தமிழ் சினிமாவில் 80களின் இறுதியில் பிரபலமாக இருந்தவர் நடிகை அமலா. கொடி பறக்குது, வெற்றி விழா, சத்யா, மைதிலி என்னை காதிலி, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு விலங்குகளை காப்பதிலும் அதிக கவனம் கொண்டிருக்கிறார். அமலா என்றழைக்கப்படும் அமலா அக்கினேனி. இவர் 1992-ல் `ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத்’ (Blue Cross of Hyderabad) என்ற விலங்குகள் நல காப்பகத்தை தொடங்கினார். இந்த வளாகத்தில் நாய்கள், பூனைகள், ஒட்டகங்கள், எருமைகள், கழுதைகள் மற்றும் குரங்குகள் எனக் காயம்பட்ட, கைவிடப்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

நாகார்ஜுனா, அமலா

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அமலா, விலங்குகள் நல காப்பகம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “நாய்களோடு எனக்கு இருக்கும் பந்தம் சிறுவயதிலேயே உண்டானது. நான் ஹாஸ்டலில் படிக்கும்போது அங்கு 15 நாய்கள் இருக்கும். 10 வருடங்கள் ஹாஸ்டலில் இருந்து கொண்டே படித்தேன். அப்போது நாய்கள்தான் எனக்குத் துணையாக இருந்தன. நாய்கள் இறக்கும்போது அழுவோம், உடல்நிலை சரியில்லாத போது கவனித்துக் கொள்வோம். நாய்களோடு சேர்ந்து விளையாடுவோம்.

நடிகை அமலா

அதன்பின்னர், சென்னையில் செயல்படும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா என்ற விலங்குகள் நல அமைப்பில் தன்னார்வலராக இருந்தேன். நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பிறகு ஹைதராபாத் வந்தேன். இங்கு காயம்பட்ட, நோய்வாய்ப்பட்ட விலங்குகளைத் தெருக்களில் கண்டேன். அதை எடுத்து வந்து சிகிச்சையளித்து பராமரிக்க ஆரம்பித்தேன். விரைவிலேயே வீடு முழுக்க காயம்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை நிறைந்துவிட்டன. எருமை, கழுதை, மங்கூஸ், நாய்கள், பூனைகள் என அனைத்தும் காயம்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்தன.

விலங்குகளுக்கு உதவி

 நாகர்ஜுனா ஒரு நாள் வந்து, ‘வீடு முழுவதும் விலங்குகள் நிறைந்துவிட்டன. இதற்கு மேலும் எதையும் கொண்டு வர முடியாது. நீ ஏன் இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லக் கூடாது’ எனக் கேட்டார். அவரே இதற்காக முதல் வேனையும் நன்கொடையாக வழங்கினார். இப்படித்தான் ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத் தொடங்கியது. 1993 ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தோம். 

31 வருடங்களாகி விட்டன. இதற்கான புகழை நான் ஒருத்தி மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் பக்கபலமாக உதவினார்கள். இதற்கு எந்த விலையும் கொடுக்கமுடியாது. அந்த அளவுக்கு தன்னார்வலர்களின் ஈடுபாடு இருந்தது. 

இண்டி நாய்களும் அதன் முக்கியத்துவமும்…

தெருவில் வாழும் நாய்களுக்கென தனி இனம் என்று எதுவும் கிடையாது. இது பல நாய் இனங்களின் கலவையில் இயற்கையாகவே உருவான நாய்கள். இதனை நாங்கள் `இண்டி நாய்கள்’ (indie dogs) என்று சொல்கிறோம். 

எல்லா கிராமங்களில் உள்ள வீடுகளிலும் ஒரு இண்டி நாய் கதவு பக்கத்தில் அமர்ந்திருக்கும். டீ கடைகளில் வருபவர்கள் பிஸ்கட் போடுவார்கள். கூட்டமாக இருக்கும் இந்த நாய்கள், யார் அன்புடன் உணவிடுகிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக இருக்கும். 

தெரு நாய்களுக்கு முகாம்

ஒரே இனத்தைச் சேர்ந்த நாய்களை பெடிக்ரீ (pedigree dogs) என்கிறோம். இந்த நாய்களுக்கான சீரற்ற இனப்பெருக்க புரோக்ராம்கள் நடக்கும். தங்களது நாயை பலர் அங்கு எடுத்துச் செல்வதால் மோசமான இனப்பெருக்க நடவடிக்கைகளால் நாய்களின் உடல்நிலை மோசமடைகிறது. இதனைச் சரிசெய்ய அதிக பணம் தேவைப்படும். அவ்வளவு பணத்தை செலவு செய்ய விருப்பமில்லாமல், அந்த நாயை தெருவில் விட்டு விடுவார்கள். 

நீங்கள் ஒரு நல்ல பெடிக்ரீ நாயை வளர்க்க விரும்பினால் நான் அதற்கு மதிப்பு அளிக்கிறேன். அதேசமயம் அடுத்து ஒரு நாயை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் 2-வது இண்டி நாயை (தெரு நாய்) தேர்ந்தெடுங்கள்.

ஏனெனில் பெடிக்ரீ நாய்கள் மென்மையானதாக இருக்கும். இண்டி நாய்கள் அதன் உயிரைக் கொடுத்து உங்களையும் உங்களது குடும்பத்தையும், நீங்கள் வளர்க்கும் பெடிக்ரீயையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும். 

ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத்தின் சேவைகள்…

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான விலங்குகள் காப்பகத்தில் சமைத்த உணவுகளை வழங்குகிறார்கள். இதனால் வயிற்றுபோக்கால் விலங்குகள் அவதியுறுகின்றன. நீங்கள் எவ்வளவு நன்றாக சமைத்தாலும், உணவு சமைக்கப்பட்ட அரை மணி நேரத்திற்கு பின்னர், அதன் தன்மை மாறத் தொடங்கிவிடுகிறது. இந்த பிரச்னையை ப்ளூ கிராஸும் எதிர்கொண்டது. 

ப்ளூ கிராஸில் நாய்களுக்கு வழங்கப்படும் உணவான `Kibble’ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, விலங்குகள் மோசமான நிலையில் இருந்து மீள்வதைக் காண முடிந்தது. விலங்குகளின் சருமம் மற்றும் உடல்நலம், மனநலம் ஆரோக்கியமடைந்து விளையாட ஆரம்பித்தது.  

தன்னார்வலர்களுடன்

விலங்குகள் ஆரோக்கியமாக இருப்பதால் இந்த இண்டி நாய்களை வாங்கப் பலரும் முன்வந்தனர். தெருவில் விடப்படும் நாய்களைத் தூய்மைப்படுத்துவது, சர்வதேச அளவிலான சிறந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவது, நல்ல உணவுகளைக் கொடுப்பது, நாய்களைத் தத்தெடுக்கும் நிகழ்வுகள் மற்றும் டாக் ஷோ, தடுப்பூசி நிகழ்ச்சிகளை நடத்துவது என முன்னெடுப்புகளைப் பல தசாப்தங்களாக செய்து வருகிறோம். 

இயற்கையோடு ஒன்றிய மனம்…

இயற்கையோடு ஆழமான பிணைப்பு எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன். நீங்கள் இயற்கையோடு இணைந்து இருக்கும் போது உயிர்கள் அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் நினைப்பீர்கள். இந்த உயிரினங்களுக்கு என்னால் முடிந்ததை உதவியிருக்கிறேன். அதேசமயம் அவைகளும் எனக்கு உதவி இருக்கிறது. அவை என்னை மனிதராக உணர்வதற்கு உதவியிருக்கிறது. 

நாய்க்குட்டிகளுடன்

எனக்கு ஞாபகம் இருக்கிறது. எனக்கு அம்மாவாக இருப்பதில் பயம் இருந்தது. ஒருமுறை ஒரு நாய் புதருக்குள் சென்று நாய் குட்டிகளை ஈன்றது. பிறகு உணவுக்காக வெளியில் தேடி அலைந்து சாப்பிட்டு, குட்டிகளுக்கு பால் கொடுத்தது. 3 வாரங்களுக்குப் பிறகு அந்த குட்டிகளும் வெளியே வந்து சுற்ற ஆரம்பித்துவிட்டன. இதுவரை யாரும் வழங்காத தாய்மை குறித்த சிறந்த மெசேஜ் அந்த நாயைப் பார்த்தபோது கிடைத்தது. 

சுவரில் இருக்கும் பல்லி, தோட்டத்தில் இருக்கும் தவளை கூட எனக்கு சில நேரங்களில் ஆறுதலாக இருந்துள்ளது. இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், விலங்குகளை நேசிப்பவர்களுக்கு தெரியும். நான் அதை நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.