வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நெடுஞ்சாலையை ஒட்டியது அந்தக் கிராமம்!

சாலையோரத்திலுள்ள பூங்கா மார்கழிப் பனியில் நடுங்கிக் கொண்டிருந்தது!

பூங்காவை ஒட்டி பெரிய விளையாட்டு மைதானம்.

பனியில் ஒளி நிழலாடுகிறதா அல்லது ஒளியில் பனி நிழலாடுகிறதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒளியும்,பனியும் விளையாடிக்கொண்டிருந்தன!

சென்னைக்குச் செல்லும் கடைசிப் பேரூந்து,பக்கத்துப் பேரூந்து நிலையத்தில் சில நிமிடங்கள் நின்று,தன் நீண்ட பயணத்தைத் தொடங்கியது!

அதிலிருந்து இறங்கிய நான்கைந்து பேரில்,இருவர் நேராகப் பக்கத்து டீக்கடைக்குச் சென்று டீ கேட்க,கடையை மூட எத்தணித்த மாஸ்டர்-கம்-ஓனர்,கவிழ்த்திருந்த இரண்டு க்ளாஸ்களை எடுத்து பாய்லரிலிருந்து பிடித்த வெந்நீரில் கழுவி,கொதித்த பாலை ஊற்றி,டிகாக்‌ஷனை அளவாகப் பாரத்து இறக்கினார்.

க்ளாஸ்களை அவர்கள் கையில் கொடுத்து விட்டுக் கடை ஷட்டரை இறக்க ஆயத்தமானார்!

பனி மூட்டம்

கடையின் ஷோ கேசில் இருந்த டைம்பீஸ் பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

பூங்காவின் ஓரத்தில் மர நிழலால் மறைக்கப்பட்டிருந்த பெஞ்சில்,அவர்கள் இருவரும் கொரோனா இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்!

இருவரும் மனமொத்த காதலர்கள் என்பது தெரிந்திருந்தாலும்,பண்பாட்டையும் நம் மரபையும் மீறாதவர்கள் என்பது அவர்கள் பேச்சிலும்,நடத்தையிலும் தெளிவாக விளங்கியது.

கொரோனா தொடங்கும் முன்பாகவே,அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் இந்த இடைவெளி அவசியமென்பதை அவள் சொல்ல,அவனும் அதற்கு உடன்பணிந்தான்!

தமிழாசிரியரின் மகளல்லவா?அதுவும் அந்த ஊரில் மிகவும் மதிக்கப்பட்ட தமிழய்யாவின் மகள் மேகலை அல்லவா!

அவர்கள் பழக்கம் ஏற்பட்டதே அந்த விளையாட்டுத் திடலில்தானே!

அவன் ஓட்டப்பந்தயத்திலும்,ஈட்டி எறிதலிலும் வல்லவன்!

’மாறனின் ஈட்டி மகத்தாய்ப் பாயும்!’என்பார்கள் ஊரார்!

அதைப்போலவே அவன் ஓட்டமும் ஊரார் இடையே மிகப் பிரபலம்!

இரண்டு போட்டிகளிலும் முதலாவதாக வந்து, விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழய்யாவின் கையால் அவன் பரிசுகளை வாங்கினான்.

மனைவியையிழந்த அவர், தன் மகள் மேகலையை விழாக்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஓட்டத்திற்கான பரிசை அளித்த அவர், ஈட்டி எறிதலிற்கான பரிசைத் தட்டிலிருந்து எடுக்கையில் சற்றே தடுமாற, மேகலைதான் தந்தையை ஒரு கையாலும்,நழுவிய பரிசை மறு கையாலும் பிடித்துக் கொண்டாள்.

Representational Image

தடுமாற்றத்திலிருந்து சுதாரித்துக் கொண்ட அவர், ’நீயே அந்தத் தம்பிக்குக் கொடுத்திடம்மா அதை!’ என்றபடி நாற்காலியைப் பிடித்தபடி அமர,மேகலை கையால் பரிசைப்பெற்ற மாறனுக்கு ரெட்டைச் சந்தோஷம்!

மனம் பூராவும் மத்தாப்பு பொங்கிற்று!

இதயத்திற்குள் இன்பப் பட்டாம்பூச்சி சிறகடித்தது!

அடுத்த முறை ஈட்டி எறிதல் போட்டிக்கு அவள் மட்டும் வந்திருந்தாள். உடல் நலக் குறைவால் தமிழய்யா வரவில்லை என்று மைக்கில் அறிவித்தார்கள்!

மாறன் ஈட்டி எறிய வந்தபோது அவளைப் பார்க்க… அவளும் நாணத்துடன் அவனை நோக்க…

அந்த முறை அவன் ஈட்டி, ஒரு மீட்டர் அதிகமாக முன்னேறியிருந்தது.

‘கண்ணின் கடைப் பார்வை

காதலியர் காட்டி விட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும்

ஓர் கடுகாம்!’

என்று அனுபவித்துத்தானோ எழுதியிருப்பார் பாவேந்தர்!

தமிழய்யாவின் இறப்பு அந்த ஊரையே உலுக்கிற்று.

எல்லோரிடமும் பாசத்துடன் பழகிய,நேர்மையான ஓர் உத்தமரை இழந்து விட்டதாக ஊரார் புலம்பினர்!

‘அவரின் கையால் கடைசியாகப் பரிசு வாங்கியது நீங்கள்தான்!’என்று ஒருமுறை மாறனைச் சந்தித்தபோது மேகலை கூற,

அவள் அதைப் பெருமையாகக் கூறுகிறாளா?அல்லது அவனைத் ‘துரதிருஷ்ட வாதி’ என்று மறைமுகமாக வசை பாடுகிறாளா?

என்று தெரிந்து கொள்ள முடியாமல் அவன் தவித்தான்!.

பிறகு ஒரு நாளில் சந்திக்கையில்’எங்கப்பாவின் கையால் கடைசியாகப் பரிசு வாங்கிய அதிர்ஷ்ட சாலி நீங்கள்தான்!’

என்று அவள் சொல்லிய பிறகுதான் அவனுக்குத் திருப்தியே வந்தது!

அப்புறம் மெல்ல அவர்கள் காதல், தமிழக நீர் நிலைகளில் தானாகப் படரும் ஆகாயத் தாமரை போல் அடர்ந்து, படர்ந்து வளர்ந்தது. ஒருவரின்றி மற்றவர் இல்லை என்ற மனநிலைக்கு இருவருமே ஆளானார்கள்.

ஆனால் மேகலையின் அண்ணன் அவள் அப்பாவை விட ஒருபடி மேலே போய் சம்பிரதாயங்களில் நாட்டம் கொண்டவனாக இருந்தான்.அதோடு மட்டுமின்றி,இறந்த அப்பாவின் பெருமையைக் காப்பாற்றுவதே தனது தலையாய கடமை என்று நொடிக்கொரு தடவை சொல்லிக் கொண்டே இருந்தான்.

‘ம்!சொல் மேகலை! இதே கடைசி பஸ்ஸில் 3 நாட்களுக்கு முன்பே நாம் ஏறியிருக்க வேண்டும். நீதான் நேரத்திற்கு வராமல் என்னைக் காக்க வைத்து ஏமாற்றி விட்டாய்!’

‘என்னங்க நீங்க… இன்னுமா என் மீது கோபம் தணியல?நாந்தான் அன்னைக்கே செல்லில விபரம் அனுப்பியிருந்தேனே!’

‘ஆமாம் மேகலை,அனுப்பியிருந்தே!அதன் பொருள் தெரிஞ்சிக்கிடவே எனக்கு ரெண்டு நாள்ஆயிடிச்சி!

என்ன அனுப்பியிருந்தே…

‘வந்ததனால் வரவில்லை; வராவிட்டால் வந்திருப்பேன்!

செத்ததனால் சாகவில்லை; சாகாவிட்டால் செத்திருப்பேன்!

வெட்டியதால் சாகவில்லை;வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!’

‘அப்படீன்னுதானே! அப்பப்பா… அதோட பொருள் தெரிஞ்சிக்கிடறதுக்குள்ளே நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தானே தெரியும்!

தமிழ் வாத்தியார் பொண்ணுங்கிறதை நீ கச்சிதமா உணர்த்திட்டே…நாந்தான் பைத்தியக்காரனா இருந்திருக்கேன்!’

‘அதான் சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களே!அப்புறம் என்ன?’

‘புரிஞ்சிடுச்சிதான்! இருந்தாலும் ஒன்னோட வாயாலே ஒரு தடவை அந்த விளக்கத்தைக் கேட்க ஆசையாயிருக்கு!’

‘அவ்வளவுதானே! ஒங்க ஆசை அதுன்னா… அதைத் தீர்த்து வைக்க வேண்டியது என்னோட கடமையாச்சே! சொல்றேங்க…’

‘அப்பா செத்த பிறகு அண்ணனோட கண்காணிப்பிலதான் நான் இருக்கேங்கறது ஒங்களுக்குத் தெரியுமே. அண்ணனோட பழைய பஞ்சாங்கப் பேச்சைக்கேட்டு எனக்குப் பயம் வந்துடுச்சி… நம்ம காதலை அவன் ஒத்துக்கிடமாட்டான்னு நான் நம்புனதால அவன் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து நான் வர்றதா உங்ககிட்ட சொன்னேன்.ஆனா எதிர்பாராதவிதமா,நான் கிளம்பற நேரத்துக்கு அவன் வந்துட்டான். அவன்’வந்ததனால் என்னால் குறிப்பிட்ட நேரத்தில் வர முடியவில்லை.அப்படி அவன் வராதிருந்தால் நான் சொன்னபடி வந்திருப்பேன்!நாம் சென்னைக்குச் செல்லும் கடைசி பஸ்ஸைப் பிடித்திருப்போம்!’

‘அப்படியும் பஸ் லேட்டா வருங்கிற நம்பிக்கையில,குறுக்க உள்ள வயற்காட்டுப் பாதையில ஓட்டமா ஓடி வந்தேன்!

அந்தப் பெரிய வரப்பில பழுதை மாதிரி ஒண்ணை மிதிச்சப்புறந்தான் தெரிஞ்சது,அது பாம்புன்னு!நான் மிதிச்ச வேகத்தில,அது மட்டும் உயிரோட இருந்திருந்தா… என்னைக் கொத்தியே கொன்னுருக்கும்!ஆனா அது ஏற்கெனவே செத்துட்டதால நான் சாகலை!

இல்லாட்டா நான் அனாதையா செத்துப் போயிருப்பேன்.’

‘அதையும் தாண்டி வேகமாக வயற்காட்டிற்குள் ஓடி வர,திடீரென பரவிய மழை மேகத்தால் வானம் இருண்டு போக,கரண்டும் போனதால் மேலும் இருள் சூழ்ந்து கண்ணைக் கட்ட,ஓடிய நான் ஒரு பாழுங்கிணற்றில் விழ இருந்தேன்!

நல்ல வேலையாக மின்னல் ஒன்று வெட்ட உஷாராகி, தலைக்கயிறு வெட்டியிழுக்கப்பட்ட வண்டி மாடு திடீரென நிற்பது போல் நானும் நின்று விட்டேன். அந்த மின்னல் அந்தத் தருணத்தில் வெட்டியதால் நான் கிணற்றில் விழுந்து சாகவில்லை.அது அப்படி வெட்டா விட்டால், சரியாக நீச்சல் தெரியாத நான் அந்தப் பாழுங்கிணற்றிலேயே விழுந்து 

செத்திருப்பேன்!’

‘இதுதாங்க நான் அனுப்பின செய்தி!’

‘எனக்கு நல்லாவே புரிஞ்சிடிச்சி! இருந்தாலும் உன் அருமையான விளக்கத்தைக் கேட்க ஆசைப்பட்டுத்தான் உன்னை விளக்கமா சொல்லச் சொன்னேன்.

‘சரி! மறுபடியும்  ஒங்கண்ணன் ஊருக்குப் போற வரை நாம் காத்திருக்கணுமா மேகலை?’

‘வேண்டாங்க… இனி அது தேவையுமில்ல… அண்ணன் பயமுமில்லே!’

‘என்ன சொல்றே மேகலை! அண்ணன் பயமில்லையா?’

‘ஆமாங்க! நேற்று துணிச்சலை வரவழைச்சுக்கிட்டு அண்ணன்கிட்ட நம்ம காதலையும்,அன்னிக்கி நான் பட்ட கஷ்டத்தையும் சொன்னேன். ஒரு நிமிடம் ஆடிப்போன அவன்,என்னை உரிமையோட கோவிச்சுக்கிட்டான்.

‘காதலும் வீரமுந்தான் தமிழரோட பண்பாடு…உன் கூடப் பிறந்தவன் நான்… அதுவும் ஒரு தமிழாசிரியரோட மகன்.

காதலை வெறுப்பேன்னு கண்மூடித்தனமா நீயா எப்படி கற்பனை பண்ணிக்கிட்டேன்னு கோபிச்சிக்கிட்டான்.

நீங்கதான் காதலர்னு தெரிஞ்சதும் சந்தோஷப்பட்டான்.

‘அப்படியா? உண்மையாத்தான் சொல்றியா?நம்ம காதலை உங்கண்ணன் ஏற்றுக்கிட்டாரா?’

‘ஆமாங்க! அதோட மட்டுமில்ல… பொங்கல் முடிஞ்சதும் நம்ம கல்யாணம்னு சொல்லி இருக்காரு!’

‘என்ன நீ… இன்ப அதிர்ச்சிக்கி மேல அதிர்ச்சியாக் கொடுக்கறே?’

‘உண்மைதாங்க! வாங்க நம்ம வாசகர்களையும் கல்யாணத்திற்கு அழைச்சிடலாம்!’

‘வாசகர்களே! அம்மா-அப்பா இல்லாத பொண்ணு நான்! காதலிச்சவரையே கைப் பிடிக்கப் போறேன்! இப்பதான் நிறைய வசதிகள் வந்துட்டே…பொருட் செலவு,நேரச் செலவு எதுவுமில்லாம, நாங்க சந்தோஷமா வாழ ஆன்லைன்ல ஆசீர்வாதம் பண்ணுங்க!

-ரெ.ஆத்மநாதன்,

  டாம்பா,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.