`நாய்க்கு பேரு வச்சியே, சோறு வச்சியா?’ என்று ஒரு காமெடி உண்டு. சிங்கங்களுக்கு பெயர் வைத்த விவகாரமோ சீரியஸாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள உயிரியல் பூங்கா ஒன்றில் சீதா என்று பெயரிடப்பட்ட பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒன்றாக வைத்திருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வழக்குப் போட்டது.

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா, “சர்ச்சை இல்லாத பெயரை நீங்கள் வைக்கக்கூடாதா? எல்லோராலும் மதிக்கப்படும் கடவுளின் பெயரை ஏன் வைத்தீர்கள்? உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு இப்படிப் பெயர் வைப்பீர்களா?” என்றெல்லாம் மேற்கு வங்காள அட்வகேட் ஜெனரலைக் கடுமையாகக் கேள்விகள் கேட்டார். அப்போதுதான் அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். “இந்த சிங்கங்கள் திரிபுராவிலிருந்து வந்தவை. இவற்றுக்கு அங்கேதான் பெயர் வைத்தார்கள். நாங்கள் வைக்கவில்லை. பெயரை இப்போது மாற்றிவிடுகிறோம்” என்று அவர் சொன்னார்.

சீதா, அக்பர் சிங்கங்கள்

திரிபுராவில் இருக்கும் பா.ஜ.க அரசு, இந்த சிங்கங்களுக்கு இப்படிப் பெயர் வைத்ததற்காக வனத்துறை அதிகாரி அகர்வால் என்பவரை சஸ்பெண்டு செய்துள்ளது. சீதாவுக்கும் அக்பருக்கும் ஒரே நாளில் பெயரை மாற்றுவது சாத்தியம் இல்லை என்பதே உண்மை.

பெரும்பாலும் உயிரியல் பூங்காக்களில் மனிதர்களின் கண்காணிப்பில் வளரும் சிங்கம், புலி, யானை போன்ற பெரிய விலங்குகளுக்கு பெயர் சூட்டுவது மரபாக இருக்கிறது.

குட்டியாகப் பிறந்தது முதலே இந்த விலங்குகளைப் பராமரிக்க உதவியாளர்கள் அங்கு இருப்பார்கள். அவர்கள் தங்கள் வசதிக்காக இப்படிப் பெயர் வைத்துக் கூப்பிடுவது வழக்கம். உணவு தரும்போதும் மற்ற நேரங்களிலும் அவர்கள் இந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் அந்த விலங்குகள் உடனே அந்த இடத்துக்கு வரும். திடீரென பெயரை மாற்றினால், அவற்றுக்குக் குழப்பம் வந்துவிடும்.

உதாரணமாக, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து ராமா என்ற ஐந்து வயது வெள்ளைப் புலி உதய்பூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கே உதவியாளர்கள் பேசிய தமிழ் மொழியைக் கேட்டுப் பழகிய அந்தப் புலிக்கு, அங்கே பேசிய மேவாரி மொழி புரியவில்லை. பிரச்னையைத் தீர்ப்பதற்கு புலிக்கு மேவாரி மொழி கற்றுத் தர முடியாது அல்லவா? அதனால் சென்னையிலிருந்து ஊழியர் ஒருவர் உதய்பூர் சென்று அங்கே அந்தப் புலியைப் பராமரிப்பவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துவிட்டு வந்தார்.

இதுபோல பல சம்பவங்கள் உண்டு. ஒரு சிங்கத்துக்கு மனிதர்கள் தன்னை சிங்கம் என்று அழைக்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதற்கு ஒரு பெயரை வைத்துத் தொடர்ச்சியாக அழைக்கும்போது, தன்னைக் கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்துகொள்கிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா

ஒவ்வொரு உயிரியல் பூங்காவிலும் இருக்கும் விலங்குகளுக்குப் பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. விலங்குக்குப் பெயர் வைத்துவிட்டு அதன் பெயரில் பதிவேடு பராமரிப்பது சுலபமாக இருக்கிறது. 10 சிங்கங்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒன்று, இரண்டு என்று பெயர் வைத்தால் புரியாது அல்லவா? எளிதாக அடையாளம் செய்வதற்கு இந்தப் பெயர் வைக்கும் நடைமுறை உதவுகிறது.

இந்தியா முழுக்க இருக்கும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பற்றிய தகவல்கள் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் உள்ளது. அது ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு எண் கொடுக்கிறது. உள்ளூரில் வைக்கப்படும் பெயரும், இந்த எண்ணும்தான் அதன் அடையாளங்கள்.  

சில பூங்காக்களில் அதிகாரிகளே பெயர் வைத்துவிடுகிறார்கள். இன்னும் சில இடங்களில் ஆட்சியாளர்கள் வைக்கிறார்கள்.

வண்டலூர் பூங்காவில் பிறக்கும் சிங்கக்குட்டிகளுக்கும் புலிக்குட்டிகளுக்கும் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று எல்லோரும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

வீரா, ராமா, சந்திரா, அர்ஜுனா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா என்றெல்லாம் பெயர் வைத்தார் ஜெயலலிதா. செம்பியன், இந்திரா, வள்ளி என்று பெயர் சூட்டினார் கருணாநிதி. எடப்பாடி பழனிசாமி ஜெயா என்ற பெயரையும் வைத்தார். ரித்விக், யுகா, வெண்மதி, மித்ரன், நிரஞ்சனா என்றெல்லாம் மாடர்ன் பெயர்களையும் வைத்தார்.

இப்போது ஒரு சீதாவுக்கும் ஒரு அக்பருக்கும் இத்தனை அக்கப்போர் நடக்கிறது. ஆனால், உயிரியல் பூங்காக்களில் அதிகம் வைக்கப்படும் பெயர்கள் இந்த இரண்டும்தான். இதுவரை 15 சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் சீதா என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

சிங்கங்கள் – மாதிரிப் படம்

இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் கிடையாது என்பதால், எல்லாவிதமான பெயர்களும் வைக்கப்படுகின்றன.

ஆக்ரோஷமான இந்த விலங்குகளுக்கு வசிஷ்டர், அகத்தியர், விஸ்வாமித்திரர் என முனிவர்கள் பெயரும் வைப்பதுண்டு. அக்பர், அசோகர் என்று மன்னர்கள் பெயரும் வைக்கிறார்கள். அமிதாப், ஜாக்கி, பிரபாஸ், தனுஷ், ஹேமா, ரேகா, மாதுரி, கரீனா, ஐஸ்வர்யா என சினிமா நட்சத்திரங்கள் பெயரும் சூட்டுகிறார்கள். கபில், டெண்டுல்கர், திராவிட் என விளையாட்டு வீரர்கள் பெயரும் வைக்கப்படுகின்றன. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரும் வைக்கப்பட்டுள்ளது. கார்கில் போரில் இந்தியா வென்றபோது கார்கில் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதேபோல கடவுள்கள் பெயரை வைப்பதும் அதிகம். பிரம்மா, சிவா, கிருஷ்ணா, ராம், பலராம், சங்கர், கணேஷ், பார்வதி, துர்கா, லட்சுமி, ராதா, கங்கா என்று அத்தனை கடவுள்கள் பெயரிலும் சிங்கங்களும் புலிகளும் உண்டு.

பெயர் வைப்பதற்கு மட்டும்தான் யோசிப்பார்களே தவிர, அதன்பின் அவை என்ன செய்கின்றன என்று யாரும் யோசிப்பதில்லை. ஏனெனில், உயிரியல் பூங்காவைப் பொறுத்தவரை பெயர் என்பது கையாள்வதற்கான ஓர் அடையாளம் மட்டுமே! அதைத் தாண்டி அவர்கள் யோசிப்பதில்லை.

அதனால்தான் புலிகள் கிருஷ்ணாவும் சூர்ப்பனகையும் இணைந்து குட்டிகளை ஈன்றன. சிவா என்ற புலி, பேகம் என்ற பெண் புலிக்குட்டிக்கு தந்தை ஆனது. கங்காவுக்குப் பிறந்த ஆண் புலிக்குட்டிக்கு சுல்தான் என்று பெயர் வைக்கப்பட்டது. சோனியா என்ற சிங்கத்துக்கு இரண்டு குட்டிகள் பிறக்க, ஒன்றுக்கு அக்பர் என்றும் இன்னொன்றுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கப்பட்டது. திருப்பதியில் ஹசினா என்ற பெண் புலிக்குப் பிறந்த மூன்று குட்டிகளுக்கு பலராம், கிருஷ்ணா, சுபத்ரா என்று பெயர் வைத்தார்கள்.

சிங்கங்கள் – மாதிரிப் படம்

பஞ்சாபில் பிறந்த இன்னொரு பலராமர், சீதாவுடன் இணைந்து புலிக்குட்டிகளைப் பெற்றெடுத்தார். புனே உயிரியல் பூங்காவில் அந்தோனி என்ற ஆண் புலியும், லட்சுமி என்ற பெண் புலியும் இணைந்து குட்டிகளைப் பெற்றன. மத்தியப் பிரதேசத்தில் ஒரு புலிக்குப் பிறந்த இரண்டு குட்டிகளுக்கு ராம், சீதா என்று பெயர் வைத்து சகோதர உறவாக ஆக்கினார்கள். குஜராத்திலோ ராம் என்ற சிங்கம், மும்தாஜ் என்ற பெண் சிங்கத்துடன் இணைந்து குட்டிகளைப் பெற்றது. யாரும் எதையும் யோசித்ததில்லை.

இப்போது கொல்கத்தா நீதிமன்றத்தில் வந்திருக்கும் வழக்கு, எதிர்காலத்தில் எல்லோரையும் கவனமாக இருக்க வைக்கும். கடவுள் பெயரோ, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரோ, நோபல் பரிசு வென்றவர்கள் பெயரோ இனி வைக்கக்கூடாது என்று சொல்லப்பட்ட பிறகு, நாய்களுக்கு வைப்பது போல `பப்பி’, `ஜூலி’ என்றெல்லாம் பெயர்கள் வைக்கக்கூடும். என்ன, இந்தப் பெயர்களைக் கேட்டு சிங்கம் கோபித்துக்கொள்ளக்கூடாது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.