நேற்று (ஜனவரி 22) அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது கருவறையில் ஸ்ரீராமர் சிலைக்கு முதல் பூஜை செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு 2.30 மணி அளவில் சாதுக்களும் பிரபலங்களும் ஸ்ரீராமரை தரிசித்து மகிழ்ந்தார்கள்.

இன்று செவ்வாய்கிழமை ஸ்ரீராமர் கோயிலுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய ஏராளமான பக்தர்கள் கூடினர். இன்று முதல் பொதுமக்களுக்காக ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய கொண்டாட்டம் குறையாமல் அயோத்தி முழுக்க இன்றும் ஆனந்த நிலை பரவியுள்ளது.

அயோத்திக்கு வழிகாட்டல்

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டைக்குப் பிறகு அங்கே செல்ல வேண்டும், குழந்தை ஸ்ரீராமனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்பவர்கள் கவனிக்க வேண்டிய சில ஆலோசனைகளை இங்கு காண்போம்.

1. அயோத்தியில் கடும் பனி நிலவி வருவதால் அதற்கேற்ப உங்கள் பயணம் அமையட்டும். பனி ஒத்துக் கொள்ளாதவர்கள் அதற்கேற்ற மருந்துகள், தடுப்பு சாதனங்கள் கொண்டு செல்லவும்.

2. ரயில், விமானம் வழியே அயோத்தியை எளிதாக அடைந்துவிடலாம். ஆனால் அங்கிருந்து பிரயாகை, வாரணாசி போகத்தான் அதிக சிரமப்பட வேண்டி இருக்கும். பொது போக்குவரத்து அங்கு மிகவும் அரிது. சாலை மார்க்கமாக 200 கி.மீ கடக்கக் கூட சுமார் 6 மணி நேரம் ஆகிவிடும். சாலை மற்றும் கடும் பனியால் இந்தத் தாமதம் உண்டாகும். இதை மனதில் வைத்து உங்கள் பயணங்களைத் திட்டமிடவும்.

அயோத்தி ஸ்ரீராமர் கோயில்

3. அங்கே இப்போதுதான் உணவுக் கூடங்கள் தயாராகி வருவதால் தமிழக உணவு அங்கு கிடைப்பது சிரமமே. அயோத்தியில் நகரத்தார் சத்திரம் 134 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையில் இட்லி, பொங்கல், சாப்பாடு கிடைக்கும். தங்கவும் இலவசமாகவும் குறைந்த செலவிலும் அறைகள் அங்கு கிடைக்கும். (Ayodhya Nattukot Nagara Chatram, Nattukot Sri Ram Mandir, Baboo Bazaar, Ayodhya- 224123, U.P. – India India. 7311166233, 7373070733)

4. அயோத்தியில் 3 ஆரத்திகள் தினமும் நடைபெறுகின்றன. காலை 6.30 மணிக்கு ஸ்ரீங்கார் ஆரத்தி, மதியம் 12 மணிக்கு போக் ஆரத்தி. இரவு 7.30க்கு சந்தியா ஆரத்தி என 3 முக்கிய வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் எதாவது ஒன்றில் கலந்து கொள்வது அவசியம்.

5. பலத்த பாதுகாப்புக்களைக் கடந்துதான் ஸ்ரீராமர் சந்நிதியை அடைய வேண்டும். கருவறையில் உள்ள பால ராமரை பக்தர்கள் 35 அடி தூரத்திலிருந்து தரிசனம் செய்ய முடியும். பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் சுமைகளை அதிகம் எடுத்துச் செல்ல வேண்டாம்.

6. காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜைகள் நடக்கும். இந்தப் பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முன்பதிவு நடைமுறை தற்போது தொடங்கப்படவில்லை. இனி வரும் நாள்களில் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்திக்கு வழிகாட்டல்

7. சிறப்பு ஆரத்தியில் இணையத்தில் அல்லது ஆலய வளாகத்தில் பதிவு செய்பவர்கள், ஆரத்திக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக கோயிலுக்குள் இருக்க வேண்டும்.

8. ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இணையத்தில் தரிசன அனுமதி பெற்றவர்கள், அந்த நேரத்துக்கு முன்னால் சென்று, ஆலய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன், கோயில் கவுன்ட்டரில் உங்களின் பாஸைப் பெற வேண்டும்.

9. காலை 7 மணிக்குதான் திறப்பார்கள் என்றாலும் பக்தர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கே வாயில்களுக்கு வரத் தொடங்கினர். பெரிய பைகள், மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருள்கள் எதுவுமே உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்பது கட்டாயம். 12 நுழைவு வாயிலில் சோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

10. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே அயோத்தி செல்வதற்கான சிறந்த சீதோஷ்ண காலம் எனப்படுகிறது.

அயோத்தியில் கூட்டம் குறையாமல் இருப்பதாலும் இன்னும் பல சந்நிதிகள், சிலைகள், நினைவிடங்கள் நிறுவப்படாமல் இருப்பதாலும் கூடுமானவரை சற்று காலம் கழித்துச் செல்வதே நல்லது என்கிறார்கள்.

அயோத்தியில் கூட்டம்

பணிகள் வேகவேகமாக நடைபெற்று வந்தாலும் இன்னும் கூட தங்குமிடங்கள், சாலைகள் சரிவர அமைக்கப்படாததால் சில நாள்கள் கழித்துச் செல்வதே சிறந்தது.

விமான வழி: அயோத்தி மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம். அடுத்து மகாயோகி கோரக்நாத் விமான நிலையம். இது அயோத்தியில் இருந்து 118 கிமீ தொலைவில் உள்ளது.

லக்னோ சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், இது 125 கிமீ தொலைவில் உள்ளது. பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் இருந்தும் அயோத்தி செல்லலாம்.

ரயில் நிலையங்கள்: பைசாபாத் மற்றும் அயோத்தி ஸ்டேஷனில் இறங்கியும் கோயிலை அடையலாம்.

சாலை வழியாக: லக்னோ, டெல்லி மற்றும் கோரக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்துகள் உள்ளன. வாரணாசி மற்றும் பிரயாக் ராஜில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.