மலையாளத்தில் `Driving License’ என்று ஒரு படம் இருக்கிறது. பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்தின் கதையின்படி பிருத்விராஜ், கார்களில் ஸ்டன்ட் செய்யும் அளவுக்கு ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ. ஆனால், அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்காது. 

Driving Licence

பிருத்விராஜ், லைசென்ஸ் வாங்குவதுதான் கதை. ஹீரோவாக இருந்தாலும் லைசென்ஸ் வாங்குவது என்றால் போராடித்தான் ஆக வேண்டும் என்கிற கருவை மையமாக வைத்து ஓடும் அந்தப் படத்தில், கேரளப் போக்குவரத்து அதிகாரிகளின் கண்டிப்பும் காண்பிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கண்டிப்பான அதிகாரியாக நடித்திருந்தவர்தான் சுராஜ் வெஞ்சாரமூடு. அப்படிப்பட்டவரே போக்குவரத்துத் துறையின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

Pinarayi Vijayan Traffic Challan

‛யாரா இருந்தாலும் சட்டம் ஒண்ணுதான்’ என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளாவின் Motor Vehicle Department (MVD) பற்றிப் பரபரப்பாகச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. லேட்டஸ்ட்டாகக்கூட, கேரள முதல்வர் பினராயி விஜயனின் கியா கார்னிவல் கார், சிக்னலைத் தாண்டியதற்காக அவருக்கு சலான் அனுப்பியிருந்தது வைரலாகப் போனது. 

சூரஜ் வெஞ்ஜரமூடு

‛டிரைவிங் லைசென்ஸ்’ படத்தில் RTO இன்ஸ்பெக்டராக நடித்திருந்த சுராஜ் வெஞ்சாரமூடுவே இப்போது நிஜத்தில் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார். MVD, அவரின் லைசென்ஸை கேன்சல் செய்யும் முடிவுக்கு இறங்கியுள்ள அளவுக்கான சிக்கல் அது. 

அதற்குக் காரணம், ஒரு சாலை விபத்து. தம்மணம் கரணகொடம் எனும் சாலையில் இரவுப் பயணத்தின்போது, அதிவேகமாகப் பயணித்த அவரின் கார், பைக் ரைடர் ஒருவர் மீது மோதிய விவகாரம் இப்போது கேரளாவில் சூடாகப் போய்க் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தச் சம்பவம் நடந்தது ஜூலை மாதம் 2023-ல். மஞ்சேரியைச் சேர்ந்த சரத் என்கிற அந்த 31 வயது வாலிபர், விபத்தின்போது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

மோகன்லாலுடன்…

இது தொடர்பாக, Palarivattom காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அந்த நேரத்திலேயே FIR-ம் பதிவு செய்து, முறைப்படி விசாரிப்பதற்காக அதை MVD-க்கு அனுப்பியிருந்தது காவல்துறை. இந்த வழக்கு தொடர்பாகக் கிட்டத்தட்ட 3 முறை நோட்டீஸ் அனுப்பியும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லாததால், MVD சூரஜின் மேல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. 

கேரளாவில் கடுமையான விதிமீறலில், முக்கியமாக Drunk and Drive வழக்கில் ஈடுபடுபவர்களுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்வதை முக்கியமான சட்டவிதியாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அப்படி, போன ஆண்டு மட்டும் சுமார் 100-150 லைசென்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனவாம். இது எர்ணாகுளம் லிமிட் ஆர்டிஓ வழக்கில் மட்டும் இந்த எண்ணிக்கை. விபத்தின் தன்மையைப் பொருத்து பொதுவாக 3 – 6 மாதங்கள் வரை லைசென்ஸை ரத்து செய்யும்பட்சத்தில், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம், 1 ஆண்டு வரை ரத்து செய்யப்படும். 

சுராஜ் வெஞ்சாரமூடு வழக்கைப் பொறுத்தவரை – விபத்தில் உயிரிழப்பு இல்லை என்றாலும், சரத் என்கிற அந்த வாலிபருக்குக் காலில் ஃப்ராக்ச்சர் ஆகியிருக்கிறது. அது தொடர்பான நோட்டீஸுக்கும் பதில் இல்லாத பட்சத்தில் கடுப்பாகி இருக்கிறதாம் MVD. ‛‛அவர் இது தொடர்பாக பதில் ஏதும் அளித்திருந்தால், நிச்சயம் அவரின் லைசென்ஸ் ரத்தின் காலஅளவைக் குறைக்கலாம் என்று இருந்தோம்!’’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கிறார் MVD-யின் சீனியர் அதிகாரி. 

மேலும், ‛‛விபத்து தொடர்பாக எந்த விளக்கமும் தரவில்லை; நோட்டீஸுக்கு முறையான ரெஸ்பான்ஸும் இல்லாத நிலையில், உங்களின் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்குக் காரணங்கள் இருந்தால் சொல்லவும்’’ என்றும் MVD, சுராஜ் வெஞ்சாரமூடுவிடம் கேள்வி கேட்டிருக்கிறது.

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, குஞ்சாகோபோபன் என பல லெஜெண்ட்களுடன் நடித்தவர் சுராஜ். விபத்துக்கான நோட்டீஸ் பற்றி எந்த விஷயமும் தெரியவில்லை என்று சுராஜ் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

மம்முட்டியுடன்…

‛ஒரு பொறுப்புள்ள நடிகர் இப்படியா நடந்து கொள்வது..’ என்றும், ‛பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விபத்துகள் ஏற்படக் கூடாது என்பதையும் குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுத்துச் செயல்படும் MVD, இந்த விஷயத்தையும் சீரியஸாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.