சோனி டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ Shark Tank India. இது ஒரு பிசினஸ் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோவில் கன்டெஸ்ட்டென்ட்கள் தாங்கள் கண்டுபிடித்த படைப்புகளைக் கொண்டுவந்து காண்பித்து புளகாங்கிதம் அடைவார்கள்.

அப்படி AI (Artificial Intelligence) மூலம் தயாரிக்கப்பட்ட ஓர் அற்புதமான ஹைட்ரஜன் செல் காரைத் தன் சொந்த முயற்சியில் கண்டுபிடித்துக்கொண்டு வந்த ஓர் இளைஞரை, அடுத்த சுற்றுக்குத் தகுதியில்லை என்று நிராகரித்திருக்கிறார்கள் அந்த ஷோவின் 3–வது சீஸன் ஜட்ஜ்களான வினீத்தா சிங், நமீதா தப்பார், அனுபம் மிட்டல் ஆகியோர். 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த Yavatmal எனும் கிராமத்தைச் சேர்ந்த ‘Harshal Mahadev Nakshane’  எனும் 27 வயதாகும் இளைஞர்தான், அந்த AI கார் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர். திடீரென அந்த ஷோ நடக்கும் மேடையில் பச்சை நிற சொகுசு காரில் அவர் என்ட்ரி கொடுத்தபோது, எல்லோரும் கைதட்டி வாவ் எனச் சொல்லி ஆர்பரித்தனர். பார்ப்பதற்குப் பழைய செவர்லே க்ரூஸ் அல்லது ஃபோர்டு மஸ்டாங்… அல்லது நிஸான் GTR இப்படி ஏதோ ஒரு சாயலில் கட்டுமஸ்த்தாக இருக்கிறது அந்தக் கார். டபுள் டோர் வெர்ஷனாக டிசைன் செய்திருந்தார் ஹர்ஷல் மஹாதேவ். பக்கவாட்டில் AI Cars.in என்கிற ஸ்டிக்கரிங் இருந்தது. 

AI கார்களைத் தயாரிப்பதற்காகவே மஹாராஷ்டிராவில் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி நடத்தி வருகிறாராம் ஹர்ஷல். அந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் மூலமாக, தனது டீம் நண்பர்கள் உதவியுடன் இந்தக் காரை அவர் ரெடி செய்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதைச் செய்வதற்கு ரூ.60 லட்சம் செலவாகியிருப்பதாகவும் சொன்னார். 

ஹர்ஷல் கண்டுபிடித்த AI Car

இப்போதைக்கு நம் ஊரில் AI என்றால் அடாஸ் லெவல்–2–யைச் (Advanced Driver Assistance System) சொல்லலாம். தானாக பிரேக் பிடிக்கும் எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட், முன்னே செல்லும் கார்களின் தன்மையைக் கண்டுபிடித்து அதுவாகவே பிரேக் பிடித்து – அதுவாகவே ஆக்ஸிலரேஷன் செய்யும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் மாறினால் தானாக ஸ்டீயரிங் மாறித் திரும்பும் லேன் டிப்பார்ச்சர் வார்னிங், பேசாமல் சீட்டில் மட்டும் உட்கார்ந்து கொண்டால், டைட்டான பார்க்கிங் ஸ்பேஸிலும் ஆட்டோமேட்டிக்காக பார்க் ஆகும் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் சிஸ்டம், விபத்துகளைத் தடுக்கும் கொலிஷன் அவாய்டன்ஸ் – இப்படி அடாஸ் லெவல்களில் ஏகப்பட்ட ஃப்யூச்சர்கள் இருக்கின்றன. இப்படி நம் ஊரில் முதலில் அடாஸ் வசதிகளுடன் வந்த கார் எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்ட்டர் எனும் எஸ்யூவிதான். அதன் பிறகு இப்போது டாடா, ஹூண்டாய், கியா என்று எல்லா நிறுவனங்களுமே அடாஸில் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டன. 

MG Astor

இந்த ஷோவுக்காக ஹர்ஷல் மஹாதேவ் செய்திருப்பது எந்த மாதிரியான AI தொழில்நுட்பம் என்று தெரியவில்லை என்றாலும், இது ஒரு ஹைட்ரஜன் ஃப்யூல் செல் கார் என்பதற்காகவே இதற்கு ஒரு லைக் போடலாம் போல் தெரிகிறது. காரணம், பெட்ரோல்/டீசல்… பிறகு சிஎன்ஜி… அப்புறம் எலெக்ட்ரிக்… அதன் பிறகு ஹைட்ரஜன் ஃப்யூல் செல் கார்களுக்குத்தான் டிமாண்ட் அதிகமாக இருக்கப் போகிறது.

Shark Tank India Reality Show

காரணம், இப்போது நாம் கண்ணில் கண்ட ஒரே ஹைட்ரஜன் செல் ஃப்யூல் கார் – டொயோட்டா மிராய். அதேபோல், எம்ஜி நிறுவனமும் போன ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இந்த AI காருக்கு பேட்டன்ட் உரிமையாக அவர் 2 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் நிகழ்ச்சியில். 

இந்த காரில் உள்ள ஹைட்ரஜன் சிலிண்டர்களில் எரிபொருளை நிரப்ப 5 நிமிடம் ஆகுமாம். ஒரு தடவை எரிபொருள் நிரப்பினால், இதன் ரேஞ்ச் 1,000 கிமீ என்கிறார் ஹர்ஷல். இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜ்கள், இந்த காரில் ஒரு டிரைவ் போலாமா என்று கேட்டுப் பார்த்து மும்பை ஃபிலிம் சிட்டியில் ஒரு டிரைவும் சென்றனர். கார்னரிங் ஹேண்ட்லிங், அட்டானமஸ் வசதிகள், பெர்ஃபாமன்ஸ் என்று எல்லாமே பக்காவாக இருந்தாலும், சில மேடுகளில் ஏறத் திணறியதாகச் சொல்கிறார்கள். 

Toyota Mirai

‘இம்ப்ரஸ்ஸிவ் ஆகத்தான் இருக்கிறது; ஆனாலும்’ என்கிற தொனியில் இழுத்து, அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘இது மாதிரி சொந்தமாக கார்களைச் செய்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, பேசாமல் நீங்கள் ஏதாவது ஆட்டோமொபைல் கம்பெனிக்கு வேலைக்குப் போங்க ஹர்ஷல்! 2 கோடி ரூபாயெல்லாம் இதற்கு அதிகம்!’’ என்று நடுவர்கள் அவரை அடுத்த சுற்றுக்கு முன்னேற விடாமல் எலிமினேட் செய்திருக்கிறார்கள். 

அப்புறமென்ன… வழக்கம்போல், ‘‘ஆமாப்பா, நம் ஊரு எலான் மஸ்க்கும் ஹென்றி ஃபோர்டும் சொல்லிட்டாங்க!’’ என்று ஜட்ஜ்களை சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.