எழுத்தாளர் தெய்வீகனுடைய ‘திருவேட்கை’ நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. ஆகுதி ஒருங்கிணைத்திருந்த இந்த நிகழ்வில் எழுத்தாளார் காளி ப்ரஸாத், இளம்பரிதி, இயக்குநர் சசி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் சசி, ” தெய்வீகனுடைய திருவேட்கைத் தொகுப்பில், ‘உயிர் தரிப்பு என்கிற கதையை மட்டும் நான் எடுத்துக்கிறேன். எப்போதுமே ஒரு எழுத்தாளரிடம் நான் எதைப் பார்ப்பேன் என்றால், அவர்கள் எந்த மாதிரியான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள், அந்த வார்த்தைகளின் மூலம் உணர்வு எனக்குள் கடத்தப்படுகிறதா என்பதைத் தான் பார்ப்பேன். நான் ஒரு படத்தை ஷாட் பை ஷாட்டாக பார்க்கிற போது, இந்த ஷாட்டில் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான்.

திருவேட்கை நூல் வெளியீட்டு விழா

அதுபோல, நூலில் உள்ள இந்த வார்த்தை எனக்குள் என்ன உணர்வை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்பேன். அப்படி வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் என்னை மிகவும் பாதித்திருக்கிறார் தெய்வீகன். ‘ஆடு பதற்றமாக இருக்கும் போது வெட்டினால், ருசியிறாது. அது நிதானமாக இருக்கும் போது தான் வெட்ட வேண்டும். அது தான் ஆட்டுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது.’ இதற்குப் பிறகு, ‘ஆட்டின் அசைவுறும் கண்ணை ஒரு தடவை உற்றுப் பார்த்தான். தனது பொக்கேட்டில் இருந்து எடுத்த சிறு துண்டு கயிற்றினால், ஆட்டின் நான்கு கால்களையும் ஒன்றாக இழுத்துக் கட்டினான்.

வெள்ளிக் கிண்ணம் ஒன்றை ஆட்டின் கழுத்திற்கு அடியில் வைத்த முக்காலா, இழுத்துக் கட்டிய நான்கு கால்களையும், தனது ஒரு‌ காலால் அழுத்திப் பிடித்தான். ஆட்டின் ஒரு‌ வாயை, ஒரு‌‌ கையால் சேர்த்து மூடினான். அதன் தொண்டைப் பகுதியில் ஓடும் நரம்பினை, எந்தக் குழப்பமும் இல்லாமல், மினுங்கிய சிறு கத்தியால் ஒரே இழுவையில் அறுத்தான். சீறிப்பாய்ந்த இரத்தம், வெள்ளிக்கிண்ணத்தில் ஓசையோடு நிரம்பி நுரைத்தது. முக்காலாவின் கால்களுக்குள் கிடந்த ஆட்டின் உடம்பில் உயிர் விலகித் துடித்தது. அதன் பிறகு, கழுத்தோடு கத்தியை முன்னும் பின்னுமாக ஓடவிட்ட முக்காலா, ஒரு கிளையிலிருந்துப் பூவைப் பிடுங்கும் லாவகத்துடன் அறுத்து எடுத்தான்.’ என்று எழுதியிருக்கிறார். ஐயோ! ஒரு உடம்பில் இருந்து தலையை அறுத்தெடுப்பதை எப்படி பூ பறிப்பது போல் என்று‌ ஒப்பிட முடியும்? எப்படி எழுத முடிகிறது இதை? அந்த இடத்தில் நான் நின்றுவிட்டேன். அப்போது புரிந்துக்கொண்டேன் இந்த எழுத்தாளர் கொஞ்சம் வேறு மாதிரியானவர் என்பதை! ஏனென்றால், தெய்வீகனுடைய எழுத்துக்களை முதல்முறையாகப் படிக்கிறேன்.

திருவேட்கை நூல் வெளியீட்டு விழா

சரி, மூன்று பேர் வந்தார்கள், ஒரு‌ ஆட்டை அறுத்தார்கள். இதனால் கிடைத்தது என்ன? ஒரு‌ ஆட்டை அறுப்பதை எல்லோராலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. வழக்கமாக நமக்கு ஏற்படும் அதிர்ச்சி போல், இந்தக் கதையோட ஹீரோக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதில் சொல்லிக்கொள்ளும் அளவு பெரிய விஷயம் என்ன இருக்கிறது? எதற்கு இதை சொல்லவேண்டும் ? ஆட்டை அறுப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் அந்த ரூமிலிருந்து விலகி ஓடுகிறான். ஓடிப் போகும்போது, ஒரு‌ பெரியப் பாம்பு படுத்திருப்பதைப் பார்த்து, மறுபடியும் ஆடு அறுத்த இடத்திற்கே வருகிறான்‌‌. இதற்கு அப்புறம் எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்றால், ஈழத்திலிருந்து இங்கு வரும் ப்ராஸஸ் ஏர்போர்ட் உடனோ, கள்ளத் தோணியில் இறங்குகிற இடத்தோடோ முடிவதில்லை. அதைத் தாண்டியும் ஒரு‌ பிராசஸ் உண்டு. என்னவென்றால், இராணுவம் இவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பதற்கான காயத்தை இவர்கள் உடம்பில் ஏற்படுத்த வேண்டும். அந்தக் காயத்தை எப்படி ஏற்படுத்துகிறார்கள் என்றால், ‘அடுப்புப் பக்கத்தில் பெரிய சர்வம் ஒன்றில், பல நீளங்களிலான அலுமனியத் தடிகள் இருந்தன. அந்த அறையில் சட்டையை கழற்றிவிட்டு வெற்றுடம்பாக, நடுவில் இருந்த நீளமான மேஜையில் குப்பற படுத்தேன். எதுவும் கேட்கவில்லை. அறையின் மூலையில் கங்குத் தீயின் ஓசை மட்டும் அதிர்ந்து பரவியது.

சற்று நேரத்தில், என்னை நோக்கி வருகிற காலடிச் சத்தங்கள் பேரிடியாகக் கேட்டன. முதுகுத்தசையை கிழித்தது போல் தீயினால் இரண்டு ஒத்தடங்கள் ஆழமாக என்னைப் பிளந்தன. தடம் பட்ட நீள் காயங்கள் இதயத்ததின் வழி ஈட்டிபோல் பாய்ந்தன. மூளை நரம்புகளில் ஒன்றிரண்டு வெடித்து, உள்ளே அமிலமாகக் கரைந்து ஓடியது. தடித்தத் தோளின் மீது படிந்த அலுமனியத் தணல் குழாய், சருமத்தை சதையோடுப் பொசுக்கியது. அந்த நேரம் எனது கால்களினுள் கைகளையும் அழுத்திக் கொண்டதினால், எனது தேகம் பெருவலியினுள் கோரமாக புகுந்தது. குறி விரைத்தது. தடித்த மரத் துண்டினை பலம் முழுவதும் திரட்டிக் கடித்து, வலியைக் கரைக்கப் பார்த்தேன். வாய் நீர் வழிந்து நிலத்தில் விழுந்தது. விழிகள் இரண்டும் மேலே சொருகின.’ என்று எழுதிகிறார். ஒரு‌ ஆடு அறுப்பதைப் பார்க்க முடியாத ஒருவனுக்கு இப்படி ஒரு வலியை, ஏறத்தாழ சாகும் போது அந்த ஆடு என்ன வலியை அனுபவித்திருக்குமோ, அதற்கு நிகரான ஒரு வலியை இவன் அனுபவிக்கிறான். இதற்காகத் தான் முன்பு ஆடு அறுப்பதைச் சொல்லியிருப்பார் போல!

திருவேட்கை நூல் வெளியீட்டு விழா

இதற்குப் பின் எழுந்து நிற்கிறான். அலுமனியத் தடிகளைக் கொண்டு வடுக்களை ஏற்படுத்திய பிறகு எழுந்து நிற்கிறான். ‘எழுந்து நிற்கும்போது முதுகில் இன்னமும் தீ வடிந்துகொண்டே இருந்தது’ என்று எழுதுகிறார். இந்த வரி எனக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்தது.ஒரு ஆட்டை அறுப்பதைக் கூட பார்க்க முடியாத ஒருவனுக்கு இவ்வளவு பெரிய வலியைக் கொடுத்துவிட்டார்கள். இந்தத் தீக்காயத்தை ஏற்படுத்திய முக்காலா ஹீரோவைப் பார்த்துச் சொல்கிறார், ‘நீ விடுதலைத்காகப் போரிட்ட வீரன் சகோதரா! எனக்குத் தெரியும். செல்லக்கிளி சொல்லியிருக்கிறாள். எதற்கும் அஞ்சாதே’ என்கிறார்.

எனக்கு அதிர்ச்சி. இவன் போர்வீரனா? போர்களத்தில் நின்று சண்டையிட்ட ஒருவனா? களத்தில் நின்று போராடிய ஒருவன், எதிரியைக் கொன்ற ஒருவன் எப்படி ஆடு அறுப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று நடுங்க முடியும்? காடுகளுக்குள் வசித்தவர்கள் எப்படி பாம்பைப் பார்த்து நடுங்க முடியும்? இவனுக்கு மட்டும் இப்படியா? இல்லை ஈழத்தில் எதிரையை சாய்க்கப் போராடிய எல்லாருக்குள்ளும் இந்த மெல்லிய உணர்வு இருக்குமா? என் பல கேள்விகள் எழுந்தன. மீண்டும் மீண்டும் கதையைப் படிக்கிறேன். இவர் இந்தக் கதையை பல ஆராய்ச்சிகளுக்குப் பின் எழுதியிருக்கக்கூடும். அவருடைய எழுத்தில் பல நுட்பங்கள் தெரிகின்றன.

திருவேட்கை நூல் வெளியீட்டு விழா

இப்படியான கதையை தெய்வீகன் எப்படி தொடங்குகிறார் என்றால், ‘மூண்டு அணைந்தக் காட்டுத்தீயால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன’ என்று தொடங்குகிறார். இதுதான் ஈழத்தவர்களின் நிலை. பெரியக் காட்டுத்தீயில் எரிந்தப் பெருமரங்களின் எச்சங்களாகத்தான் இருக்கிறார்கள். இதை முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார்.

ஒரு கதைக்குள் பல நுட்பங்களைக் கொண்டு எழுதுகிறவர் தெய்வீகன்.” என நெகிழ்ந்து பேசினார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.