வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“வெயில் காலையிலேயே உச்சிய பெளக்குது. இந்த மனுஷன் எங்குத போனவ?? ஏ……பிகேஏஏஏஏஏஏஏ….” என்று ராணியம்மாள் எழுப்பிய அதிர்வலை அவரது வீடு கடந்து, புனித மத்தேயு ஆலயத்தின் சுவற்றில் மோதி அங்கே ஜோடியாக அமர்த்திருந்த இரு புறாக்களுக்கு இடையில் நுழைந்து பள்ளம் துறையின் கடற்கரை உப்புக் காற்றோடு பயணித்தது.

“என்னவே தெக்கால தள்ளுன காத்து இப்ப மேக்கால தள்ளுது!!” படகை கரைக்கு இழுத்தபடியே சூசை குரல் எழுப்பினான்.

கரையில் காத்திருந்த பங்கிராஸ் “எல்லாம் எம் மகாராணியோட அனக்கமாத்தாம்பல இருக்கும். கொண்டாடா படக வெரசா” என்று அதட்டினார்.

“வாரன் வாரன், என்ன இத்தன நெரிபிரி காலையிலேயே? பறக்குதிய!”

“எம் மக்க வாராங்களே இந்தக் கிழவனப் பாக்க. பாற மீனக் கொண்டாலே வெரசா”

ஐந்து முழு பாறை மீன்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தான் சூசை. அதை வாங்கிக்கொண்டு, ஒரு கையில் புகைந்த பீடியைப் பிடித்தபடி கடலோரத்தில் நடை போட்டார்.

வழியில் மூன்று சிறு பிள்ளைகள் டயரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். பங்கிராஸைப் பார்த்ததும் “ஐ!!! பி.கே தாத்தா, பி.கே தாத்தா” என்று ஓடி வந்தார்கள்.

Representational Image

“ஹ ஹ ஹ” என்று ஊரே அதிர சிரித்து விட்டு,” என்ன பிள்ளைகளா, தாத்தனக் கண்டதும் ஓடி வந்தவளா, இருங்க இருங்க” என்று பீடியை இரு பல் வரிசைகளுக்கு நடுவில் பத்திரப்படுத்தி விட்டு, தன் பட்டா பட்டியில் இருந்த சில்லறைக் காசுகளை எடுத்துப் பிள்ளைகளிடம் கொடுத்து “இந்தா ஏதாவது தீனி வாங்கிக்கோ.. போ.. ஓடு… “ என்று அனுப்பி வைத்தார்.

குழந்தைகளை அனுப்பிவிட்டு பத்து எட்டு வைத்திருப்பார் கரையில் படகு ஒன்று வந்திருக்க அதிலிருந்து ஆரோன் இறங்கி வருவதைக் கண்டு சற்று நின்றார். அருகில் வந்தவனை “வாலே, என்ன மீன் பிடிக்கப் போனியோ? தங்கலா லே?”

“ஆமா மாமா, மூனு நாலு. நிறைய கிட்டுச்சு.”

ஓங்கி அவன் தலையில் தட்டியவர்,

“போ டே அறிவு கெட்டவனே, கல்யாணமானப் புதுப் பெண்டாட்டிய விட்டு புட்டு கடலுக்குப் போயீ நீ மீனு கொண்டாரலன்னு இஞ்ச எவன் அழுதான் லே”

“போ மாமா. உனக்கு இதே பேச்சு. புது பெண்டாட்டினா அவளுக்கும் வயிறு இருக்குல்ல. சோறு நான் தானே போடணும்.”

“ஏலே மக்கா..” என்று பேச்சை இழுத்தவரிடம் “மாமா ரொம்ப நேரமா ஆலய வாசல்ல கிழவி உனக்காகத்தான் காத்திருக்கு. நீ போய் கிழவிய பாரு, நான் போய் என் பெண்டாட்டிய பாக்குதேன்.”

“யாம்ல… லே”

“சாயுங்காலம் வாரன் கடற்கரைக்கு அப்போ சொல்லும் மாமா உம் பிரசங்கத்த” என்று அவர் பிடியிலிருந்து ஓடி மறைந்தான் ஆரோன்.

அவன் ஓடுவதைக் கண்டு மீண்டும் தன் கனீர் சிரிப்பை உப்புக் காற்றில் கரைத்தபடி நடையைத் தொடர்ந்தார். ஆலயத்தின் வாசலில் தொண்ணூற்று இரண்டு வயதான ரோசாம்மாள் அமர்ந்திருந்தார் கடலைப் பார்த்தபடி.

பாட்டியின் அருகில் வந்த பங்கிராஸ், “ஏ.. ரோசாமா. என்ன கிழவி காலையிலேயே வந்து உட்கார்ந்திருக்கிறவ? என்ன கதை?”

“உனக்காக தான் ஒக்காந்து இருக்கேன் மக்கா. எங்க போய் வர?”தள்ளாடிய குரலில் ரோசாம்மாள் கேட்டார்.

“மீன் வாங்கியாரப் போனேன். சாய குடிச்சவளா?”

“இல்ல மக்கா”

“ இரு வாரன்” என்று டீக்கடைக்கு ஓடினார் பங்கிராஸ்.

“ஏலே சீமோனு, ரெண்டு சாய போடுலே”

“உம்மக் காணோம்னு அக்கா அங்க அலறிக்கிட்டு இருக்கு, நீரு சாய குடிக்க வந்துருக்கீரு?”

“அவ கெடக்குறா கெழவி. அவளத் தொரத்தி விட்டுட்டு நான் நல்ல சின்னப் புள்ளயாக் கொண்டாரப் போறேன் எனக்கு” என்று கூறிவிட்டு உடல் குழுங்கச் சிரித்தார்.

“ம்க்கும் நீயும் இதயேத் தான் நாப்பது வருஷமா சொல்லுத”.

“சரிலே, சாயப் போடு ரோசாம்மா வெய்ட்டிங்”.

“டெய்லியும் ரோசாக் கெழவி அது மகன் கதையச் சொல்லி உன்னய ஏமாத்தி சாயா வாங்கிக் குடிக்குது போ”

“ஆமாலே, ஒரு சாய வாங்கிக் குடுத்து நான் சேத்த பலகோடில எனக்கு நஷ்டம் ஆவப்போவுது பாரு. சாயாவக் குட்றா படுக்காளி”

சீமோன் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டு ரோசாம்மாள் அருகில் சென்றார். ஒரு டம்ளரை ரோசாம்மாவிற்குக் கொடுத்துவிட்டு, மற்றொன்றை தான் குடிக்க ஆரம்பித்தார்.

“அப்புறம் ரோசாம்மா. ஒம் மருமவப்புள்ள எப்படி இருக்கா. கஞ்சி கிஞ்சி ஊத்துறவளா உனக்கு?”

“ம்க்கும். ஊத்துறா ஊத்துறா நல்லா இடி கஞ்சியா ஊத்துறா. எம்மவன் கடலோட போயி மீனுக்கு எறையானானே மோனே நான் அப்பியே அனாதியாயிட்டேன்” என்று அழ ஆரம்பித்தார்.

Representational Image

“சரி சரி சரி.. என்னத்த செய்ய, நான் தான என் நண்பனத் தூக்கிக் கொடுத்தேன் மீனுக்கு… “ குரல் நடுங்கியது அந்தக் காட்சியை மீண்டும் கண் முன் கொண்டுவர. “திடீருனு மாரடப்பு வரும்னு யாரு எதிர்பாத்தா”

“சாவுற வயசா எம் மோனுக்கு, நான் சொல்லிக் கேட்டவனா? அவனுக்க அப்பன் குடிப் பழக்கத்த இவனுமில்ல பழகி ஒடலக் கெடுத்துக்கிட்டான் மக்கா. குடியோட சேத்துப் புகையும்லா உள்ள கொழுத்திப் போட்டான். என்னய அனாதி ஆகிட்டுச்சே தண்ணியும் புகையும். வாழ்ந்தா அருமநாயகம் செசீலி போல வாழனும்லா! பெத்த ஆறு மக்களும் சுத்தி நின்னு வழி அனுப்பிச்சீங்களே உனக்க அப்பன் அம்மைய. எனக்கு அந்தக் கொடுப்பனை இல்லலா, இந்தக் கெழவிக்கு இருந்த ஒரு மகனும் முந்திக்கிட்டான்லா.”

பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தபடி, “அடியே ரோசாம்மா, நான் இருக்கன்லா. நான் சாவலியே இன்னும். உம்மவன் சாவல கெழவி. நான் இருக்கேன். இந்தக் கையால நானும்லா கஞ்சி குடிச்சிருக்கன். உன்ன வழியனுப்ப நான் இருக்கேன். இந்த ஒடம்பில உசிர் இருக்குத வர நீ அனாதை இல்ல கேட்டியா? ஏலே.. ரோசாம்மா” என்று தோளோடு அனைத்துக் கொண்டார் பங்கிராஸ்.

“ஆமா மக்கா, ஆமா ஆமா.. எம் மவனா நீ இருக்க. எம் மருமவளா கஞ்சி ஊத்த ராணியம்மா இருக்க எனக்கென்ன கவல” என்று கண்ணீரையும் மூக்குச்சளியையும் தன் முந்தானையில் துடைத்துக் கொண்டு,

“ஏலே மக்கா, என்ன ஒரே கலவரமா இருக்கு உன் வீடு. உன் பெண்டாட்டி அங்கனயும் இங்கனயும் கெடந்து பரபரன்னு அலயுறவ?” என்று கேட்டார்.

“எம்மக்க வாராங்க மா, என் கூட கொஞ்ச நாள் இருக்க அதான்…” என்று இழுக்கவும், ராணியம்மாள் கையில் கழியுடன் பங்கிராஸை நோக்கி ஓடி வரவும் சரியாக இருந்தது.

“அய்யய்யோ… ரோசாம்மா.., ராணியம்மா தடியோட கம்மிங் நான் உன்னய அப்புறம் பாக்குதேன்.மதியம் வீட்டுக்கு வா என்ன சாப்பிட” என்று கையில் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு அடிவாங்க ஓடினார்.

“ஏ.. பி.கே.. ஏலேய்ய்ய்” என்று ஓங்கிய கையோடு நெருங்கிய ராணியம்மாளின் கையில் இருந்த கழியைப் பிடுங்கிவிட்டு மீன் வாங்கி வந்தப் பையைத் திணித்தார். அப்படியும் விடாமல் ராணியம்மாளின் கையால் ஒரு இடி வாங்கினார்.

“எங்க போனவ?. புள்ளைங்க வார நேரமாச்சு. போனா போன யெடம் வந்தா வந்த யெடம். மீனக் கொண்டாந்தா தான கொளம்பு வக்க ஆகும். எங்க போனிய?”

“சங்குத்துறை போயி வாங்கி வந்தன். மீனு வர நேரமாயிடுச்சு. “ திருதிருவென முழித்துக் கொண்டே கூறினார்.

“வழியில போறவ வாரவன எல்லாம் இழுத்து வச்சுக் கதச்சுட்டு வார நேரம் ஆயுருக்கும். எனக்குத் தெரியாதா?”

“கள்ளி,. நீ சரியான கள்ளியில்லா! உன்கிட்ட பொய் சொல்லிட முடியுமா?”

“நீரு பொய் சொல்லி என்ன ஆச்சு சொல்லாம என்ன ஆச்சு. இந்தப் பீடிய வளிக்காதன்னா சொல்றத கேட்டவுளா?”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இம்மானுவேல் கையைக் காற்றில் வீசியபடி “ பீ.கே… பீ.கே…அண்ணே” என்று அலறிக்கொண்டே தொலைவில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் ராணியம்மாள் எரிமலையாகச் சிவக்க, அருகில் கிடந்த கல்லை எடுத்து அவன் மீது எரியத் தயாரானார்.

“வா. வா.. கிட்ட வா உன் மண்டைய இன்னைக்குப் பொலந்து அதுல கொளம்பு வைக்கேன். தெனமும் குடிக்கக் கூட்டாளி உனக்குப் பி.கே.” என்று திட்டிக் கொண்டே தயாரானார்.

ராணியம்மாளின் கையில் கல்லைக் கண்ட இம்மானுவேல், கையிலியை சுருட்டிக் கொண்டு வந்த திசையிலேயே திரும்பி ஓட, பங்கிராஸோ ராணியம்மாளிடம் இருந்து தப்பிக்கக் கடற்கரையை நோக்கி ஓடினார்.

“ஓடும் ஓடும் பி.கே… எங்க ஓடினாலும் வீட்டுக்குத் தான் வந்தாகனும்” என்று எச்சரிக்கை அறிக்கையை வீசிவிட்டு வீட்டிற்கு நடை போட்டார் ராணியம்மாள்.

கடற்கரைக்கு வந்த பங்கிராஸ் மணல் மேட்டில் அமர்ந்து கொண்டார் கடல் அலையைப் பார்த்தபடி. புகையைப் பிடித்துக் காற்றில் கலந்துவிட்ட படி கடல் அலையில் நினைவுகளைத் திருப்பினார்.அருமைநாயகமும் செசீலியம்மாவும் ஈன்ற ஆறு மக்களில் மூன்றாவதாகப் பிறந்தவர் பங்கிராஸ். பெரிதாகப் படிக்கவில்லை அதனால்

பெரிதாகச் சம்பாதிக்கவும் இல்லை.எனினும் கள்ளம் கபடம் இல்லா அவர் குழந்தை உள்ளத்தால் அவர் சம்பாதித்த பள்ளம்துறை மக்கள் ஏராளம். பால்ய

காலத்தில் கட்டு மஸ்தான் உடல்கொண்டு மீன் பிடித்து வருவார் நடுகடலில் இருந்து. இவரது சிரிப்பலையில் மயங்கியே மீன்கள் சிக்குமெனக் கூறுவார்கள். பங்கிராஸிற்கு நாள் முழுக்க உழைக்க வேண்டும், மீன் கறியும் சோரும் உண்ண வேண்டும்,சிறிது மது அருந்திவிட்டு ராணியம்மாளோடும்,அக்கம் பக்கத்தார் வீட்டாரோடும் கடற்கரை மணலில் அமர்ந்து உரையாடிவிட்டு வீடு திரும்ப வேண்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விவிலியத்தை வைத்துப் பிராத்தனை செய்து விட்டு உறங்க வேண்டும். இதுவே பங்கிராஸின் அன்றாட வாழ்க்கை. யாருக்கும் தீங்கு நினைக்காத வாழ்க்கை.

“அண்ணே! அண்ணே!” என்று இம்மானுவேல் பங்கிராஸை உலுக்கினான்.

“ஏலே இம்மானு வந்துட்டியா. எம் பெண்டாட்டிக்கு பயந்து ஓட்டம் பிடிச்சவன் கன்னியாகுமரிலலா போய் நிப்பன்னு நெனச்சேன்” கனீர் சிரிப்போடு பரிகாசம் செய்தார்.

“நான் மொதல்ல உன்னத்தான் பாத்தேன் கேட்டுச்சா. மைணிய அப்புறம் தான் பாத்தன். அதுக்கப்புறம் மைணி கையில இருந்த பாறைய பாத்தன். பெறகு எடுத்தேன் ஓட்டம். அதுசரி என்னா நான் வந்தது கூட அறியாம கடலயே பாத்துட்டு இருத்தவன்?”

“என் கூட்டுக்காரன் யேசுநேசன நெனச்சுக்கிட்டேன் மக்கா”

“ஓ.. நண்பன் ஞாபகம் வந்துட்டதா?”

“லே மக்கா. இந்தப் பெருங்கடல் அழியுமா லே. உப்புக்காத்து மணம் மாறுமா லே. கடல் தண்ணி ருசி மாறுமாலே. இந்த அலை ஓஞ்சுடுமா லே. இல்லலா?. அப்படியாக்கும் எனக்கும் எனக்க நேசனுக்கும் உள்ள நட்பு. இந்தக் கடல் உள்ள வர எங்க நெனப்ப இந்தக் கடல் கொண்டாடும்லே. இந்த உப்புத் தண்ணியோட பெறந்து, வளர்ந்து, வாழ்ந்து அதுலயே மடிய ஒரு குடுப்பன வேணும்லா. அது என் நண்பனுக்குக் கிட்டுச்சுல்லா மக்கா”.

“ம்.. ஆமா ஆமா.. நேசண்ணே பெரிய சண்டியர்லா !!”

“அவன் நியாயஸ்தன் லே. யேசு சிலுவைய சொமந்த கணக்கால்ல என் நேசன் இந்த ஊர்மக்களச் சொமந்தான்.

Representational Image

ஒரு பேச்சு, ஒரு சொல்லு எப்பயும் நியாயம் தான், அவனுக்க நியாயம் அது. ஊருக்கு ஒன்னுனா, ஓடோடி வருவான்லா. பள்ளத்து மக்க கழுமாடன்லா எனக்க நேசன். ஆளு என்ன திடம் லே. ஒத்த ஆளா ஒரு படக இழுப்பான்ல. ஒரம் பாஞ்ச நெஞ்சுல்லா அவன் நெஞ்சு. அவனுக்க முன்ன ஆரும் அழக் கூடாது. கையில பையில உள்ளதக் கொடுத்துடுவான் வள்ளல். ரோசாம்மா அவனுக்கு பேரு சும்மாவா வச்சது யேசுநேசன்னு.”

“அதுவும் சரிதான். ரோசாக் கெழவி இன்னைக்கு ஆலய வாசல்லயே கெடக்கே. இன்னைக்கு நேசண்ணன் மரிச்ச நாளுன்னா?”

“ஏலே இம்மானே,மரிச்சவனுக்கு தான் மரிச்ச நாள். வாழ்ற நமக்கு அவன் இல்லாம வாழுற ஒவ்வொரு நாளுமே அவன் மரிச்ச நாளு தான் மக்கா.”

சிறிய மௌனத்தின் பின் தொடர்ந்தார்,”அவனுக்க ஆசை கனவெல்லாமே அவனக்க சிந்தனயப் போலவே பெருசுல்லா! பெரிய படகு வாங்கனும், பெரிய வலை வீசனும், அதுல வல்லிய பெரிய மீன் பிடிக்கனும்.

ஒருதடவ என் கூட்டாளி ஒருத்தன் மெர்லின் மீனப் புடிக்கயில அது குத்தி மரிச்சான்லா, அப்போ கடலுக்கு நடுவில ஆஸ்பத்திரியே கட்டினா என்னன்னு கேட்டவன்லா என் நேசன். அவன் மரிக்க முதல் நாள் நடுக்கடல்ல தங்கல். அஞ்சு நாளு தங்கி மீன் புடிச்சோம். படகு ஆட்டத்துல சமைக்குறது பெரும்பாடு. சோறு நான் வச்சன். வஞ்சரமீனு கொளம்பு எனக்க நேசன் வச்சான். அவன் கையால சாப்பிட வரம் வேணும்லா. அம்புட்டு ருசிலே அவன் கை மணம். தின்னு முடிச்சு, அடுத்து போதை. போதையில மல்லாந்து படுத்துட்டு சாவுறதப் பத்திப் பேசுறான் படுக்காளி.

‘ஏலே பி.கே. நான் செத்தா அழுவியாலேன்னு கேட்டான். உனக்கு நான் முந்திப்பன்லா நீ அழுவியாலன்னு நான் கேட்டேன்.கண்டிப்பா இல்லலே நான் தான் முதல்ல

போவேன். ஆனா நீ அழப்பிடாதுலேன்னான். நான் பதில் பேசாம அமைதியா இருந்தேன். அவன் சொன்னான் நான் மரிச்சாலும் அந்த வானத்துல் ஒரு நட்சத்திரமா இருப்பன்லே. அதனால நீ அழப்பிடாதுல. எனக்க அம்மய மட்டும் பாத்துக்கலே. ஏலே பி.கே, ஒரே ஒரு ஆசலே எனக்கு. கடைசி ஆசைலே. என் உயிர் போன பின்ன என் ஒடல நடுக்கடல்ல இந்த மீன்களுக்கு எரயா போட்டுடுல. மீனத் தின்னு வளந்த ஒடம்பு மீனுக்குத்தான்ல சொந்தம் னு சொன்னான்.

அதோடு பங்கிராஸ் நிறுத்திக்கொண்டார். இம்மானுவேலும் அதற்கு மேல் கேட்க மனமில்லாமல் கனத்த நெஞ்சோடு அமைதியாக எழுந்து போனான். அவன் போன பிறகு மணல் மீது தன் உடலை விரித்துப் படுத்துக் கொண்டார் பங்கிராஸ். “லே நேசா” என்று பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார்..

தங்கல் முடிந்து கரை வந்தபின், படகை இழுக்கும் போது நெஞ்சைப் பிடித்து கடற்கரை நீரில் விழுந்த யேசுநேசன் எழவேயில்லை. சடங்கெல்லாம் முடிந்து ஊரே படகுகளில் ஏறி யேசுநேசனை நடுக்கடல்லிற்குக் கூட்டிச்சென்றது. பங்கிராஸ் தனது ஆருயிர் நண்பனைக் கடலுக்கு சமர்ப்பித்தார் யேசுநேசனின் ஆசைப்படி.

கடற்கரையின் ஓரம் இருந்த தார் ரோட்டில் “டப.. டப.. டப..” வென ஆட்டோவின் சத்தம் கேட்டுக் கண்விழித்த பங்கிராஸ், கையிலியை வாரிக் கட்டிக் கொண்டு,

“எம் மக்களே… எம் மக்கா.. !!”என்று குரலெழுப்பி ஓடினார்.

“மாமா… மெதுவா, மெதுவா வாங்க” என்று ஆட்டோவில் இருந்து இறங்கினர் லேன்ஸிலினின் குடும்பத்தார்.

“என் ஐயா, எம் மக்களே” என்று லேன்ஸிலினையும், அவனது மனைவி மக்களையும் தன் பெரிய கரங்களால் வாரி அனைத்துக் கொண்டார். பேரக் குழந்தைகளை அள்ளி எடுத்து முத்தங்களைப் பதித்தார்.

பேரப் பிள்ளைகள் கடலைக் கண்டதும் விளையாட ஆவல் காட்ட ,

“போலாம் மக்களே.. வாங்க” என்று அழைத்துச் சென்றார்.

பிள்ளைகள் இருவரும் கடற்கரை மணலில் விளையாடத் துவங்கினர்.

“மோனே வா இஞ்ச இரி” என்று லேன்ஸிலினை தன் வலது பக்கத்திலும் அவனது மனைவி ஜெசியை  “வா மோளே மாமன் பக்கத்துல இரி” என்று தன் இடதுபக்கத்திலும் அமர வைத்துக்கொண்டார்.

“அப்புறம் மாமா எப்படி இருக்கீங்க. தொழில் உண்டா” லேன்ஸிலின் கேட்டான்.

“மாமனுக்கு என்ன கொற மக்களே எம் மக்க நீங்க இருக்கும் போது. எம் பேரப் பிள்ளைகளப் பாத்துட்டன்லா. இது போதுமே. இன்னும் இருபது பிராயம் கூடிடுச்சுலா?” என்று மகிழ்ச்சி பொங்கச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார், “தொழில் உண்டு மக்களே. இப்பம் கொஞ்சம் உடல் சொகமில்ல மக்கா. மாமன் உடல் நிலயப்  பொறுத்துப் போறன். முடியலன்னா வீட்டுல அத்தய வம்பிழுத்துட்டு  இருக்கன்” மீண்டும் சிரிப்பு.. “ முன்ன மாதிரி முடியல மோனே, எழுபது வயது கெழவன்லா” என்று கூறிச் சிரித்தார்.

Representational Image

“நீங்க நூற்றம்பது ஆனாலும் கிழவனாக மாட்டீங்க மாமா” ஜெசி கூறினாள்.

“அது சரி தான் மோளே.”என்று கூறி தன் பெரிய வயிறு மேலும் கீழும் குதிக்கச் சிரித்துவிட்டு,

““அவ்ளோ வேணாம் மக்களே. மாமன் சந்தோஷமா வாழ்ந்தாச்சு. எனக்கு அழகா மனைவி கெடச்சா வாழ, என்னையும் என் சேட்டையும் பொருத்து என்னோட வாழ்ந்துட்டா இது வரயும் மோளே. எங்களுக்குனு பிள்ளைக பெறக்காட்டாக் கூட என் அக்கா, தங்கச்சி மக்கள் நீங்க தான் எனக்க பிள்ளைகள் மக்களே.  நான் காசு பணம் சேக்கல மக்கா எனக்கு அது பெருசு இல்ல. கூட்டுக் குருவிகளைப் பார் அது களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. வானத்துப் பறவைகளை நோக்குங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத்தந்தை ? “ என்று விவிலியத்தின்  சில திருவசனங்களைக் கூறி மீதி என்ன என்பதுபோல் 

ஜெசியைப் பார்க்க,

“விண்ணகத்தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா !” என்று  மீதி வசனத்தை அவள் கூறினாள்.

“மாமா. நீங்க வெளிநாட்டுக்குப் போன கதைய சொல்லுங்க” தான் மாமன் மடியில் அமர்ந்து சிறுவயது முதல் கேட்ட கதையை இப்பொழுது புதிதாய் கேட்பது போல் கேட்டான் லேன்ஸிலின்.

“மாமா நீங்க வெளிநாட்டுக்கெல்லாம் போனீங்களா?எனக்கு சொல்லவே இல்ல?” ஜெசி ஆர்வமாய்க் கேட்டாள்.

“ஆமா மோளே. மாமன் அப்பம் பெரிய ஆளு. மீன் பிடித் தொழிலு கொஞ்சம் நலிவாச்சு அந்த சமயம். இங்க ஏஜெண்டு ஒருத்தன் வழியா பணங்கட்டி சவுதிக்கி அனுப்பி வச்சான். அங்கன ஒரு மூனு வருஷம் பணி செஞ்சன் மோளே. வேலன்னா கடுமையான வேலை மக்களே.”

“என்ன வேல மாமா?”  ஜெசி ஆர்வமாய்க் கேட்டாள்.

“ஒரு கடையில கணக்கு எழுதற வேலை மோளே. மாமன் சரியா படிக்கேல்ல, ஆனா மோளே எனக்க இங்கிலீஸ இந்தப் பள்ளம் மண்ணுல எவனும் பேச முடியாதுல்லா! கேட்டியா. அதோட மாமன் கடல்மீனா உண்டு வளந்த ஒடம்புல்லா. பெரிய பெரிய பெட்டி மூட்டை எல்லாம் கூட அசால்ட்டா தூக்குவேன் மோளே. அந்த வேலையுஞ் செஞ்சேன். அதுல கொஞ்சம் தப்பிச்சேன். அப்பப்போ காசு கெடைக்கும் அதை ராணியம்மாளுக்கு அனுப்பிட்டு கொஞ்சம் எஞ்செலவுக்கு வச்சுப்பன். ஒரு ஆறு மாசம் சரியாத்தான் சம்பளம் குடுத்தான் அந்தப் படுக்காளி பய அப்புறம் சரியாக் காசு தரல மக்கா”

“அய்யய்யோ, அப்புறம்?”

தனிந்த ரகசியமான குரலில் பங்கிராஸ் தொடர்ந்தார்,

“அது கூட பரவாயில்ல மக்கா. அந்தப் பாலைவனத்துல எங்கள மாதிரி வேலை ஆளுங்க தங்குறதுக்கு ஒரு எடம் இருக்கு. பெரிய பெரிய கண்டெய்னரு கண்டெய்னருகளா

ஒரு நூறு நூத்தைம்பது வரிசைகள்ல இருக்கும் மோளே. ஒவ்வொரு கண்டெய்னர்லயும் ஆம்பலைங்க ஆறு பேர்ல இருந்து எட்டு பேர் வர தங்கி இருப்பம்.”

“அச்சோ, எப்புடி மாமா கண்டெய்னர்ல தூங்குறது? ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்ல?” 

அதவிட ஒரு பெரிய கஷ்டம் இருந்துது மக்கா. மோனே அத உன்கிட்ட நான் இதுவர சொல்லல, இன்னைக்குத்தான் சொல்லுதேன். சவுதிக்கார பெம்பளைங்க ராத்திரியில ஜீப்பு வண்டிய ஓட்டிக்கிட்டு வருவாளுக மோனே. வந்து ஒவ்வொரு கண்டெயினரா தட்டுவாளுக.

“ எதுக்கு மாமா” ஜெசி கேட்டாள்.

சன்னமான குரலில் பங்கிராஸ் பதில் கூறினார், “அதுக்குத் தான் மோளே.. ” இடைவெளிவிட்டு  மீண்டும், “எத்தன பேர் வருவாளுங்க தெரியுமா?. கையில பெரிய பெரிய துப்பாக்கி வேற இருக்கும். இவளுகளப் பத்தி தெருஞ்சவன் கதவத் தெறக்க மாட்டான். எவனாவது புதுசா வந்தவன் தெரியாம கதவத் தெறந்தான், முடுஞ்சான். துப்பாக்கி முனையில தூக்கிட்டு போயிடிவாளுவ”. 

“எதுக்கு மாமா?” மீண்டும் ஜெசி.

“அட அதுக்குத் தான் மோளே.” 

மேலும் விளக்கி,” நம்ம பயலுவல வெச்சு எத்தன பேரு புள்ளப் பெத்துருக்காளுவ தெரியுமா மக்களே!”

“ஆ…” காரணத்தைக் கேட்ட லேன்ஸிலினும் ஜெசியும் அதிர்ச்சியில், ஒருமித்தக் குரலில்,

“மாமா…..” என்று இழுத்தார்கள்.

“சே… சே… சே…. நான் கண்டெயினர ராத்திரி தொரக்கவே மாட்டேன் மக்கா. என் காலம் எல்லாம் அத்தையோட தான் மக்களே.” 

Representational Image

“ம்ம்.. அப்புறம் எப்போ எப்படி வந்தீங்க பள்ளம்துறைக்குத் திரும்பி?”

“கடுமையான வெய்யில் வேற மோளே. அதுல கடுமையான வேலையுஞ் செய்ய முடியல்ல. செஞ்சாலும் அந்த எரப்பாளி சம்பளமும் நியாயமாத் தரல. லீவெல்லாம் லேசுல குடுக்க மாட்டானுவ மக்கா. ஒருத்தன் லீவுக்குப் போனான் நம்ம ஊர்ப் பய தான். அவனுக்குக் கொஞ்சம் காசு கொடுத்து ஊருக்கு போயிட்டு எனக்க பேருக்கு ஒரு தந்தியப் போடச் சொன்னேன். அவன் அம்மைக்கு ஒடம்பு சரியில்லன்னு தந்தி போட்டான் மக்கா.  அதக் காட்டி முன்பணம்னு சொல்லி வாங்கிட்டு தப்பிச்சு வந்துட்டன். சவுதில இருந்த மூனு வருஷமும் மாமன் கால்சட்டையும் மேல்சட்டையும் போட்டு சும்மா ஹீரோ மாதிரிலா இருந்தேன் மக்களே. அத இங்க யாரும் பாத்தது இல்லலா. ஏர்போர்ட்டுல எறங்கின உடனே கடன் வாங்கியாந்த காசுல ஒரு கார புக் பண்ணினேன். காருலயே வந்து எறங்குறேன் பாரு. ஊர்க்காரப் பயலுவ யாருக்கும் என்னய அடையாளம் காணமுடியல்ல. வீட்டுக்கதவ தட்டினேன் மக்கா. யாரும் தெரக்கல. பக்கத்துக் வீட்டுக் கெழவி வெளிய இருந்தது, அண்ணனுக்கு ஒடம்பு சரியில்லன்னு அஸ்பத்திரில சேத்திருக்காங்க அங்க போயிருக்காங்க எல்லாரும்னு சொல்லிட்டு , தம்பி யாருன்னு கேட்டுச்சு”

வாய்மூடிச் சிரித்த ஜெசி, “ அப்புறம்?”

“எப்பயும் ஜன்னல் கிட்ட சாவி இருக்கும். வீட்டைத் தெறந்து உள்ள போயி மொத வேலையா அந்தக் கால்சட்டையக் கழட்டி வீசிட்டு கைலி ஒன்ன எடுத்துக் கட்டிட்டு வெளிய வாரன், என்னய யாருன்னு கேட்ட கிழவி ஏலே பங்கிராஸூ எப்பம் வந்தவன்னு கேட்டுச்சு. அன்னைக்குக் கழட்டின கால்சட்டை மோளே  இன்னய வர மாமன் கால்சட்டையே போடலயே. ஒன்லி கைலி தான்.”

ஜெசிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“பெறவு ஆஸ்பத்திரிக்கு போய் அண்ணன பாத்தன், ‘ஏய் நீ எனக்காக வந்துட்டியா உன் வேலைய விட்டு’ னு அண்ணன் கேக்க, நான் ஆமாண்ணேன்னு சொல்லி சமாளிச்சேன் பாத்துக்க”

இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஆலய மணி அடிக்காமலேயே ஆலயத்தில் இருந்த புறாக்கள் சிறகடித்துப் பறக்க, பயந்துபோன பங்கிராஸ்,

“அய்யோ மக்கா.. அத்த வீட்டு வாசல்ல நிக்கா. கெளம்புங்க மக்களே போவோம் வீட்டுக்கு.” என்று நால்வரையும் கூட்டிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார் .

“அத்தைன்னா அவ்ளோ பயமா மாமா?” ஜெசி கேட்டாள் .

“அய்யே… இது பயம் இல்ல மோளே. அன்பு, பாசம், இட் இஸ் லவ்” என்றார் கனமாக சிரித்துவிட்டு, “கிட்டத்தட்ட நாப்பது வருஷ காலம் மக்கா, இந்தக் கிழவனோட ஒன்னா வாழ்றான்னா, மாமன் அத்தய ஒரு நாளும் அடிச்சதுல்ல, பிரச்சன செஞ்சு அவ அம்ம வீட்டுக்கு வெரட்டினது இல்ல மக்கா.  என்ன பிரச்சனைனாலும்  மோளே கேட்டுக்க என்ன பிரச்சனைனாலும்  நான் ராணியம்மாள விட்டுக் குடுத்ததில்ல கேட்டியா, அவளுக்கு இந்த பி.கே, எனக்கு அவ.. அப்படித்தான் வாழ்ந்திருக்கோம். இனியும் இருப்போம் மக்களே. எம் மக்க நீங்க ரெண்டு பேரும் எங்களப் போலவே ஒருத்தருக்கு ஒருத்தர்  அன்பால பிணஞ்சு வாழனும் மக்களே. இது தான் இந்த மாமனுக்க ஒரே ஆச கேட்டுச்சா மோனே” என்று தன் தோளோடு அணைத்துக் கொண்டார் இருவரையும்.

-மலர்விழி மணியம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.