வேலைக்கான இன்டர்வியூ இப்போதெல்லாம் ரொம்பச் சுலபமாகிவிட்டது. ஹெட்போனும் செல்போனும் இருந்தால் போதும்… உலகின் எந்த மூலையிலிருக்கும் கம்பெனியின் அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃபரன்ஸில் இன்டர்வியூ அட்டெண்ட் செய்துவிடலாம். தகவல் தொழில்நுட்பம், லாஜிஸ்டிக்ஸ், வங்கிகள், பெரு நிறுவனங்கள் இவற்றுக்கெல்லாம் `வொயிட் காலர் ஜாப்’ எனச் சொல்லப்படும் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது இது சாத்தியம்.

இன்டர்வியூ

ஆனால், மற்ற சிறு நிறுவனங்கள், வியாபாரத்தலங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் உடலுழைப்பைக் கோரும் வேலைகள், கிளரிக்கல் பணிகள், உதவியாளர்கள் உள்ளிட்டவற்றுக்கு பணியாட்களைத் தேர்ந்தெடுக்க வீடியோ கான்ஃபரன்ஸெல்லாம் வேலைக்காகாது. இன்டர்வியூவுக்கு நேரில் போய்த்தான் ஆக வேண்டும். காலங்காலமாக இன்டர்வியூவுக்குத் தயாராவதற்கென்றே சில வழிமுறைகள் இருக்கின்றன. ஒருவரின் பயோ டேட்டா எப்படி இருக்க வேண்டும்; டிரெஸ் கோட் எப்படி இருக்க வேண்டும்… என்பது குறித்தெல்லாம் அனுபவஸ்தர்களும் ஆசிரியர்களும் வழிகாட்டுவார்கள். இப்போதெல்லாம் அந்த வழிகாட்டலுக்கு நூற்றுக்கணக்கில் இ-புக்ஸும், இணையதளங்களும் வந்துவிட்டன. இப்படி டிஜிட்டல் உலகம், வேறொரு கதவைத் திறந்துவிட்டிருக்கிறது.

நேர்காணலின்போது நடந்த காரசார விவாதங்கள், ஏமாற்றங்கள், பாராட்டுகள்… என ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். சில நேரங்களில் இன்டர்வியூவில் பங்கேற்காமலேயே சிலருக்கு வேலை கிடைத்த அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது. அதற்கு எப்போதும் அலர்ட்டாக இருக்கவேண்டியது முக்கியம். நம் திறமையை, நாம் யார் என்பதை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். `நாம வந்தது இன்டர்வியூ அட்டெண்ட் செய்யறதுக்கு… அதை மட்டும் பார்ப்போம்’ என்கிற மனோபாவம் இருக்கவே கூடாது.

Norman Vincent Peale

ஓர் இளைஞர் இன்டர்வியூவுக்குப் போகிறார். 10:00 மணிக்கு இன்டர்வியூ. அவர் 9:45-க்கே போய்விடுகிறார். ஆனால், குறித்த நேரத்துக்கு அவர் அழைக்கப்படவில்லை. மணி 10:15. பொறுமையிழந்தவர் ரிசப்ஷனிஸ்ட்டிடம் போகிறார். “என்னாச்சு… ஏதாவது பிரச்னையா?’’ ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கும் பெண் ஒரு கணம் தயங்குகிறார். சொல்லலாமா, வேண்டாமா என்று யோசிக்கிறார். பிறகு, “ஆமா. மேனேஜர் மேடத்தோட கம்ப்யூட்டர்ல ஏதோ பிராப்ளமாம். அதான்… அதை எப்படிச் சரி செய்யறதுன்னு தெரியாம திணறிக்கிட்டு இருக்காங்க.’’

அந்த இளைஞர் வந்தது ஐடி வேலைக்கு. இதிலெல்லாம் அனுபவசாலி. “நான் வேணா பார்க்கட்டுமா?’’ என்று கேட்கிறார்.
இந்த மாதிரி சூழலில், உள்நுழையும் புதிய ஆட்களைப் பலரும் விமர்சிப்பார்கள். `நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?’, `இது உனக்குத் தேவையில்லாத வேலைதானே?’, `வந்த வேலையை மட்டும் பாரு, சரியா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுவது சகஜம். அன்றைக்கு நடந்தது வேறு. ரிசப்ஷனிஸ்ட், மேனேஜர் மேடத்திடம் பேசிவிட்டு வந்து, அந்த இளைஞரை அழைத்துப்போனார். உள்ளே நுழைந்த இளைஞருக்கு கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்ததுமே என்ன பிரச்னை என்று தெரிந்துவிட்டது. அந்த பெண் மேலாளர், VIM என்ற புரொக்ராமில் வேலை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

இன்டர்வியூ

அது ஒரு டெக்ஸ்ட் எடிட்டர். அதிலிருந்து வெளியே வரும்போது `ஸ்டக்’ ஆகிவிட்டது. இளைஞர் அந்தப் பெண்மணியிடம், `கன்ட்ரோல், +…’ என ஆரம்பித்து எதையெதையோ அழுத்தச் சொன்னார். ஐந்தே நிமிடங்கள், பிரச்னை தீர்ந்தது. பிறகென்ன… அந்த இளைஞருக்கு அங்கேயே வேலை கிடைத்துவிட்டது. அதேபோல ஒரு வேலையில் சேரப்போகிறோம். முதலில், அது நமக்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அதில் தாக்குப்பிடிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும். ஏதோ சம்பளம் வருகிறது என்பதற்காக நம்மால் முடியாத, நமக்குப் பிடிக்காத எந்த வேலையிலும் சேரக் கூடாது.

அமெரிக்கா, கன்சாஸில் இருக்கும் மிகப்பெரிய ஃபர்னிச்சர் கடை அது. அங்கே கஸ்டமர் சர்வீஸ் வேலைக்குச் சேருவதற்காக இன்டர்வியூவுக்கு வந்திருந்தான் டாம் ஜான்சன். 20 வயது இளைஞன். `வாடிக்கையாளர் சேவை என்பது நல்ல வேலைதானே… பொருள்களை வாங்க வருபவர்களிடம் அன்பாகப் பேசி, நடந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதானே…’ என்கிற எண்ணம் டாமுக்கு.

கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர்தான் டாமை இன்டர்வியூ செய்தார். வழக்கமான விசாரிப்புகள். படிப்பு, திறமையை எடைபோடும் கேள்விகள். குடும்பம் குறித்த விசாரிப்புகள். எல்லாம் முடிந்தன. கிட்டத்தட்ட டாமுக்கு அந்த வேலை கிடைப்பது உறுதியாகிவிட்டது. மேனேஜர், டாமிடம் கேட்டார்… “டாம், என்கிட்ட ஏதாவது கேக்கணும்னு உனக்குத் தோணினா கேட்கலாம்.” டாம் ஒரு கணம் யோசித்தான்.

ஆர்தர் ஆஷே

“சார், ஒண்ணுமில்லை. இது கஸ்டமர் சர்வீஸ் வேலை, சரி. இங்கே வர்ற கஸ்டமர்ஸ் எப்பிடியிருப்பாங்க?’’

டாமைப் பார்த்துச் சிரித்தார் மேனேஜர், “சொல்றேன். நான் சொல்றதைக் கேக்குறதுக்கு உனக்கு நேரம் இருக்கா?’’

“என்ன சார் இப்பிடிக் கேக்குறீங்க… சொல்லுங்க சார்.’’

“நம்ம கடைக்கு வர்ற பல பேர் பொருளை வாங்குவாங்க, போயிடுவாங்க. சில பேர் இருக்காங்க… எதை வாங்கினாலும், அதுல ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. உதாரணத்துக்கு ஒரு கஸ்டமரைப் பத்திச் சொல்றேன். இத்தனைக்கும் அவர் நம்மளோட ரெகுலர் கஸ்டமர். அஞ்சாறு வருஷமா நம்ம கடைக்கு வந்துக்கிட்டு இருக்கார். அவர் எப்போ வந்தாலும், `இவரு ஏண்டா நம்ம கடைக்கு வர்றாரு’ன்னு இங்கே இருக்குற எல்லாருக்கும் எரிச்சலும் கோபமும் வரும். ஒரு ஷோபா வாங்குறாருன்னு வையி… அதைப் பத்தியோ, நம்ம சர்வீஸ் பத்தியோ அவர் குறை சொல்லாமப் போனதே இல்லை. `டெலிவரி சரியில்லை, ஷோபா நினைச்ச மாதிரி வசதியா இல்லை, சேல்ஸ் ஸ்டாஃப் கண்ணியமில்லாம முரட்டுத்தனமாப் பேசுறான், ஒரு பொருளை வாங்கினா அதை வெளியே கொண்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா ஆகும்…’ அப்பிடி இப்பிடின்னு பொரிஞ்சு தள்ளிடுவாரு.’’

“ம்… அப்புறம் சார்?’’

“இந்த ஷோரூமைப் பார்த்தேயில்லை… இது மட்டமான, மோசமான இடம் கிடையாது. ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல, ஆயிரக்கணக்குல மக்கள் வந்து போற இடம். ரொம்ப புரொஃபஷனலா, பக்காவா பிசினஸ் நடக்குற இடம். கன்சாஸ் நகரத்துல நடுநாயகமா நம்ம ஷோரூம் இருக்கு. நம்ம கடையைப் பத்திக் கேள்விப்படாதவங்களே இல்லை. அப்பிடி இருக்குற கடையை, ஒரு கஸ்டமர் குறை சொல்லிக்கிட்டே இருந்தா விடுவேனா..?”

“என்ன செஞ்சீங்க சார்?’’

“அந்த கஸ்டமரைத் துரத்தியடிச்சிட்டேன்.”

“என்னது..?”

இன்டர்வியூ

“ஆமாம்ப்பா. கடைசியா அவரு ஒரு டைனிங் டேபிள் வாங்க வந்தாரு. அவர் பணத்தை அவருகிட்டயே திருப்பிக் குடுத்தேன். அப்புறம் அவர்கிட்ட, `சார், நீங்க விரும்புற தரத்துல எங்க கம்பெனியோ, புராடக்டுகளோ இல்லைங்கறது எங்களுக்கு நல்லா தெரியுது. உங்களுக்கு சேவை செய்யுறதுக்கான வாய்ப்பை எங்களுக்குக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. ஆனா, உங்க தேவைகளை எங்களால பூர்த்தி செய்ய முடியலை. மன்னிச்சிடுங்க. இப்போ கெளம்புங்க. தயவுசெஞ்சு திரும்ப எங்க கடைக்கு வராதீங்க’ன்னு சொன்னேன். இந்த மாதிரி ஆளுங்க நம்ம கடையோட பேரையே ஸ்பாயில் பண்ணிடுவாங்க. அதனாலதான், அதை சொல்றவிதத்துல சொன்னேன். இப்ப புரியுதா, இது கொஞ்சம் கஷ்டமான வேலைன்னு. சரி, எப்போ ஜாயின் பண்றே?’’

டாம் யோசித்தான். “சார் இந்த நிறுவனத்துல நிச்சயமா நான் வேலை பார்க்கணும். ஆனா, கஸ்டமர் சர்வீஸ்ல வேலை பார்க்கணும்னா உங்க அளவுக்குப் பொறுமை வேணும். அது வர்றதுக்கு எனக்குக் கொஞ்ச நாளாகும். அது வரைக்கும்…”

“அது வரைக்கும்..?”

“கஸ்டமர்கள் வாங்கின சரக்குகளை வாகனத்துல ஏத்துற இடத்துல எனக்கு வேலை குடுப்பீங்களா?”

“ஏன் அங்கே வேலை வேணும்னு கேக்குறே?”

“ஏன்னா, அந்த வேலையைப் பாக்குறப்போ, கஸ்டமர்கள் மேசை, நாற்காலி, கட்டில், மெத்தை, குழந்தைகளுக்கான பொம்மைகள்னு தங்களோட வீடுகளுக்கான புதுப்புதுப் பொருள்களை வண்டியில ஏத்துறதை சந்தோஷமா பார்த்துக்கிட்டு இருப்பாங்க.

இன்டர்வியூ

அதைப் பார்க்க எனக்கும் சந்தோஷமா இருக்கும். கஸ்டமர் சர்வீஸ்ல அது கிடைக்காது. வாடிக்கையாளர்கள் என்ன சொன்னாலும் பொய்யா சிரிக்கணும். திட்டினாலோ, குறை சொன்னாலோ கேட்டுக்கணும். அது என்னால முடியாது சார்.”

மேனேஜர் யோசனையோடு அவனைப் பார்த்தார். அந்த இன்டர்வியூவில் டாம் எடுத்த முடிவு சரிதானே?      

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.