“ஒரு நல்ல சிந்தனையாளனைச் சிறைவாசம் சிதைக்காது, செதுக்கி வளர்க்கும்…” இதுதான் சாமிவேலுக்குப் பிடித்த வாசகம்.

கடையைத் திறந்து வைக்கும் சிறைத்துறை டி.ஐ.ஜி

தான் புதிதாக பரமக்குடியில் தொடங்கியுள்ள டைலரிங் கடை, இயற்கை ஆயுர்வேத அங்காடி விளம்பரத்தில் இந்த வாசகத்தைத்தான் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த சாமிவேல்? மதுரை மத்தியச் சிறையில் கடந்த 16 ஆண்டுகளாகத் தண்டனை சிறைவாசியாக இருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்பு சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் பரமக்குடியில் சொந்தமாக டைலரிங் மற்றும் இயற்கை ஆயுர்வேத அங்காடியையும் தொடங்கி, மீண்டும் புதிதாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

சாமிவேல் கடை விளம்பரம்

அவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தொடங்கியுள்ள புதிய தொழில் கூடத்தை மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமாருடன், சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியும் சென்று தொடங்கி வைத்துச் சிறப்பித்ததன் மூலம் சாமிவேல் சிறையில் எப்படி நடந்துகொண்டிருப்பார், எப்படியான மனிதர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நம்மிடம் பேசிய சிறைத்துறை அலுவலர்கள், “மதுரை மத்தியச் சிறைக்குள் பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு, அவர்களால் இங்கேயே பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உணவகம், தேநீர்க்கடை, இஸ்திரிக்கடை, பெட்ரோல் பங்கும் சிறைவாசிகளால் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரை மத்திய சிறை

சிறைவாசிகள் தயார் செய்யும் இனிப்பு, காரம், பேக்கரி வகைகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் முதல் ஆடைகள், காலணிகள், கைப்பைகள், மரச்சாமான்கள், கிஃப்ட் பொருள்கள் பலவும் சிறைக்கு வெளியிலுள்ள சிறை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்டேஷனரி பொருள்கள் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

அது மட்டுமின்றி வெல்டிங், மெக்கானிக், மோட்டார் ரீவைண்டிங், கார்பண்டர், டைலரிங் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

சிறைச் சந்தை

பரமக்குடி அருகே கருங்குளத்தைச் சேர்ந்த சாமிவேல் 32 வயதில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்தார்.

9-ஆம் வகுப்பு மட்டும் படித்திருந்த இவர், சிறையிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ பரீட்சை எழுதித் தேர்வாகி பின்பு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ வரலாறு படித்து பட்டம் பெற்றார். சிறையிலேயே பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு சான்றிதழ் பெற்றார்.

அதைத் தொடர்ந்து மதுரை சிறைச் சந்தைக்கு அதிக அளவில் ரெடிமேட் ஆடைகள் தயாரித்தார். பலருக்கும் தையல் கற்றுக் கொடுத்தார். அவருடைய தயாரிப்புகள் பலராலும் விரும்பப்பட்டதால், விடுதலையான பின்பு, அவருடைய ஊரில் டைலரிங் தொழிலைத் தொடங்கியுள்ளார். அதை பரமக்குடியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி நேற்று தொடங்கி வைத்தார்.

கடையைத் திறந்து வைக்கும் சிறைத்துறை டி.ஐ.ஜி

சிறையில் இருக்கும் மற்ற சிறைவாசிகளுக்கு சாமிவேல் போன்றவர்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.” என்றவர்கள்,

“தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலமாக விடுதலைக்குப் பின் தங்களுக்குத் தெரிந்த தொழிலைச் சிறைவாசிகள் சொந்தமாகத் தொடங்கத் தேவையான உபகரணங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட்டு சமுதாயத்தில் இணைவதற்கான நடவடிக்கைகளைச் சிறைத்துறை செய்து வருகிறது” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.