சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் சேர்த்து 63 நீதிபதிகள் பணியில் இருக்கிறார்கள். அவர்களில், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அடிக்கடி தென்படும் முகமாக இருக்கிறார் நீதியரசர் என்.ஆனந்த் வெங்கடேஷ். மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற வழக்குகளை அவர் கையாள்வது மட்டுமே அதற்குக் காரணமல்ல… அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளும், உதிர்க்கும் கருத்துகளும்கூட முக்கிய செய்தியாகின்றன. இன்றும் அப்படி ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லை அகற்ற தாசில்தாரருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக, புகார் அளித்தபோது, இது உரிமையியல் பிரச்னை என காவல்துறையினர் புகாரை முடித்துவிட்டதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை ஆய்வு செய்த பிறகு, “மனுதாரருக்குச் சொந்தமான சொத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் கல்லை ஒரு பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று அழைக்க ஒருவரால் முயற்சி செய்யப்படுகிறது. சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சாலையில் நடப்பட்ட கல், சிலையா… இல்லையா என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது. இதற்காக இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில், எந்த நீதிமன்றமும் திருச்சபைக்கான அதிகார வரம்பைப் (ecclesiastical jurisdiction) பயன்படுத்துவதில்லை.

இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவது, மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் காலத்திற்கேற்றபடி சமூகமும் மக்களும் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது” எனக் கூறி, மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில், சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.