நீலகிரியில் காட்டை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சம் புகுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகளால் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இரவு நேரங்களில் குடியிருப்பில் உணவு தேடும் வனவிலங்குகளின் வீடியோ மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உரிமையாளர்

அந்த வரிசையில், கோத்தகிரி அருகில் உள்ள கூக்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, அங்குப் படுத்திருந்த நாயைக் கவ்விச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய உரிமையாளரோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல் உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையிடமிருந்து நாயைக் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தையிடம் பிடிபட்ட நாயை நொடிப்பொழுதில் காப்பாற்றிய உரிமையாளரின் துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

“கூக்கல் பகுதியில் கடந்த பல நாள்களாக இளம் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் எச்சரிக்கையாகவே இருந்து வந்தனர். கடந்த 20-ம் தேதி மாலை குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, நாயின் கழுத்தைக் கவ்வித் தூக்கிச் செல்ல முயன்றிருக்கிறது.

சிறுத்தை

இதைக் கண்ட உரிமையாளர், கூச்சலிட்டு நாயைக் காப்பாற்றியதோடு சிறுத்தையையும் விரட்டியிருக்கிறார். அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். சிறுத்தை நடமாட்டம் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.