கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற குருவாயூர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி எழுந்தருளல், ஸ்ரீவேலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில கோயில்களில் கோசாலை அமைத்து பசுக்கள் பராமரிக்கப்படுவது போன்று, குருவாயூர் கோயிலில் யானைக்கோட்டையில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. யானைகளைப் பராமரிக்க குருவாயூர் தேவசம்போர்டு சார்பில் பாகன்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குருவாயூர் கோயிலில் உள்ள கிருஷ்ணா, கேசவன் ஆகிய இரண்டு யானைகளையும் பாகன்கள் தடியால் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவேலிக்கு அழைத்துச் செல்லப்படும் யானைகளைக் கட்டி வைக்கும் தெற்கு நடையில் உள்ள ஸ்ரீவேலிபறம்பில் யானைகளை குளிப்பாட்டும்போது இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது. தடியால் தாக்கப்படும்போது யானைகள் எழுப்பிய பிளிறல் சத்தம் கேட்பவர்கள் மனதைக் கரைப்பதாக உள்ளது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் குருவாயூர் தேவசம்போர்டு ஆகியவை பாகன்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளன.

குருவாயூர் கோயில்

யானைகளைத் தாக்கிய பாகன்கள் மீது வனத்துறையும் வழக்குப் பதிந்துள்ளது. மேலும், பாகன்களை தேவசம்போர்டு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி யானைக்கோட்டை பொறுப்பு வகிக்கும் நிர்வாகியிடம் விளக்கம் கேட்டுள்ளார் தேவசம்போர்டு தலைவர் வி.கே.விஜயன். இரண்டு பாகன்களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் வி.கே.விஜயன் கூறுகையில், “யானைகளைத் தாக்கும் வீடியோவில் இருக்கும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இரண்டு பேர் தாக்கும்போது மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் கூட்டாகச் சேர்ந்து தாக்குதலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகத் தோன்றுகிறது” என்றார். இந்தச் சம்பவம் குறித்து கேரளா ஐகோர்ட் குருவாயூர் தேவசம்போர்டிடம் விளக்கம் கேட்டுள்ளது.

யானை தாக்கப்படும் காட்சி

யானைகளை ஸ்ரீவேலிக்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அது இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ எனவும் கூறப்படுகிறது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் யானைக்கோட்டைக்குச் சென்று கிருஷ்ணா, கேசவன் ஆகிய யானைகளைப் பரிசோதித்தனர். அவை ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.

பாகனால் தாக்கப்பட்ட கிருஷ்ணா யானை தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதாவால் குருவாயூர் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகும். குருவாயூர் யானைக்கோட்டையில் அடிக்கடி யானைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அப்படி நடக்காமல் கண்காணிக்க சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் எனவும் வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.