கும்பகோணம், பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 42). இவர் கோயம்புத்தூரில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஆர்த்தி (வயது 40), கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் ஆரூத்ரா, 2-ம் வகுப்பு படிக்கும் சுபத்ரா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆர்த்தி

இந்நிலையில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி விட்டு, தனது இரண்டு மகள்களை டூவீலரில் அழைத்து சென்றுள்ளார் ஆர்த்தி. மதியம் சுமார் 2:30 மணிக்கு மேல் சுந்தரபெருமாள் கோயில் அருகே உள்ள உத்தாணி ரயில்வே கேட்டில் டூவீலரை நிறுத்திவிட்டு, தண்டவாளம் அருகே சென்றுள்ளார். அப்போது செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் ரயில் வந்துள்ளது.

உடனே தனது இரண்டு மகள்களையும் கட்டியணைத்துக் கொண்ட ஆர்த்தி, கண்களை மூடிக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு, `என்னை மன்னிச்சிடுங்கடா செல்லம்’ எனக் கத்தியபடி ரயில் முன்பு பாய்ந்திருக்கிறார். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மகள்களுடன் ஆர்த்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவர் வசித்த பொன்னுசாமி நகர் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆர்த்தியின் மகள்கள்

வளைக்காப்பிற்கு செல்வதாக சொன்னவர் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார் என்று தெரியவில்லை என அழுது புலம்பினர். இந்த சோகம் சம்பவம் அடங்குவதற்குள், நேற்று இரவு திருவிடைமருதூர் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய தன்னுடைய மகளைக் கட்டியணைத்துக் கொண்டு மற்றொரு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால், கும்பகோணம் பகுதி சோகத்தில் மூழ்கியது.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாதான வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி ரேவதி வயது 50. இவர்களது மகள் மகேஸ்வரி வயது 30. மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் ரேவதி தன் மகள் மகேஸ்வரியை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டாவளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு மகளை கட்டியணைத்து கொண்டு பாய்ந்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரேவதி தனியார் குழுக்களில் கடன் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கடனுக்கான தொகையை அவரால் சரியாக திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தனியார் குழுவை சேர்ந்த ஊழியர்கள் ரேவதியை தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதில் மனமுடைந்த ரேவதி தன் மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.