பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் ஜனவரி 14 அன்று 6 மாடுகளுக்கு உணவளித்தார். இந்த புகைப்படங்கள் கவனம் பெற்றன.

புங்கனூர் மாடுகளுக்கு உணவளிக்கும் மோடி!

குட்டையான நாட்டின பசுக்களுக்கு புல்லைக் கொடுத்து அதை ஆரத்தழுவிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையவாசிகளை அதிகம் கவர்ந்தது. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்த மாடுகள் ‘புங்கனூர் குட்டை’ என்றழைக்கப்படுகிறது.

ஆந்திரா-தமிழக எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் இந்த மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

இவை 70 முதல் 90 செ.மீ உயரமும், 200 கிலோ எடையுடன் இருக்கும். சிறிய கொம்புகள் மற்றும் நீண்ட மெல்லிய வாலோடு இவற்றின் தோற்றம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளைப் போன்றே இருக்கும்.

சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்த ராமமோகன் இந்த மாடுகள் குறித்து தெரிவித்துள்ளதாவது, ”இந்திய நாட்டு மாட்டு இனங்கள்ல 40-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள், கர்நாடகாவுல உள்ள மலநாடு கிட்டா மாதிரியே… இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. 3, 4 அடி உயரம்தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு ‘புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு.

புங்கனூர் குட்டை மாடு..!

குறைந்த கொழுப்பு… அதிக புரோட்டீன்!

வெள்ளை, பழுப்பு, கறுப்பு, சாம்பல்னு நாலு நிறத்துல இருக்குது. இதோட பால்ல கொழுப்பு குறைவு. இப்பெல்லாம் தினமும் இரண்டு, மூணுவேளை தவறாம டீ, காபி, பால் குடிக்கிறாங்க. உடம்புல கொழுப்புச்சத்து ஏறாம இருக்கணும்னு நினைக்கறவங்களுக்கு, இந்த மாட்டோட பால் ரொம்ப நல்லது. இதுல, புரத சத்து கூடுதலா இருக்கு. பால் ரொம்ப சுவையா இருக்கும். முப்பது வருஷங்களுக்கு முன்ன மாவட்டம் முழுவதும் பரவலா இருந்துச்சு. நாட்டு மாட்டோட அவசியம் நிறைய பேருக்குத் தெரியாததால, இந்த இனங்களோட எண்ணிக்கை குறைஞ்சிட்டு வருது. முன்ன இதோட காளைகளை உழவுக்குக்கூட பயன்படுத்தியிருக்காங்க. இப்போ, காளைகள் குறைஞ்சு போயிடுச்சு. பசுக்களைக் கூட, பாலுக்காகத்தான் வளர்க்கறாங்க. ரொம்ப சாதுவான, அன்பான மாடுகள் இவை. செல்லப்பிராணிபோல வீட்டிலேயேகூட வளர்க்கலாம்.

புங்கனூர் மாடுகள்

ஒரு நாளைக்கு 6 லிட்டர் பால்!

சாதாரணமா நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தா போதும். இந்தவகை மாடுகளுக்கு பாயுற பழக்கம் இல்லாததால, யாரும் பயமில்லாம பராமரிக்கலாம். ஒருவேளைக்கு 2 லிட்டர்ல இருந்து 3 லிட்டர் வரைக்கும் பால் கிடைக்கும். ஒரு நாளைக்கு 6 லிட்டர். வறட்சி காலங்கள்லயும், இருக்கிற தீனியை வெச்சே சமாளிச்சுடும்.

சித்தூர் மாவட்டம், பலமனேர் கால்நடை பண்ணையிலும், புங்கனூர் காளைகள், பசு மாடுகள் இருக்கு. அதற்கான செயற்கை கருவூட்டல் ஊசியும் அங்க கிடைக்குது. எங்களை மாதிரி ஆர்வம் உள்ளவங்கள்லாம் குழுவா சேர்ந்து புங்கனூர் மாடுகள பரவலாக்கறதுக்கான முயற்சிகளைச் செஞ்சுட்டு இருக்கோம்” என்றார்.

புங்கனூர் மாடுகளுக்கு உணவளிக்கும் மோடி!

20-வது கால்நடை கணக்கெடுப்பில், 2012-ல் இந்தியாவில் 13,275 புங்கனூர் மாடுகள் பதிவாகியுள்ளன. அதுவே 2013-ல் 2,772 மாடுகள் மட்டுமே இருந்தன. அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச அரசு `மிஷன் புங்கனூர்’ என்ற பெயரில் 2020-ல் இந்த இன மாடுகளை பாதுகாக்க கணிசமான தொகையை ஒதுக்கியது. 

புங்கனூர் இன மாடு அதன் வயது மற்றும் தோற்றம் அடிப்படையில் 1 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை விலை போகிறது என்கிறார்கள் விவசாயிகள். நாட்டு மாடுகளை வளர்ப்பதே பெரிய கௌரவம் என்பதால் இந்த வகை மாடுகளை நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். புங்கனூர் இன மாடுகளை `தங்கச்சுரங்கம்’ எனப் போற்றுகின்றனர் மக்கள். பால், உழவு, சாணம் என பலவிதப் பயன்பாடுகளை கொண்டவை நாட்டு மாடுகள்.

புங்கனூர் மாடுகளை போன்றே கிர், சாஹிவால், பர்கூர், ஒங்கோல் மற்றும் காங்கேயம் ஆகியவை இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் சில உள்நாட்டு மாட்டினங்கள். இந்தியாவின் உள்நாட்டு மாட்டு இனங்களை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.