அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை, நாளை பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், அதிகாரபூர்வமாக நாளை மத்திய அரசு அலுவலகங்களில் அரைநாள் விடுப்பும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் நாளை நடைபெறும் விழாவைப் புறக்கணித்துவிட்டன.

அயோத்தி ராமர் கோயில்

அதிலும், “ராமர் கோயிலில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என தி.மு.க வெளிப்படையாகக் கூறிவிட்டது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `நாளை நடைபெறும் ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்ப செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது, இந்து விரோத செயல்’ என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருக்கும் நாளிதழ் செய்தியில், நாளை தமிழ்நாட்டு கோயில்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்ய அரசு தடை உத்தரவு போட்டிருப்பதாகவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை பொது இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்வதை போலீஸார் தடுப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்

இதைக் குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன், “22 ஜனவரி 2024 அன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. ஆனால், இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை / பஜனை / பிரசாதம் / அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தனியாருக்குச் சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களைக் கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இத்தகைய இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுகிறார்.

மேலும் மற்றுமொரு பதிவில், “நேரலை ஒளிபரப்பு தடையை நியாயப்படுத்த தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமற்ற முறையில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கூறி வருகிறது. அயோத்தி தீர்ப்பு வந்த நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நாளில்கூட நாட்டின் எந்தப் பகுதியிலும் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டில், ராமரைக் கொண்டாட மக்கள் தாமாக முன்வந்து பங்கேற்பது, இந்து விரோத தி.மு.க-வை கொந்தளிக்க வைத்திருக்கிறது” நிர்மலா சீதாராமன் பதிவிட்டிருக்கிறார்.

நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், தி.மு.க இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என்று பதிவிட்டு குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.