Live: `என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா

“தமிழ்நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்!” – பல்லடத்தில் பிரதமர் மோடி

“இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது. இது ஜெயிக்காது என்று டெல்லிக்கு தெரிந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டை எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என அந்தக் கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 2024-ல் அந்த கூட்டணியின் கொள்ளையடிக்கும் கடையை தமிழ்நாட்டில் நாம் பூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், பாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும்.” – என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி

`இந்தியா கூட்டணியின் கொள்ளையடிக்கும் கடையை மூட  வேண்டிய நேரம் வந்துவிட்டது!’ – பிரதமர் மோடி

“புதிய பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். விவசாயம் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இந்தியா கூட்டணி அவதூறுகளை பரப்பி `மோடி உங்களுக்கு நல்லது செய்ய மாட்டார்’ என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக மட்டுமே அவர்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களின் கொள்ளையடிக்கும் கடையை நாம் மூட வேண்டிய நேரம் வந்துவிட்டது.” – பிரதமர் மோடி

`தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பதால், எதிர்க்கட்சிகளுக்கு என்மீது கோபம்!’ – பிரதமர் மோடி

“முத்ரா கடன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கு இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இது சாத்தியமாகுமா… தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் என்மீது கோபத்தில் இருக்கின்றன!” – பிரதமர் மோடி

`தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துகிற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது!’ – திமுக-வைச் சாடிய பிரதமர் மோடி

“இன்று நான் தமிழ்நாட்டுக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் எனக்கு நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான கல்வியையும், சுகாதாரத்தையும் எம்.ஜி.ஆர் கொடுத்திருக்கிறார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவர் என இன்றும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்று தமிழ்நாட்டில் துரதிஷ்டவசமாக தி.மு.க-வால் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துகின்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்லாட்சி கொடுத்தவர் ஜெயலலிதா மட்டுமே. காரணம் அவர் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.

`தமிழக கிராமப்புறங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம்!’ – பிரதமர் மோடி

“தமிழ்நாட்டில் மூன்றரை கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறோம், 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக காஸ் சிலிண்டர் இணைப்பை கொடுத்திருக்கிறோம். கிராமப்புறங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். இதுதான் மோடியின் உத்தரவாதம். இது இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும்.” – என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி

`திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு கொடுத்ததை விட, 3 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறோம்!’ – பிரதமர் மோடி

“2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழ்நாட்டுக்கு கொடுத்ததைவிட, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமான பணத்தை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக அரசு கொடுத்திருக்கிறது.” என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி

`ஆட்சியில்  இருந்ததில்லை… ஆனால், தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் பாஜக இருக்கிறது!’ – பிரதமர் மோடி

“தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால், தமிழ்நாடு எப்போதும் பா.ஜ.க-வின் இதயத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளையர்கள் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு, தங்களின் நாற்காலியைக் காப்பாற்றுவதற்காக மக்களிடம் பொய் சொல்லி, மக்களுக்குள் சண்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கபட நாடகம் வெளியே வந்துவிட்டது.” என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி

“370-ஐ தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, வரலாற்றுச் சாதனையைச் செய்திருக்கிறோம்!” – பிரதமர் மோடி

“தமிழ்நாட்டில் 1991-ல் கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரையிலான ஏக்தா யாத்திரையை நான் வழிநடத்திச் சென்றேன். அப்போது என் மனதில் இருந்தவை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று காஷ்மீரின் லால் சௌக்கில் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவது. மற்றொன்று பிரிவு 370-ஐ ரத்து செய்வது. இன்று லால் சௌக்கில் நிரந்தரமாக நமது மூவர்ணக்கொடி பறக்கிறது. பிரிவு 370-ஐ தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, வரலாற்று சாதனையைச் செய்திருக்கிறோம்.” – என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி

`என் இதயத்தோடு சம்பந்தப்பட்ட உறவாக தமிழ்நாட்டைப் பார்க்கிறேன்!’ – பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி“நாட்டின் அரசியல் வளர்ச்சியில் புதிய ஒரு மையமாக தமிழ்நாடு மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரையை தலைமை தாங்கி நடத்திய அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழும், தமிழ் பண்பாடும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது நான் படித்த தமிழ் கதைகளைப் படித்தேன். என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியில் காசி தமிழ் சங்கம் நடத்தினேன். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோலை உயர்ந்த இடத்தில் வைத்து பெரிய மரியாதையை உருவாக்கினேன். இவையெல்லாம் தமிழ்நாட்டுக்கும் எனக்கும் ஏதோ அரசியல்ரீதியான உறவு அல்ல. என் இதயத்தோடு சம்பந்தப்பட்ட உறவாக இதை நான் பார்க்கிறேன்.” – என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி

`தமிழகத்தில் பாஜக-வைப் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது!’ – பிரதமர் மோடி

`அரசியல் வளர்ச்சியின் புதிய மையம் தமிழ்நாடு!’ – பிரதமர் மோடி

`அரசியல் வளர்ச்சியின் புதிய மையமாக தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. 2024-ல் தமிழகம் புது சரித்திரத்தைப் படைக்கும்!’ – பிரதமர் மோடி

`2014, 2019-ல் செய்த தவறை தமிழ்நாட்டு மக்கள் இனி செய்யப்போவது கிடையாது!’ – அண்ணாமலை

“இன்னும் 60 நாள்களில், 400 இடங்களுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும்போது, தமிழ்நாட்டிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி, 39 எம்.பி-க்களை அமர்த்தி அழகுபார்க்கும். அதுவரை நமக்கு ஓய்வில்லை. 10 ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்ததாக இருக்கும். 2014, 2019-ல் செய்த தவறை தமிழ்நாட்டு மக்கள் செய்யப்போவது கிடையாது.” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி!

`சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சரியாக அமைந்திருந்தால், இன்று தி.மு.க ஆட்சிக்கே வந்திருக்காது!’ – நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

“தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சி மாற்றம். காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டது. பின்னர், 1977-ல் தி.மு.க தூக்கியெறியப்பட்டது. எம்.ஜி.ஆர் உயிரோடிருக்கும் வரையில் வரையில் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதன் பிறகு ஏற்பட்ட ஒரு சூழ்நிலை காரணமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இப்போதுகூட, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சரியாக அமைந்திருந்தால், இன்று தி.மு.க ஆட்சிக்கே வந்திருக்காது. தொடர்ந்து நம் கூட்டணி வெற்றிபெற்றிருக்கும். ஆனால், அனைத்தும் ஒரு காரண காரியங்களுக்கத்தான் நடைபெறும்.” நயினார் நாகேந்திரன்

சூலூர் வந்திறங்கினார் பிரதமர் மோடி! 

பிரதமர் மோடி பயணிக்கும் விமானம், திருவனந்தபரத்தில்  இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்தில் வந்து  இறங்கியது.

`என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் களம் விறுவிறுப்பாகியிருக்கிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க, தமிழ்நாட்டில் 3.66 சதவிகித வாக்குகளையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 2.62 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அ.தி.மு.க-வுடனான கூட்டணி முறிந்துவிட்டதால், பா.ஜ.க தனது தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வருவதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன.

என் மண், என் மக்கள்

அதற்கேற்ற வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.க-வுடன் கரம்கோத்து தேர்தலைச் சந்திக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அதே நேரம் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் பா.ஜ.க கூட்டணியில் சேரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி, `என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

இந்த நிலையில், `என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். அதை முன்னிட்டு பிரமாண்ட மேடை அமைத்து, பா.ஜ.க-வினர் ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்திலிருந்து சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வருகை தரும் பிரதமர், அங்கிருந்து பல்லடம் வந்து, பின்னர் `என் மண், என் மக்கள்’ நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.