“அ.தி.மு.க-வை, அண்ணாமலை என்ன… ஆண்டவனால்கூட தொட்டு பார்க்க முடியாது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.

விழாவில் ஆர்.பி.உதயகுமார்

டெல்லியில் நடைபெற்ற  கேலோ இந்தியா, இந்தியா பாரா கேம்ஸ் மற்றும் கோவாவில் நடைபெற்ற தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று தமிழ்நாட்டுக்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிற்கு 6 மண்டலங்களில் மக்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். நாளை மதுரையில் நடைபெறுகிறது.

தி.மு.க, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தி.மு.க-வுக்கு வாக்கு அளித்தனர். மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கும் தொழில் சங்கங்களுக்கு தி.மு.க நெருக்கடி கொடுக்கிறது. தி.மு.க-வின் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் உள்ளனர். தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளான காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு ஆகியவற்றிக்குக் குரல் கொடுக்காத தி.மு.க-வுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு கேட்க உரிமையில்லை.

இரட்டை இலைச் சின்னம் விவாகரத்தில் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தெளிவாக தீர்ப்புகளை அளித்துவிட்டன. பன்னீர் செல்வம் விரக்தியின் உச்சத்தில் பேசி வருகிறார். அ.தி.மு.க-வில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர் எப்படி இரட்டை இலையை கோர முடியும்?

ஓபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வத்தின் உண்மையான முகம் தற்போதுதான் தெரியவருகிறது. அவருக்கு மன குழப்பம் உள்ளது, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர், பாவம். பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கையால் அதிர்ச்சிக்கு ஆளாகி, நிராயுதபாணியாக உள்ளார்.

அ.தி.மு.க கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. பா.ஜ.க-வுடன் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என எடப்பாடியார் தெளிவாக கூறிவிட்டார். அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. அ.தி.மு.க இயக்கத்தின் மதிப்பு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலராகக் கூட வெற்றி பெறாதவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. தேர்தலில் நின்று வென்றால்தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க-வை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அ.தி.மு.க-வை தொட்டுப்பார்க்க முடியாது. இதற்காக என்ன வந்தாலும் 2 கோடி தொண்டர்கள் எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம், அ.தி.மு.க இல்லையென்றால் சாமானிய மக்கள் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கும், பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது, நாங்கள் பேச ஆரம்பித்தால் வேட்டியை கழட்டி விட்டு நீ ஓட வேண்டும், கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பா.ஜ.க தவிர எந்த கட்சி வந்தாலும் தாயுள்ளதோடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்” என பேசினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.