வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இப்போதெல்லாம் கேஜி அட்மிஷனில் ஆரம்பித்து எல்லா விஷயங்களுக்கும் வடிவேலுவின் வசனம் போல

‘எதையுமே பிளான் பண்ணித்தான்’ செய்கிறோம். ஆனால், என் மனம் கொஞ்சம் வேற மாதிரி! எப்போதும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எந்த ஒரு திட்டமிடலுமின்றி – அந்த நேரத்தில் யோசித்து, சட்டெனக் கிளம்பி ஷாப்பிங், ஹோட்டல், சினிமா அல்லது பிக்னிக் செல்லும் எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ் அனுபவங்கள் ரொம்பவே பிடிக்கும். ஆம்… நாம் மகிழ்ச்சி கொள்ளப் பெரிதாக ஏதேனும் நிகழ வேண்டும் என்றில்லை. சின்னச் சின்ன விஷயங்கள்கூட நல்லதொரு மனமாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே, இப்போழுதில் வாழலாமே!

Happy Living (Representational Image)

அப்படித்தான் ஒரு நாள்…

சம்மர் ஹாலிடேஸுக்கு எங்கு செல்லலாம் என்று நினைக்கையில் வத்தலக்குண்டிலிருக்கும் நண்பரின் அழைப்பு வந்தது. அவர்களிடம் மே மாத விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என்று கேட்டோம். அவர் பள்ளிக்கூடம் நடத்துவதால் பயணங்கள் அனைத்தையும் அந்த நேரத்தில்தான் முடிவெடுத்துச் செல்வார்கள்.

அதனால் அவரது ஸ்டைலிலேயே, ‘நீங்கள் சென்னையிலிருந்து இங்கு வருவதற்கு மட்டும் டிக்கெட் போடுங்கள்; மற்றவற்றை இங்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். நாங்கள் நண்பரிடம் கேட்டது ஒன்றே ஒன்று… அலைமோதும் கூட்டம் ஏதும் இல்லாத இடங்களுக்கு சுற்றிப் பார்க்கச் செல்வோம் என்றதும், அவர் மென்மையாகச் சிரித்துக்கொண்டே ‘ஓகே அப்படியே செய்திடலாம்‌’ என்றார்.

மே மாதம் கத்தரி வெயில் நேரத்தில் மூன்று நாள் பயணமாகக் கிளம்பினோம். மறுநாள் அதிகாலை கொடை ரோடு சந்திப்பிலிருந்து வத்தலக்குண்டு செல்லும்போதே லேசான ஈரக்காற்று. அவர்கள் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். பிறகு அவர்கள் பள்ளியின் பிளே ஏரியாவில் உள்ள ஆர்கானிக் தோட்டத்தில் புல்வெளியில் அமர்ந்து ஒரு குட்டி காஃபி டாக்.

மேகமலை

‘மே மாதம் என்பதால் அட்மிஷன் வேலையில் கொஞ்சம் பிசியாக இருக்கிறோம். அதனால் இன்று நீங்கள் கொடைக்கானல் சென்று வாருங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை வேறொரு ஸ்பாட்டுக்குச் செல்வோம்’ என்றார் நண்பர். ‘எல்லோரும் சேர்ந்து செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படி மாறிடுச்சே…’ என்றேன். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. கொடைக்கானலில் இரண்டு நாட்களாக சீசன் நன்றாக உள்ளது. நல்லா சுத்திட்டு வாங்க’ என்ரு விடை கொடுத்தார்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் சென்றோம். மே மாதம் என்பதால் அங்கும் இங்கும் எங்கும் கூட்டம். அதனால் நாங்கள் சென்ற இரண்டு இடங்கள்: ரோஸ் கார்டன் மற்றும் மண்ணவனுர் லேக். வரும் வழியில் போகர் பிரதிஷ்டை செய்த பூம்பாறை முருகனை தரிசனம் செய்து விட்டுத் திரும்பினோம்.

நாங்கள் சென்ற நேரத்தில் மழை பெய்ததால் சீசன் மிகவும் நன்றாக இருந்தது.

மறுநாள் காலை கிளம்பி கும்பக்கரை அருவிக்கு சென்று விட்டு மீண்டும் வத்தலக்குண்டுக்கு சென்றோம். பள்ளி வேலையில் இருவரும் பிஸியாக இருப்பதை பார்க்கும் போது நாம் நாளை இங்கேயே ரிலாக்ஸ் செய்து விட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று யோசித்தோம். சனிக்கிழமை இரவு வரை அவர்களுக்கு வேலைகள் இருந்தன. மறுநாள் காலை நாங்கள் பாதி உறக்கச் சடவில் இருக்கும் போது நண்பர் எங்களிடம், ‘எல்லோரும் சேர்ந்து மேகமலைக்குச் செல்லலாம். நேரத்தை வீணாக்காமல் முடிந்த வரை சீக்கிரம் புறப்படுவோம்’ என்றார். இவ்வாறு அந்த நிமிடத்தில் யோசித்து அமைந்ததுதான் எங்களுடைய மேகமலைப் பயணம். ரைட் ஓகே… எட்றா அந்த நேவி ப்ளூ ஹெக்ஸா காரை மேகமலைக்கு!

மேகமலை

மேகம்… மலை… குளிர்… இதம்!

மேகமலை: மேற்குத்தொடர்ச்சி மலையில் மேகக்கூட்டங்களோடு மறைந்திருக்கும் ஓர் அழகி. சமவெளிப் பயணம் முடிந்து செக் போஸ்டில் நிற்கும் போதே சட்டென்று மாறுதே வானிலை. அங்கிருந்து ஒரு மணி நேர மலைப் பயணம். பதினெட்டு கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் தமிழ்ப் பூக்களின் பெயர்கள் (வெட்சிப் பூ, இருவாட்சிப்‌ பூ, மகிழம்பூ…) எழுதப்பட்டிருந்தன. முதல் கொண்டை ஊசி ஆரம்பிக்கும்போதே லேசான சாரல் மழை. மழைத்தூறல்கள் முகத்தில் பட்டவுடன் எனக்கு நானே, ‘முத்துலெட்சுமி உனக்கு இன்று யோகம்தான்… மேகமலையில் என்சாய்!’ என்று சொல்லிக்கொண்டே பயணத்தை ரசித்தேன்.

முக்கால்வாசி மலை ஏறியதும் மெல்ல மெல்ல மேகமலை ஊரை நெருங்கினோம். திரும்பிய இடமெல்லாம் புத்தம்புது இலைகளால் புதுப்பொலிவோடு துளிர் பச்சைப் பசேல் நிறத்தில் சாய்வான நெருக்கமான தேயிலைத் தோட்டங்கள், காபி எஸ்டேட்டுகள்… மேலே ஊர்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள். ஆங்காங்கே பெரிய மரங்கள். மரங்களில் இருக்கும் நீர்த்துளிகளைப் பார்க்கும்போது கீழே இறங்கி ஒரு கிளையை லேசாக உலுக்கி உள்ளங்கைகளையும் உச்சந்தலையையும் நனைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது.

மேகமலை

மேகமலை ஊர் வந்ததும் அங்கிருந்து மேகமலை ஹைவேவிஸ் என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு அணைக்கட்டுகள், ஏரிகள், அருவிகள் உள்ளன என்று அங்குள்ள ஊர்மக்கள் சொன்னார்கள். போகும் வழியில் தேயிலைத் தோட்டங்களுக்கு முன் நின்று படங்கள் எடுத்தோம். படங்கள் எடுக்கும் போது ‘கீச் கீச்’ என்று சிட்டுக்குருவிகளின் வருகை. எத்தனை காலமாகி விட்டது இந்த சிட்டுக்குருவிகளைப் பார்த்து… அவை உற்சாகமாகக் கத்திக்கொண்டு வருவதை குழந்தைகள் ரசித்தனர்.

படங்கள் எடுத்து காரில் அமரும் போது வெளியே முத்து முத்தாகக் காய்த்திருக்கும் சுண்டைக்காய்ச் செடி கவனத்தை ஈர்த்தது. ‘ஆஹா இவ்வளவு ஃப்ரெஷ் சுண்டைக்காயா’ என்று பார்த்ததும் அதை விட்டுவிட மனமில்லை. கீழே இறங்கி அதனை பறித்துக் கொண்டிருக்கும் போது மெல்லிய தேகம் கொண்ட ஒரு பாட்டி வந்து எனக்கு உதவி செய்தார். ‘இன்னும் நிறைய பறித்துக் கொள்’ என்று பை நிறைய பறித்து தந்தார்கள். பாட்டி எங்களிடம் ஸ்டைலாக ‘பை’ சொல்லிவிட்டு ‘இம்புட்டு தூரம் வந்துட்டு மகாராஜா மெட்டு பார்க்காமல் கிளம்பாதீங்க’ என்றார்.

ஹைவேவிஸ் அணை அருகே இறங்கி அங்கிருந்து நடந்து ஊரின் அழகை ரசித்தோம். அங்கு அமர்ந்து ஏரியின் முன் சில புகைப்படங்கள் எடுத்து விட்டு ஒரு தேநீர் அருந்தியதோடு மகாராஜா மெட்டுக்கு அங்குள்ள ஜீப்பில் கிளம்பினோம். போகும் பாதையில் சாலை சீரமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஜீப்பில் பயணம் செய்யும்போது மழை வருவதற்குத் தயாராகும் இருள் சூழ்ந்த மேகங்கள் துளிர் பச்சை நிறத்தில் இருக்கும் காடுகள் மீது தவழ்ந்து செல்லும் காட்சி அழகோ அழகு. நடுவே பூச்சிகளின் கொர்ர்ர்ர் சத்தம்.‌ மனதில் நாம் பார்த்து வருவதெல்லாம் கனவோ என்று தோன்றியது. சூழலுக்கு ஏற்றவாறு ஜீப்பில் ‘பூ மாலையில் ஒர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் ஒலிக்கும்போது ‘இதுவரை சுற்றிப் பார்த்த இடங்களிலேயே நான்தான் தேன்’ என மலைகள் என்னிடம் பேசுவது போலவே இருந்தது.

மகாராஜா மெட்டு

பிறகு மகாராஜா மெட்டு வியூ பாயிண்டை பார்க்க… கற்களால் ஆன படிகளைப் போலிருந்த மண் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். மேலே பாதி வழி செல்லும்போது மணலாற்றைச் சுற்றிலும் நீண்டு கிடக்கும் தேயிலை மலைகள், அதன் கீழே ஆங்காங்கே சிறு சிறு வீடுகள். திரும்பும் திசையெங்கும் அழகோ அழகு. அந்த கண்கொள்ளாக் காட்சி ஓர் ஓவியம் போல அத்தனை அழகு. எங்கும் பேரமைதி. மேலே செல்லச் செல்ல சுத்தமான காற்று முகத்தில் படும்போது இனம்புரியாத ஒரு பரவச நிலை. வேறு உலகத்துக்கே சென்றதுபோல உணர்ந்தேன்.

மகாராஜா மெட்டு வியூ பாயிண்டை சென்றடைந்தோம். ஒரு மாதிரியாக ஏறி இறங்கி சமதளப் பகுதிக்கு வந்தது போல இருந்தது. அப்போதுதான் நாம் மலையின் உச்சியில் நிற்கிறோம் என்று உணர்ந்தேன். அந்த வியூ பாய்ண்டில் புற்களுக்கு மத்தியில் பாறைகள். பாறைகளில் அமர்ந்து சில படங்களை எடுத்தோம். மெல்ல நகர்ந்து எட்டிப் பார்க்கலாமா என்கிற ஆசை வந்தது. அங்கிருந்து தேனி மாவட்ட வியூ தெரிந்தது. பின் மெல்ல கீழே இறங்கி வந்தோம். திரும்பிய இடமெல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கை வளங்களை விட்டு கிளம்பும் நேரமும் வந்தே விட்டது.

ஒரு சில நாட்கள் தங்கியிருந்து ஒவ்வொரு இடத்தையும் ரசிக்க வேண்டிய இடம் மேகமலை. மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் என்கிற ஆவல் உள்ளது.‌ என் மனதை மிகவும் கவர்ந்த அழகோவியம் மேகமலை என்றே சொல்வேன்!

மேகமலையிலிருந்து போடி சென்று மற்றொரு நண்பர் வீட்டில் அறுசுவை விருந்து. நேரம் நான்கு மணியை தாண்டியதால் பசியில் எல்லோரும் வெளுத்து விட்டோம். பின் அங்கிருந்து வத்தலகுண்டுக்குச் சென்று சென்னைக்கு கிளம்ப தயாரானோம். நண்பர் நோரிஸ் மற்றும் லினி, ‘எப்படி இருந்தது நம்முடைய திடீர் பயணம்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘வழக்கம்போல இந்த முறையும் அசத்தல்’ என்றோம். இதற்கு முன்பும் இதே போல மூணார், தேக்கடி, தாண்டிக்குடி‌ போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் நோரிஸ் மற்றும் அவர் மனைவி லினியிடம் பழகும் போது எனக்குள் ஒரு தனி எனர்ஜி கிடைக்கும். இருவரது கடின உழைப்பு, நேர்மறையான வார்த்தைகள், சுறுசுறுப்பு ஆகியவற்றை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ‘இதுபோன்ற இயற்கை இடங்களுக்கு இந்த தலைமுறைக்கும் ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வருடத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளிக் குழந்தைகளையும் அழைத்துச் சென்று அவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்’ என்றார்கள்.

மகாராஜா மெட்டு

கிளம்பும் போது அவர்களின் குழந்தைகள் நிஷல் & மிஷல் வேகமாக ஆன்ட்டி ‘வெயிட் வெயிட் தட் டைனி கீரின் பால்ஸ்’ என்று மேகமலையில் பறித்த சுண்டைக்காயை ஓடிவந்து தந்தார்கள். கிளம்பும் அவசரத்தில் மலைச் சுண்டைக்காயை மறந்து விட்டேன்.

மூன்று நாட்களும் இயற்கையோடு இணைந்து பயணித்த மகிழ்ச்சியில் சென்னை திரும்பினோம். மறுநாள் காலை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் போது கூட பசுந்தேயிலையின் மணமும் மேகமலையின் ஜில்லென்று காற்றும் முகத்தில் படுவது போலவே உணர்ந்தேன்.

வீட்டிற்குச் சென்றதும் இவ்வளோ பச்சை சுண்டைக்காய் வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது எங்கள் வீட்டின் அருகில் சாலையோரம் நின்று சில நூறு மக்களுக்கு தினமும் ருசியான காலை உணவை சமைத்து தரும் கையேந்தி பவனின் அன்னபூரணியான ரெஜினா அம்மாவிடம் கேட்டேன். ‘பச்சை சுண்டைக்காயை வைத்து ஒன்றா ரெண்டா சுண்டைக்காய் தீயல், சுண்டைக்காய் அவியல், சுண்டைக்காய் துவையல், சுண்டைக்காய் காரக்குழம்பு இப்படி பல வகைகள் செய்திடலாம்’ என்றார் அவர்.

முதலில் சுண்டைக்காய் தீயல் செய்யக் கற்றுக் கொண்டேன். அன்றே மதிய உணவிற்கு முதல் நாள் பறித்த மலை சுண்டைக்காயில் செய்த தீயலை சாப்பிட்டோம். சுவை அற்புதமாக இருந்தது.

பச்சை சுண்டைக்காய் தீயல் ரெசிபியை விருந்தோம்பல் வீடியோவில் காணலாம்.

பச்சை சுண்டைக்காய் தீயல்… இது புதுசா இருக்குல..? இதோ செய்முறையைப் பார்ப்போமே! 

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20

பூண்டுப் பற்கள் – 15

பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

பொடி பற்களாக நறுக்கிய தேங்காய் – அரை கப்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

கடுகு & உளுந்து – ஒரு டீஸ்பூன்

வெல்லம் – அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 4 குழிக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

சீரகம் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

மிளகாய்த்தூள் – மூன்று டீஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோலுரித்து நீளமாக நறுக்கவும். சுண்டைக்காய் காம்புகளை நீக்கி லேசாக தட்டிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது தேங்காய் விட்டு சூடானதும் அதில் சீரகம், தேங்காய்த்துருவல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கைவிடாமல் சிவக்கும் வரை வறுக்கவும். தேங்காய் ஈரப்பதம் போகும் வரை சிவந்து வந்தபின் அடுப்பை அணைத்து மிளகாய்த்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும்.

பின் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் பற்கள், தட்டிய சுண்டைக்காய் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். அவை செம்பு நிறமாக மாறும் வரை வதக்கி கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள விழுது, கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

அவை கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது வெல்லம் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

உங்கள் கவனத்துக்கு
* தீயலின் சுவை வறுக்கும் பொருட்களை பதமாக சிவக்கும் வரை வறுப்பதிலும் அதை பதமாக அரைப்பதிலும் உள்ளது. தேங்காயை வறுக்கும் போது கருகாமல் வறுக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் அதிகமாக விடாமல் அரைக்கவும். 
* குழம்பிற்கு வெங்காயம், பூண்டு, தேங்காய் மற்றும் சுண்டைக்காயைப் பதமாக சிவக்கும் வரை வதக்க வேண்டும். 
* வறுத்து அரைக்கும் பொருட்களில் இருக்கும் லேசான கசப்பு சுவையை அகற்றுவதற்கு சிறிது வெல்லம் சேர்க்கிறோம்.  

சுடச்சுட சாதத்தில் எண்ணெய் தெளிய மண்சட்டியில் செய்த பச்சை சுண்டைக்காய் தீயலை ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள். அலாதி சுவையில் இருக்கும்.  My Vikatan -ல் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம். இது போல  மற்றுமொரு அறுசுவை அனுபவ விருந்தோடு சந்திப்போம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.