இந்தியாவில் சினிமா அறிமுகமாகிய நாள்கள் அவை. அப்போது தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் அதிகம் உருவாகின.

அப்படி தென்னிந்தியாவின் முதல் சினிமா தியேட்டர் ‘வெரைட்டி ஹால்’ என்றழைக்கப்பட்ட தற்போதைய ‘டிலைட்’  தியேட்டர்.

டிலைட் தியேட்டர்

1914ம் ஆண்டு வின்சென்ட் சாமிக்கண்ணு என்பவரால் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் கோவையில் கட்டப்பட்டது‌. அது கோவைக்கு தனி அடையாளத்தை உருவாக்கியது. இப்போதும் டிலைட் தியேட்டர் அமைந்துள்ள சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது.

நூற்றாண்டு பெருமை கொண்ட  டிலைட் தியேட்டர் வெறும் படங்கள் திரையிடும் இடம் மட்டுமல்ல. பிரிட்டிஷ் காலத்தில் கோவையில் மின்சாரம் இல்லை. மக்கள் பெரும்பாலும் மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்தினர். கோவையில் இயங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் உதகை அருகேயுள்ள பைக்காரா நீர்த்தேக்கத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பிரிட்டிஷ் அரசு வழங்கியது.

டிலைட் தியேட்டர்

அந்த சமயத்தில் வின்சென்ட் சாமிக்கண்ணு வெளிநாட்டிலிருந்து ஆயில் இஞ்சினை கொண்டுவந்து, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து திரையரங்கை இயக்கினார். அந்த மின்சாரத்தைக் கொண்டு திரையரங்கம் அமைந்துள்ள வெரைட்டி ஹால் சாலை முழுவதையும் மின் விளக்குகளால் ஒளிரச் செய்தார். 1950க்குப் பிறகு திரையரங்கம் வேறொரு நபருக்கு விற்கப்பட்டது. பிறகு வெரைட்டி ஹால் , டிலைட் தியேட்டராக மாறியது.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களின் திரைப்படங்கள் டிலைட் தியேட்டரில் வெள்ளி விழா கண்டுள்ளன. தமிழ், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களும் இங்குத் திரையிடப்பட்டுள்ளன. கருப்பு வெள்ளை தொடங்கி வண்ணப்படங்கள் வரை இந்தத் தியேட்டரில் திரையிடப்பட்டிருக்கிறது. இன்றைய டிஜிட்டல் காலத்தில் போதிய தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படாததால் டிலைட் தியேட்டரில் பழைய திரைப்படங்கள் மட்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

டிலைட் தியேட்டர்

மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டியிட முடியாமல் வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிய பழமையான திரையரங்குகள் ஏராளம் அதற்கு டிலைட் தியேட்டரும் விதி விலக்கல்ல. பராமரிப்பு பணிகளுக்காகக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகத் திரையரங்க நிர்வாகம் கூறிய நிலையில் தற்போது திரையரங்கம் இடிக்கப்படுவது திரைப்பட ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. விரைவில் அந்த இடத்தில் வணிக வளாகம் அமைய உள்ளது.

இந்தத் திரையரங்குகளில் படங்கள் கண்டு மகிழ்ந்த பிரபல ஓவியர் ஜீவானந்தம்,  ” டிலைட் தியேட்டர் வணிக வளாகமாகவே மாறினாலும் அங்குக கோவை மக்களுக்கு உள்ள நினைவுகளை அழிக்க முடியாது. இந்தத் தியேட்டர் தான் முதன்முதலில் கோவை மக்களுக்கு மின்சாரம் தந்தது. இது எப்போதும் வரலாற்று சிறப்புமிக்க தியேட்டராகவே இருக்கும்‌. இந்தத் தியேட்டர் தொடங்கி  110 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு வரை இங்குப் படங்கள் திரையிடப்பட்டுக் கொண்டு தான் இருந்தன. தியேட்டரை இடிப்பதற்கு நிறைய பொருளாதாரக் காரணங்களும் இருக்கலாம்.

டிலைட் தியேட்டர்

ஆனாலும் தியேட்டரை இடிப்பது வருத்தமளிக்கிறது. தற்போது பழைமையான தியேட்டர்கள், வணிக வளாகங்களாக,  உணவகங்களாக மாறியுள்ளன. காலப்போக்கில் அந்தத் தியேட்டரின் சிறப்புகளும் மறக்கப்பட்டுள்ளன. அதனால் டிலைட் தியேட்டரின் சிறு பகுதியையாவது நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும்‌. வருங்கால சந்ததியினருக்கு இந்தத் திரையரங்கின் சிறப்பையும்,  வரலாற்றையும் தெரியப்படுத்த வேண்டும்‌. டிலைட் தியேட்டர் நினைவாக ஒரு சின்ன தோரணவாயிலாவது‌ அமைக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.