ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஏ.இராமலிங்கபுரம். இந்த கிராமத்தில் வசித்து வந்த மாரிச்சாமி என்பவர் திடீரென மாரடைப்பால் இறந்துபோனார். இந்நிலையில், அவரின் இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கு பொது மயான எரியூட்டு மேடையை பயன்படுத்த குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதிக்கவில்லை என்ற பரபரப்பு புகார் நமக்கு கிடைத்தது. இது குறித்து கள விசாரணை நடத்தினோம். பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் மாரிச்சாமியின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பேசினார். அப்போது அவர், “எனது உடன்பிறந்த மூத்த சகோதரர் மாரிச்சாமி. கூலி வேலை செய்து வந்தார். அச்சம்தவிழ்த்தான் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட அவர், பக்கத்து கிராமமான ஏ.ராமலிங்காபுரத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கி சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். அது முதல் ஏ.இராமலிங்கம் பஞ்சாயத்துக்குட்பட்டு தண்ணீர் வரி, சொத்துவரி, மின் வரி என அனைத்தும் கட்டி வருகிறார். இதுதவிர, கோயில் விழாக்களுக்கு நன்கொடை ஊரில் நடக்கும் நல்லது, கெட்டது உள்ளிட்டவைகளிலும் கலந்துவந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் எனது அண்ணன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே, அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எனது அண்ணன் மாரிச்சாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உடற்கூறாய்வுக்காக மருத்துவமனையின் பிணவறைக்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இறுதிச்சடங்கு மற்றும் ஈமகாரியங்கள் செய்வதற்கான ஏற்பாடுகளை நானும் எனது உறவினர்களும் கவனித்தோம். அதன்படி எனது அண்ணனுக்கான இறுதிச்சடங்கினை ஏ.ராமலிங்கபுரம் பொது மயானத்தில் நடத்திக்கொள்வதற்கு அனுமதிக்கேட்டு ஊர் தலைவர் தட்சிணாமூர்த்தி என்பவரை சென்று சந்தித்தோம்.

பொது மயானம்

ஊர் முக்கியஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு பதில் சொல்வதாக கூறினார். சிறிது நேரத்தில் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடிய சமயம், தட்சணாமூர்த்தியுடன் இருந்த ஊர்காரர்களில் சிலரும், வார்டு கவுன்சிலர் ஒருவரும் சேர்ந்து எனது அண்ணன் மாரிச்சாமியின் இறுதிச்சடங்கினை `பொது மயான எரியூட்டு மேடையில் நடத்தக் கூடாது. தேவையென்றால் அருகிலேயே வேறு இடத்தை தேர்வு செய்து நடத்திக்கொள்ளுங்கள்’ என்றுச் சொன்னார்கள். மேலும், `பொது மயானத்தில் இருக்கும் எரியூட்டு மேடை குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. அதேபோல, ஊரில் வசிக்கும் பிற சமூகத்தினரும் தங்களுக்கென தனித்தனி இடங்களில் இறுதிச்சடங்குகளை செய்கிறார்கள்.

பொதுவெளியில்…

ஆகவே எங்கள் சாதி அல்லாமல் வேறு சாதியைச் சேர்ந்த உங்களுக்கு எரியூட்டு மேடையில் இடமளித்தால், அது பின்னாளில் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். ஆகவே உங்களது அண்ணனின் இறுதிச்சடங்கினை பொது மயான வளாகத்தில் புதிதாக ஒரு இடத்தை தேர்வு செய்து நடத்திக்கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள். மேலும் எனது அண்ணன் மாரிச்சாமியின் சாவில் சந்தேகம் கிளப்பிய அவர்கள், `மர்மமான முறையில் அவர் இறந்திருக்கிறார். ஆகவே அவரின் சொந்த ஊரான அச்சம்தவிழ்த்தானுக்குப் பிணத்தைக் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள். அப்படி இல்லையெனில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யுங்கள்’ என விரட்டினார்கள். 40 வருடமாக வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு ஏ.ராமலிங்கபுரத்தில் சொந்தமனை வாங்கி வீடுக்கட்டி குடியேறிய எனது அண்ணன், ஏ.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சொத்து வரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளது.

இதுதவிர, எனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் கிளப்பியவர்களுக்கு பதில் சொல்லும்விதம் மருத்துவ அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கை ஆகியவையும் கையில் இருக்கிறது. ஆனால் இதை எதையுமே பொருட்படுத்தாத ஊர்காரர்கள், மனிதாபிமான அடிப்படையில்கூட ஏரியூட்டு மேடையை பயன்படுத்துவதற்கு எங்களை அனுமதிக்காதது மிகுந்த மனவேதனையை அளித்தது. ஏற்கெனவே அண்ணனை இழந்த துக்கத்தில் மனம் நொடிந்து போயிருக்கும் சமயத்தில், இந்த பிரச்னையை ஊதி பெரிதாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் ஊர்காரர்கள் அடையாளம் காட்டிய பொதுவெளியில் எரியூட்டு மேடை அமைத்து எனது அண்ணனின் இறுதிச்சடங்கினை நடத்தி முடித்தோம். பொது மயான எரியூட்டு மேடை ஊர் வாழ் அனைத்து சமுதாய மக்களுக்கானது அல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும்தான் என்றால் பிறகெதற்காக பொது மயானம் என்ற பெயர் இருக்கவேண்டும். இவர்கள், சாவிலும் சாதிப் பார்ப்பது நியாயமா… சின்ன மனிதாபிமானம்கூட கிடையாதா?

எரியூட்டு மேடை

இன்று எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை, நாளை அந்த ஊரில் புதிதாய் குடியேறப்போகும் பிற சமூகத்தினருக்கோ, பட்டியலினத்தவருக்கோ ஏற்பட்டால் பிரச்னை ஏதும் ஏற்படாதா?. அல்லது இவர்களின் இந்த செயலை அரசாங்கம்தான் ஆதரிக்கிறதா… எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில் சொல்லவேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

பிரச்னை குறித்து ஊர் தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். “மாரிச்சாமியின் மகன் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவரின் மரணத்தில் சிலர் சந்தேகம் கிளப்பிப் பேசினர். அதேபோல மயானத்தில் உள்ள எரியூட்டு மேடை பட்டா இடமாகும். அந்த இடம், குறிப்பிட்டு எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் பாத்தியப்பட்டது. காலம், காலமாக எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல ஊரில் வசிக்கும் பிற சமூகத்தினரும் அவர்கள் சமூகம் சார்ந்த நபர்கள் இறந்துபோனால் இறுதிச்சடங்குகளை செய்வதற்கு தனித்தனி இடங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரிச்சாமியின் மரணத்தைத் தொடர்ந்து எங்களை அணுகிய அவரின் குடும்பத்தார், ஊர்காரர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டு மாரிசாமியின் உடலை வேறு இடத்தில் தகனம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டுதான் சென்றார்கள். வேறு எந்த பிரச்னையும் எங்களுக்குள் கிடையாது. இது குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கும்கூட தகவல் தெரியும். ஆகவே, யாரையும் மயானத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணம் ஊர்க்காரர்களுக்கு கிடையாது. அவரவர் சமூக வழக்கத்தின்படி பயன்படுத்தி வரும் இடங்களில் அவரவர் மக்களுக்கான இறுதிச்சடங்குகளை செய்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இது நடந்தது. வேறு எந்த காரணங்களும் கிடையாது” என்றார்.

எரியூட்டு மேடை

சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது நம்மிடம் பேசிய அதிகாரிகள், “ஏ.ராமலிங்கபுரத்தில் இருப்பது பொது மயானம் தான். முன்னர் காலத்தில் பட்டா நிலமாக இருந்து, பின்னர் அது பொதுபயன்பாட்டுக்காக அரசின் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே மயானம் எந்தச் சமூகத்தினருக்கும் பாத்தியப்பட்டது கிடையாது. குறிப்பிட்டு எந்தச் சமூகத்தினருக்கும் சொந்தமான பட்டா நிலங்களும் அதில் இல்லை. தற்போது மயானம் இருக்கும் இடம் வண்டிப்பாதை என்றுதான் ஆவணங்களில் உள்ளது. மேலும், மயானத்தில் எரியூட்டு மேடை அமைக்கப்பட்டிருப்பதும்கூட பஞ்சாயத்து நிதியின்பேரில்தான் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுவட்டார பிற ஊர்களில் உள்ள பொது மயானங்களில் இது போன்ற பிரச்னைகள் இல்லை. இந்த ஊரில் மட்டும்தான் இப்படியான பிரச்னைகள் கிளம்பியிருக்கிறது. எனவே இந்த பிரச்னையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எழுத்துபூர்வமாக தெரிவித்திருக்கிறோம். விரைவில் இதற்கு தீர்வு ஏற்படுத்தப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.