ஆவுடையார் கோயிலுக்குள் நுழைந்தால் பதவி இழந்து ஆண்டியாகி விடுவோம் என்ற மூட நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. இதேபோல பழநியாண்டவரின் மெய்ஞ்ஞான கோலமான ஆண்டி வடிவத்தை தரிசிக்கவும் அச்சம் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள்.

தஞ்சாவூர் பெரிய கோயில்

கடுமையான போட்டிகள் நிறைந்த எந்த துறையிலும் மூட நம்பிக்கைகளும் இருக்கவே செய்யும். குறிப்பாக திரையுலகம், அரசியல் உலகம் இரண்டிலுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதால் ‘எத்தைத் தின்றால் பித்தம் தணியும்’ என்ற போக்கில் கண்டதையும் நம்ப ஆரம்பித்து விடுவார்கள். அதில் சில கோயில்களுக்குச் சென்றால் பதவி போய்விடும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உள்ளது என்பதே உண்மை. அப்படியான சில கோயில்களை, எதற்கும் அஞ்சாத அரசியவாதிகளையே அஞ்ச வைக்கும் கோயில்களைக் காண்போம்.

மத்தியப் பிரதேசத்தின் முதல்வர்கள், அரச குடும்பத்தினர், அரசியல்வாதிகள் பலரும் அச்சப்படும் கோயில் உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோயில் என்கிறார்கள். தப்பித் தவறி இங்கு அரசியல்வாதிகள் சென்றாலும் இரவைக் கழிப்பதில்லை. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதில் ஒருவர்.

உஜ்ஜயினி ஸ்ரீ மகாகாளர்!

அவர் உஜ்ஜயினி சென்று பிரார்த்தனை செய்தாலும் அங்கு தங்குவதில்லை. அதேபோல அங்கு இரவில் தங்கும் அரசு சம்பந்தப்பட்ட அல்லது அரச குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதாவது கெட்டது நடக்கும் என்பது அங்கு நிலவும் நம்பிக்கை.

அதேபோல மத்தியப் பிரதேசத்தில் உள்ள கடம்கிரி மலை பற்றியும் மூட நம்பிக்கையும் பல கட்டுக்கதைகளும் நிலவுகிறது. அங்குள்ள அரசியல்வாதிகள் கடவுளரின் கோபத்திற்கு பயந்து கடம்கிரி மலை மீது விமானத்தில் பறப்பதைக் கூடத் தவிர்க்கின்றனர். காரணம் இங்கு வனவாசத்தின் போது, ஸ்ரீராமர் இங்கு சில காலம் தங்கியிருந்ததாகவும், அவரைக் கடந்து யாராவது விமானத்தில் அல்லது ஹெலிகாப்டரில் பறந்தால், ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் நம்பப்படுகிறது.

காலபைரவர் கோயில் அமைந்துள்ள இச்சாவார், மத்தியப் பிரதேசத்தில் உள்ள நகரம். முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது 12 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் இங்கு செல்லவில்லை. அதிலும் இச்சாவர் அவரது சொந்த மாவட்டமான செஹூரில் உள்ளது. ‘ஆட்சியை இழக்க நேரிடும்’ என்ற மூடநம்பிக்கை காரணமாக சவுகான் இச்சாவாருக்கு செல்லவில்லை என்று அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேந்திர படேல் சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

தஞ்சை பெரிய கோயில்

உண்மையில் கைலாஷ் நாத் கட்ஜு 1957-ல் இச்சாவாருக்குச் சென்ற பிறகு முதல்வர் நாற்காலியை இழந்தார். 1967-ல் துவாரகா பிரசாத் மிஸ்ரா, 1977-ல் கைலாஷ் ஜோஷி, 1980-ல் வீரேந்திர குமார் சக்லேச்சா, 2003-ல் திக்விஜய சிங் என நீளமான வரிசையால் இன்றும் அங்கு செல்ல அரசியல்வாதிகள் அச்சம் கொள்கிறார்கள்.

1975-ல் பிரகாஷ் சந்த் சேத்தி, 1977-ல் ஷ்யாமா சரண் சுக்லா, 1985-ல் அர்ஜுன் சிங் ஆகியோர் அசோகர் காலத்திலிருந்தே புகழ் பெற்ற மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத் தலைநகரத்துக்குச் சென்றால் பதவி இழந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் இங்கு வடநாட்டு அரசியல்வாதிகள் யாருமே செல்வதில்லை.

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நம்முடைய தமிழநாட்டிலும் இரண்டு கோயில்களுக்கு வருவதென்றால் எல்லா அரசியல்வாதிகளுக்குமே கிலி தான். முதலில் தஞ்சை பெரிய கோயில். சரித்திரப் புகழ் கொண்ட இந்த கோயிலைப் பற்றி எப்படித்தான் இப்படி வதந்தியைப் பரப்பினார்களோ தெரியவில்லை.

‘ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க அனுமதிக்காத தொல்லியல் துறை, வராஹி அம்மனுக்கு புதிய மண்டபம் கட்ட அனுமதித்தது ஏன்?’ என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி பிரச்னை எழுப்பினார். அந்த மண்டபம் இடிக்கப்பட்ட பிறகு 1976-ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு ராஜராஜ சோழன் பதவியேற்ற ஆயிரமாவது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாட (ஓராண்டுக்கு முன்பாகவே) அப்போதைய முதல்வர் எம்ஜியார் விரும்பினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் இந்திரா காந்தியும் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே எம்ஜியார் உடல் நலம் குன்றினார். இந்திரா காந்தியும் மறைந்தார்.

மாணிக்கவாசகர்

இதேபோல ஜயில்சிங், சங்கர் தயாள் சர்மா ஆகியோரின் தஞ்சை கோயில் வருகைக்குப் பிறகு இந்த கோயிலுக்கு வந்தாலே தீமை வரும் என்று பரப்பப்பட்டது. பிறகு தஞ்சை பெரிய கோயிலின் 1000-மாவது விழா நடைபெற்றது. கோயிலுக்கு வெளியே ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, ஆ. ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதானது என வதந்தி பரவியது. இப்படி பல வதந்திகள் பரவியதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சை கோயில் பக்கமே செல்லவில்லை. அதிலும் உச்சமாக அவர் ஆட்சியில் தஞ்சைக்கு ஒருமுறை வந்தபோது, பெரிய கோயிலுக்கு 1 கி.மீ முன்பாக அவரின் ஹெலிகாப்டர் இறங்க தளம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து தஞ்சை கோயிலின் விமானம் தெரிகிறது என்பதற்காக கீற்றுகளால் மறைப்பை உருவாக்கி ஜெயலலிதாவின் அச்சத்தைப் போக்கினார்கள் அதிகாரிகள். தஞ்சை பெரிய கோயில் மீது இப்படி எல்லாம் தவறாக விஷமிகள் அவதூறு பரப்பினார்கள் என்றால் பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோயில் நிலைமையோ மோசம்.

சிற்ப அழகுக்கும் புராணப் பெருமைகளுக்கும் சிறந்தது ஆவுடையார் கோயில். ஆனால் இங்கு எந்த அரசியல்வாதியும் செல்வதில்லை. மதுரையின் அமைச்சராக இருந்த ‘தென்னவன் பிரம்மராயன்’ எனும் திருவாதவூரர் இந்த பெருந்துறைக்கு வந்து ஈசனால் ஆட்கொள்ளப்பட்டார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை எல்லாம் செலவழித்து இந்த கோயிலைக் காட்டினார். இதனால் கோபமான அரிமர்த்தன பாண்டியன் அமைச்சரை தண்டித்தான். அமைச்சராக இந்த ஆலயத்துக்குள் நுழைந்தவர் துறவியாக வெளியே வந்தார் என்பது இந்த ஆலயத்தின் தலவரலாறு கூறும் தகவல். மாணிக்கவாசகரின் அமைச்சர், ஆண்டி என இரு கோலமும் இன்றும் ஆலயத்தின் முகப்புத் தூணில் உள்ளது. இதனால் இந்த ஆவுடையார் கோயிலுக்குள் நுழைந்தால் பதவி இழந்து ஆண்டியாகி விடுவோம் என்ற மூட நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. இதேபோல பழநியாண்டவரின் மெய்ஞ்ஞான கோலமான ஆண்டி வடிவத்தை தரிசிக்கவும் அச்சம் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பழநியாண்டவர்

‘மனித மனதில் அச்சம் என்ற ஒன்று உள்ளவரை மூட நம்பிக்கை எந்த வகையிலாவது இருந்துதான் தீரும்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். அச்சம் கடந்த அன்பு நிலையே உண்மையான ஆன்மிகம், என்பதை உணர்ந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.