`ஒருவர், ஒரு விலங்கை நேசிக்கும் வரை அவருடைய ஆன்மா விழிப்பு நிலையை அடையாது.’ – பிரெஞ்சு எழுத்தாளர் அனடோல் ஃபிரான்ஸ் (Anatole France)

மனிதர்களுக்கு ஆதிகாலந்தொட்டே பிராணிகளிடம் வாஞ்சை இருந்துவந்திருக்கிறது. விவசாயம், பயணம், இன்னபிற காரணங்களுக்காக காளை, பசுமாடு, ஆடு, கோழி என வளர்த்தவர்களின் பிரியம் இன்றைக்கு அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. விதவிதமான நாய் இனங்கள், பூனைகள், கிளி, லவ் பேர்ட்ஸ், வெள்ளை எலி… எனப் பல விலங்குகளையும் பறவைகளையும் செல்லப்பிராணிகளாகப் பலரும் வளர்க்கிறார்கள். அப்படி, உயிரியல் பூங்காவில் விலை கொடுத்தோ, கட்டணம் செலுத்தியோ புலி, கரடி, சிறுத்தை என வளர்க்கும் பிரபலங்களும் உண்டு.

சரோஜ் ராஜ் சௌத்ரி

நடிகர் எம்.ஜி.ஆர் ஒரு சிங்கத்தை வளர்த்ததாகச் சொல்வார்கள். `லியோ’ படத்தில் நடிகர் விஜய் ஒரு கழுதைப்புலியை (ஹைனா) வளர்ப்பதாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். எல்லா உயிரினங்களையும் மனிதர்கள் நேசிக்கிறார்கள் என்பதன் அடையாளம் இது. இதெல்லாம் சரி. காட்டு விலங்குகளை வேறெங்கோ வைத்து வளர்க்கலாம். ஆனால், வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு புலியை வளர்க்க முடியுமா… அப்படி வளர்த்தால் ஒரு நாயோ, பூனையோ நடந்துகொள்வதைப்போல் நம்மிடம் அது பிரியமாக இருக்குமா… சாத்தியம்தானா? சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் ஒரு மனிதரும் புலியும். அவர் பெயர், சரோஜ் ராஜ் சௌத்ரி (Saroj Raj Choudhury). அவர் வளர்த்தது ஒரு பெண் புலியை. அதன் பெயர் கைரி (Khairi).

எந்தக் கொடிய விலங்கும், தன்மீது அன்பு செலுத்துபவர்கள்மீது துவேஷம் பாராட்டுவதில்லை. `வளர்த்த பாகன்மீதே பாய்ந்த யானை’ போன்ற சம்பவங்களுமேகூட வேறு ஏதோ சிக்கல் காரணமாக நடந்தவையாகவே இருக்கும். மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் இடையே எழும் உறவு வெளிப்படுத்துவது அன்பின் உன்னதத்தை, மகத்துவத்தை! மனிதர்களை நேசித்த ஒரு புலியின் கதை இது. சரோஜ் ராஜ் சௌத்ரி சுற்றுச்சூழலியலாளர், வனவிலங்குகளின் பாதுகாவலர், எழுத்தாளர். அன்றைய ஒடிசாவில் `சிம்லிபால் தேசியப் பூங்கா’ (Simlipal National Park) புலிகள் சரணாலயம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். 1973-ம் ஆண்டு `புராஜக்ட் டைகர்’ எனப்படும் புலிகளைக் காக்கும் திட்டத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர்.

புலிகளின் காலடித் தடங்களின் அடையாளத்தைக்கொண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடலாம் எனக் கண்டுபிடித்தவர் சரோஜ் ராஜ் சௌத்ரிதான். இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பை (Tiger Census) இந்த வழிமுறை மூலம் முதன்முதலில் கணக்கெடுத்தவர் அவர்தான். 2004-ம் ஆண்டு வரை இந்தியாவில் இந்த முறைதான் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க உதவியது. கேமரா மூலம் விலங்குகளைக் கண்காணிக்கும் முறை வந்த பிறகுதான் அது வழக்கொழிந்தது. `Khairi: The Beloved Tigress’ என்ற நூலில் தனக்கும், கைரி என்ற அந்தப் பெண் புலிக்கும் ஏற்பட்ட அழுத்தமான உறவை அழகாக விவரித்திருக்கிறார் சரோஜ் ராஜ் சௌத்ரி.

1974, அக்டோபர் மாதம். ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில், கைரி ஆற்றங்கரைக்கு அருகேயிருக்கும் காடு அது. தேனெடுப்பதற்காக அந்தக் காட்டுக்குள் போனார்கள் `கரியா’ பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலர். அங்கே ஒரு புதருக்குப் பின்னாலிருந்து ஏதோ ஒரு விலங்கு முனகும் சத்தம் கேட்டது. புதரை விலக்கிப் பார்த்தார்கள். அங்கே ஒரு புலிக்குட்டி தீனமான குரலில் அரற்றிக்கொண்டிருந்தது. புலிக்குட்டியைப் பார்த்தவர்கள் முதலில் பயந்துபோனார்கள். அதன் தாய்ப்புலி அருகில் எங்கேயாவது இருக்கும் என்கிற சந்தேகம் அவர்களுக்கு. அக்கம் பக்கமெல்லாம் சுற்றிப் பார்த்தும் வேறு புலி இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

இப்போது இன்னொரு பிரச்னை. புலிக்குட்டியைப் பார்த்தால், இரண்டு நாள்களாக எதுவும் சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. இப்படியே விட்டுவிட்டுப்போனால், அது இறந்துபோகக்கூடும். என்ன செய்வது… தங்கள் வசிப்பிடத்துக்கும் கொண்டுபோக முடியாது. அது சட்டப்படி, நியாயப்படி குற்றம்.  யோசித்தவர்களுக்கு நினைவுக்கு வந்தவர் `காட்டு ஆபீஸர்’ சரோஜ் ராஜ் சௌத்ரி. `விலங்குகள் ராஜ்ஜியத்தில் விதி என்பது சாப்பிடுவது அல்லது சாப்பிடப்படுவது; மனிதர்கள் ராஜ்ஜியத்தில் விதி என்பது தீர்மானிப்பது அல்லது தீர்மானிக்கப்படுவது.’ – அமெரிக்க மனநோயியல் மருத்துவர் தாமஸ் ஸாஸ் (Thomas Szasz)

அந்த `கரியா’ பழங்குடியின மக்கள், காட்டிலிருந்த சௌத்ரியின் பங்களாவுக்கு அதைக் கொண்டுபோனார்கள். அவர் தன் பங்களாவில், ஒரு தனியிடத்தில் ஏற்கெனவே சில விலங்குகளை வளர்த்துவந்தார். ஒரு கரடிக்குட்டி, பார்வையிழந்த ஒரு கழுதைப்புலி, ஒரு முதலை, `மங்கூஸ்’ எனப்படும் ஒருவகை காட்டுக் கீரிப்பிள்ளை, இன்னும் சில விலங்குகளை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார். புதிதாக வந்த அந்தக் குட்டிப்புலியை அவர் கைகளில் வாங்கியதுமே, அது அரவணைப்பை வேண்டுவதுபோல அவர் மார்புக்குத் தாவியது. ஒரு பூனை அளவுக்குத்தான் இருந்தது அந்தக் குட்டி. சௌத்ரி முதல் வேலையாக அதற்கு உணவளித்தார். இரண்டாவது வேலையாக அதற்குப் பெயரிட்டார்… `கைரி.’ கைரி ஆற்றங்கரையில் அது கண்டெடுக்கப்பட்டதால், அந்த நினைவாக அந்தப் பெயரை வைத்தார் சௌத்ரி.

சௌத்ரியின் வீட்டுக்கு வந்த தினத்திலிருந்து கைரி, அந்தக் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிவிட்டது. சௌத்ரியின் மனைவி நிஹார் நளினி ஸ்வெயின் (Nihar Nalini Swain), தன் குழந்தைபோலவே நினைத்து அதை வளர்க்க ஆரம்பித்தார். கிடுகிடுவென வளர்ந்துகொண்டிருந்தது கைரி. பார்க்கத்தான் பிரமாண்டமான உருவம். ஆனால், அது பரமசாது. ஒரு பூனையைப்போல் வளர்ந்துகொண்டிருந்தது அந்தப் பெண் புலி. பூனைகூட சில நேரங்களில் நம்மைப் பிராண்டி, காயப்படுத்திவிடும். கைரியின் நகம்கூட எந்த மனிதர்மீதும் பட்டதில்லை. சாப்பிடுவதில்கூட தனக்குத் தானே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டது கைரி.

சௌத்ரியோ, அவர் மனைவியோ, மற்ற வீட்டு உறுப்பினர்களோ கொடுத்தால்தான் உணவு உட்கொள்ளும். இறைச்சியேயானாலும், வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது. தானாகவும் வெளியே போய் இரை தேடாது; அதற்குத் தேடத் தெரியாது. அந்த வீட்டில் கைரிக்கு ஒரு ஃபிரெண்டும் உண்டு. `பிளாக்கி’ எனப்படும் நாய். கைரியும் பிளாக்கியும் ஒன்றையொன்று துரத்தித் துரத்தி விளையாடுவது அந்த வீட்டில் அன்றாட நிகழ்வு.

சிம்லிபால் தேசியப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், கைரியைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். அதைப் பார்க்கவும், அதோடு நின்று புகைப்படம் எடுக்கவும் ஆசைப்பட்டார்கள். சிம்லிபாலுக்கு வருபவர்கள், சௌத்ரியின் வீட்டுக்கு வருவதும் தொடர்கதையானது. யார் வந்தாலும், அவர்களோடு இயல்பாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தயாராக நிற்கும் கைரி. யாரையும் பயமுறுத்த அதனிடமிருந்து சின்னதாக ஓர் உறுமல்கூட வராது. நாளுக்கு நாள் கைரியைப் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக, விஷயம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் காதுக்குப்போனது. என்னதான் வனத்துறையில் உயரதிகாரியாக இருந்தாலும், `வனவிலங்குகளின் பாதுகாவலர்’ என சௌத்ரி மக்களால் போற்றப்பட்டாலும், ஒரு வீட்டில் புலி செல்லப்பிராணியாக வளர்வது சரிதானா… அந்தப் புலியால் மனிதர்களுக்கு ஆபத்து வராது என்பது என்ன நிச்சயம்?

இந்திரா காந்தி, சௌத்ரியை போனில் அழைத்தார். தான் கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா என மெல்ல விசாரணையை ஆரம்பித்தார். சௌத்ரி, கைரியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வெகு நேரத்துக்கு நீண்டது அந்த உரையாடல். கைரியைப் பற்றிக் கேட்கக் கேட்க திகைத்துப்போனார் இந்திரா காந்தி. `இப்படியும் ஒரு புலியா?’ என்கிற ஆச்சர்யம் அவருக்கு எழுந்தது. இந்தியாவில், `புராஜக்ட் டைகர்’ திட்டத்தை முன்னெடுத்தவரே இந்திராதான். ஒரு புலிக்குட்டி, அந்த புராஜக்ட்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவரின் அரவணைப்பில் வளர்வது அவரை மனநிறைவடையச் செய்தது. `சரி… கவனம்…’ என்கிற எச்சரிக்கையோடு, வீட்டிலேயே கைரியை வளர்க்க சௌத்ரிக்கு அனுமதி கொடுத்தார் இந்திரா காந்தி.

`நான் விலங்குகளை நேசிக்கிறேன். ஏனென்றால், அவை தன்னுணர்வோடு யாருக்கும் தீமை செய்வதில்லை. அவை ஒருவருக்கும் துரோகம் செய்வதில்லை.’ – அமெரிக்க நாவலசிரியர் டெய்லர் கால்டுவெல் (Taylor Caldwell)

கைரி… இந்தப் பெயர் சௌத்ரியின் குடும்பத்தினருக்கும், அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே பிரபலமாகிக்கொண்டிருந்தது. கைரி குறித்த கட்டுரைகள், புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியாகின. ஒரு கவிஞர், கைரியை வைத்து ஒரு கவிதையே எழுதியிருந்தார். யாருக்கும், எந்த இன்னலையும் ஏற்படுத்தாத ஒரு புலி; பார்க்கிறவர்களுக்கெல்லாம் அது ஒரு செல்லக்குட்டி. ஒரு கைக்குழந்தையை நம்பி அதனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகலாம். இப்படி ஒரு புலி எந்த ஊரில், எந்த நாட்டில் கிடைக்கும்?

யார் கண்பட்டதோ… 1981-ம் ஆண்டு ஒரு மோசமான நிகழ்வு நடந்தது. யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ஒரு வெறிநாய் சௌத்ரியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்தது. அதற்கு ரேபீஸ் (Rabbies) நோய் தாக்கியிருந்தது. கண்ணில்பட்டதையெல்லாம், கண்ணில்பட்டவர்களையெல்லாம் கடித்து, துவம்சம் செய்தது. விரட்ட வந்த வேலையாட்கள், பிளாக்கி என அனைவர்மீதும் பாய்ந்து கடித்தது அந்த வெறிபிடித்த நாய். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கைரி, அந்த நாயோடு நேருக்கு நேர் மோதியது. தன் வலுவான கால்களால், அந்தப் பைத்தியம் பிடித்த நாயைக் கிழித்துப்போட்டது. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அந்தச் சண்டையில் நாய், கைரியை கடித்துவைத்திருந்தது. நாய்க்கு இருந்த ரேபீஸ் கைரியைத் தொற்றிக்கொண்டது.

 அவருக்கு ஓர் உணர்வு. முன்பிருந்த சுறுசுறுப்போ, நடையில் துள்ளலோ இல்லை. கைரி இறந்த இரண்டே வருடங்களில் 1983-ல் தன் 59-வது வயதில் சரோஜ் ராஜ் சௌத்ரி மாரடைப்பில் இறந்துபோனார். அவர் இறந்த பிறகு அங்கிருக்கப் பிடிக்காமல், அவருடைய மனைவி நிஹார் ஒரு முதியோர் இல்லத்தில் போய்ச் சேர்ந்தார்.

2021-ம் ஆண்டு தன் 88-வது வயதில் அவரும் காலமானார். ஏதோ ஒரு செல்லப்பிராணி இறந்துபோகிறது. அதை வளர்த்தவரும் இறந்துபோகிறார் என முடிகிற சாதாரணக் கதை அல்ல இது. அன்பின் மேன்மையை உணர்த்தும் உண்மைச் சம்பவம். செல்லப்பிராணியை வளர்த்து, அதை இழந்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த  வலி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.