.