தஞ்சாவூர் திலகர் திடலில் அ.ம.மு.க சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, மாநகரச் செயலாளர் ரஜேஸ்வரன் உள்ளிட்டோர் செய்தனர். இதற்காக நாடாளுமன்றம் வடிவில் மேடை அமைத்திருந்தனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சிலர், “தி.மு.க ஆட்சி அனைத்திலும் ஃபெயிலியர் ஆகிவிட்டது. எந்த டெல்லி தினகரனை வேண்டாம் என்றதோ, அதே டெல்லியில் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரனுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள்” என்றனர்.

தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன்

இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் பேசியதாவது, “நான் அரசியலுக்கு வருவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஜெயலிலதா என்னை அழைத்து வந்தார். நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. இந்த ஏழு ஆண்டுகளில் வந்த சோதனையைக் கடந்து, தமிழகத்தில், ஜெயலிலதாவின் உண்மையான ஆட்சியை செய்திடவும், அவர்கள் விட்டுச் சென்ற பொறுப்புகளை செய்திடவும் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.ம.மு.க. ஆர்.கே., நகர் தேர்தலில் தி.மு.க., கூட்டணியும், பழனிசாமி கம்பெனியையும் விழ்த்தி வெற்றி பெற்ற கூட்டம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்து இருக்கலாம். ஆனால் என்னுடைய முயற்சியில் நான் பின் வாங்கியது இல்லை. ஜெயலிலதா மறைவுக்குப் பிறகு பழனிசாமி கொள்ளையடித்தப் பணத்தை வைத்துக்கொண்டு அ.ம.மு.க-வையும், தினகரனையும் அழித்து, அரசியல்ரீதியாக ஒழித்து விடலாம் என பல நிர்வாகிகளை ஆசைகாட்டி விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தார்கள். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தினகரன் தரம் தாழ்ந்து பேசுகிறார் என்கிறார்கள். உங்களுக்கு பதவிக்கொடுத்து, முதல்வர் சீட்டில் அமர வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் நீங்கள். துரோகத்தை தவிர உங்களுக்கு என்ன தெரியும். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க தெரியும். அதைக் கொண்டு இன்றைக்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முதல் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்கும்.

டி.டி.வி.தினகரன்

பழனிசாமி செய்த ஊழலால், தவறான நிர்வாகத்தால், மக்கள் கொதிப்படைந்து, தி.மு.க., திருந்தி இருக்கும் என வாக்களிக்க நினைத்தார்கள். அப்போதே தி.மு.க., என்ற ஊழல் பெருச்சாலிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றேன். ரேஷன் கடைகள் மூலம் சிறுதானிய விநியோகம் செய்வோம் என்றனர். இப்போது ஏற்கெனவே கிடைத்த பொருள்கள்கூட கிடைக்கவில்லை. தடையின்றி மும்முனை மின்சாரம் தருவோம் என்றார்கள். ஆனால் மின்சாரமே கிடைக்கவில்லை. இவ்வளவு பிரச்னை நடக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்… தேர்தலுக்கு நிதி வாங்கி சென்ற பிறகு என்ன ஆனார்கள் என தெரியவில்லை. கம்யூனிஸ்ட்டின் சத்தத்தையே காணவில்லை.

33 மாதங்கள் முடிந்து விட்டது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. தற்போது மக்களை ஏமாற்றும் விதமாக, தேர்தல் அறிவிக்கவில்லை, கூட்டணியும் முடிவாகவில்லை. ஆனால் 37 அல்லது 39 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள். தி.மு.க., மீது மக்கள் கோபமாய் இருக்கிறார்கள். தி.மு.க திருந்தவே திருந்தாது என ஆணித்தரமான முடிவுக்கு வந்து விட்டனர். இதனால் அ.ம.மு.க., தான் ஒரே மாற்று கட்சி என உணர்ந்து வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.

தி.மு.க அரசை கண்டித்து நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன்

கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை சில நாடாளுமன்ற தொகுதிகளில் சிலர் 15 ஆயிரம் பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அந்த தகவல் எனக்கு கிடைத்தது அதன் மூலம் தி.மு.க-வுக்கு ஆதரவாக வந்த சர்வே பொய் என்பதை உறுதி செய்துள்ளனர். தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் எப்படி மக்களை ஏமாற்றினார்களோ, சர்வே என்ற பெயரில் ஏமாற்றுவதற்கு தி.மு.க-வின் பின்னணியில் முயற்சி நடந்து வருகிறது. காரணம், தி.மு.க., கூட்டணியும், அவர்கள் அமைத்த இந்தியா கூட்டணியும் சிதறிவிட்டது. கர்நாடகா அணைக்கட்டுவதை தடுக்க முடியமால், ஸ்டாலின் வேஷம் போட்டு வருகிறார். 33 மாதங்களில் தி.மு.க-வால் மக்களுக்கு என்ன கிடைத்தது என அனைவரும் சிந்திக்க துவங்கிவிட்டார்.

அ.ம.மு.க சுயம்பாக தோன்றியது. எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தி.மு.க., துணைச் செயலாளரான ஆ.ராசா சமீபத்தில் எம்.ஜி.ஆர்., குறித்து வாய் கூசும் விதமாகப் பேச என்ன தகுதி இருக்கிறது. இவர் செய்வதைக் கண்டித்து பழனிசாமி கூட்டம் போடுகிறார். ராசாவுக்கும், பழனிசாமிக்கும் எந்த தகுதியும் இல்லை. மறைந்த தலைவர்கள் பற்றி பேசினால் ராசாவுக்கு நல்லதில்லை. ராசா போன்றவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். தமிழக அரசியலில் திசை திரும்பி, மக்களை ஏமாற்றி ஊழல் முறைகேடு செய்வதை தொடர்ந்து வரும் தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.