தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளை ஆய்வு செய்த, குழந்தை உரிமைகளுக்கான தொண்டு நிறுவனமான ‘க்ரை’ (CRY), ‘மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, சிறார் வதைக்கு எதிரான போக்ஸோ (POCSO) வழக்குகள் அதிக அளவில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது, முந்தைய ஐந்து ஆண்டுகளில், சிறார் வதை சம்பவங்கள் 96% அதிகரித்து இருக்கின்றன. ஆனால், குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்று இதை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல், இதுவரை காவல்நிலைய படிக்கட்டுகளுக்கே கொண்டு வரப்படாமல் புதைக்கப்பட்ட குற்றங்கள், தற்போது பதிவாக ஆரம்பித்துள்ளன என்கிற வகையிலும் பார்க்க வேண்டும்.

ஆம், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களை பெரும்பாலும் மூடிமறைப்பதுதான் இங்கே வாடிக்கை. அதைக் களைவதில், இந்த போக்ஸோ சட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2012-ம் ஆண்டு சட்டம் அமலாக்கப்பட்டதிலிருந்து இந்திய சமுதாயத்தில் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிதினும் பெரிதே.

புகார் நடைமுறையில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தி, புகார் அளிப்பதற்காக ஹெல்ப்லைன் எண்கள், ஆன்லைன் போர்ட்டல்கள், சிறப்பு விசாரணை நிறுவனங்கள் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளும், அவர்கள் குடும்பங்களும் முன்வந்து புகாரை பதிவு செய்வ தற்கான சூழலை, இந்தச் சட்டம் சாத்தியமாக்கியுள்ளது.

குற்றம் நடந்தது தெரிந்தும் புகாரளிக்காமல்விட்டால் சிறைத்தண்டனை, அபராதமும் உண்டு என்பது இந்தச் சட்டத்தின் மற்றுமொரு முக்கியமான அம்சம். இதுதான், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மறைக்கும் போக்கை பெருமளவு மாற்றியுள்ளது. புகார் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக, குழந்தைகள் நலக்குழுவின் கவனத்துக்கு காவல்துறை கொண்டு செல்ல வேண்டும் என்பது, காவல்துறைக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்பதால், அவர்களும் கவனமாகவே செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

மூடிமறைக்கப்படாமல் வழக்குகள் பதிவாக ஆரம்பித்திருப்பது சிறப்பான முன்னேற்றம். என்றாலும், விசாரணையிலும், வழக்காடலிலும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளி களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதில் தவறும் காவல்துறை, அரசு வழக்கறிஞர்களின் மெத்தனம், அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்கப் படாமல் இருப்பது உள்ளிட்டவை பின்னடைவாகவே இருக்கின்றன. ஆக, சட்டத்தின் வீரியமான செயலாக்கத்துக்கு அரசும் மக்களும் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய நிறைய.

தோழிகளே… நம்மில் பலரும், குழந்தைப் பருவத்தில் இப்படி ஏற்பட்ட காயங்களை வெறும் தழும்பாக எடுத்துக்கொண்டே காலத்தைக் கடந்திருப்போம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அதன் சுவடே இல்லாமல் புழங்கியதை வேறு வழியின்றி பார்த்துக் குமுறியிருப்போம். இனி, அதுபோன்றவர்களை தண்டனையில் இருந்து தப்பவிடவே கூடாது என்கிற சூளுரையை அனைவரும் எடுப்போம். அரசாங்கத்தை நோக்கி தொடர்ந்து குரல்களை எழுப்புவோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.