மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வங்கித் தேர்வுக்காகக் கடந்த 4 மாதங்களாகப் படித்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீகாந்த்

மதுரையின் முக்கியப்பகுதியான தல்லாகுளத்திலிருந்து நத்தம் செல்லும் சாலையில் அழகான வடிவமைப்புடன் 6 தளங்களுடன், மிகப்பெரிய வாகனம் நிறுத்தும் வசதியுடன் ரூ 215 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுக் கடந்த ஆண்டு முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

நூலகமா, மிகப்பெரிய வணிக வளாகமா என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் வகையில் சர்வதேச தரத்துடன், முழுவதும் குளிரூட்டப்பட்ட நவீன டிஜிட்டலைஸ்ட் வசதிகள் நிறைந்த நூலகமாக அமைந்துள்ள இங்கு சிறார், பெரியவர், போட்டித்தேர்வர்கள், ஆய்வாளர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நூலகப்பிரிவுகள் ஒவ்வொரு தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அதில் முக்கியமாக தரை தளத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்குப் பயன்படும் வகையில் சிறப்புப் பிரிவு அமைந்துள்ளது. அங்கு வங்கித் தேர்வுக்குப் பயிற்சி எடுத்த ஶ்ரீகாந்த் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதுதான் தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து – அங்குச்செல்வி தம்பதியின் மகன் ஸ்ரீகாந்த். பார்வை மாற்றுத்திறனாளியான ஶ்ரீகாந்த் தனது கடின உழைப்பின் மூலம் பி.ஏ. பி.எட். முடித்தவர், பின்பு போட்டி தேர்வுகளுக்குத் தயாராகி டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில்தான் நான்கு மாதங்களுக்கு முன்பாக மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வந்தவர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த்

இடைவிடாது படித்த ஸ்ரீகாந்த் தனியார் வங்கி நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று உதவி மேலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், “வங்கித் தேர்வில் வெற்றி பெற்று வங்கி உதவி மேலாளராகத் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகமும், இங்கு பணியாற்றுபவர்களும் எனக்கு நன்றாக உதவினார்கள். இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவை என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.