நாடாளுமன்றத்தில் ஒரு வாரமாக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மக்களவை, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது உரையாற்றிய பிரதமர் மோடி, பா.ஜ.க-வின் இந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் மக்களுக்கு செய்யப்பட்டது என்பதைவிட, அதிகமாக காங்கிரஸை விமர்சித்துவந்தார். குறிப்பாக நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை விமர்சித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர், மத்திய நிதியமைச்சர், முன்னாள் பிரதமர் ஆகிய பதவிகளை அலங்கரித்த காங்கிரஸ் மூத்த எம்.பி மன்மோகன் சிங்கை, நாடாளுமன்றத்தில் மோடி புகழ்ந்திருக்கிறார். முன்னதாக, ஓய்வுபெறும் எம்.பி-க்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மோடி, “இந்த சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது (டெல்லி அவசர சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு) நிகழ்ந்த ஒன்றை இங்கு நினைவு கூறுகிறேன். அந்த வாக்கெடுப்பில், ஆட்சியிலிருக்கும் அரசு வெற்றிபெறும் என்று தெரியும். ஆனாலும், மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். ஒரு எம்.பி தனது கடமைகளில் விழிப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது. உண்மையில் அவர் உத்வேகம் தரக்கூடியவர்.

பிரதமர் மோடி

மன்மோகன் சிங் இதில் யாரை ஆதரித்தார் என்பது விஷயமல்ல. இந்த ஜனநாயகத்தை அவர் பலப்படுத்தினார் என்றே நான் நம்புகிறேன். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டிக்கொள்கிறேன். தலைவராகவும், எதிர்க்கட்சியாகவும் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு மகத்தானது. சித்தாந்த வேறுபாடு என்பது குறுகிய காலம்தான். ஆனால், அவர் இந்த சபையையும், நாட்டையும் நீண்ட காலம் வழிநடத்திய விதம், நமது ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்தின்போதும் அவர் செய்த பங்களிப்புகள் ஆகியவற்றுக்காக மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார்” என்று புகழ்ந்தார்.

மல்லிகார்ஜுன கார்கே

அவரைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் மல்லிகார்ஜுன கார்கே, “மன்மோகன் சிங் நன்றாக பணியாற்றினார். பிரதமரின் வார்த்தைகளுக்கு நன்றி. நல்ல பணிகளைப் பாராட்டுங்கள், கெட்டதை விமர்சியுங்கள்” என்று கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும், மன்மோகன் சிங் ராஜ்ய சபாவுக்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.