ராமநாதபுரம் அருகே மூன்று இடங்களில் இயற்கை முறையில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நாட்டு பசும்பாலை உற்பத்தி செய்து, நகரில் மூன்று கடைகள் மூலம்  நேரடியாகவும், மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்கிறார்.

உயர்ந்த தரத்திலான இயற்கை  உணவகத்தையும் நடத்தி, பல்வேறு தானியங்களை 70 வகையான உணவுப்பொருளாக மதிப்பு கூட்டி தன்னுடைய தரணி ஃபுட்ஸ் நிறுவனத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி அடையாளமாக உருவாக்கியுள்ளார் முருகேசன்.

  “எப்படி இது சாத்தியமானது?” என்று ‘தரணி’ முருகேசனிடம் கேட்டோம்.

“ஆரம்பத்தில் வேறுவேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த நான், 20 ஆண்டுகளுக்குமுன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு அதை சிறப்பாக செய்துகொண்டிருந்தேன். எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்றோ, அது சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணமோ ஏற்பட்டதில்லை. பக்கத்து கிராமத்தில எனக்கு சொந்தமான 23 ஏக்கர் விவசாய நிலம் பராமரிக்காமல் கிடந்தது. அதில் ஏதாவது பண்ணனும்னு திடீர்னு தோன்றியது.

‘தரணி’ முருகேசன்

ராமநாதபுரம் பகுதியில விவசாயம் செய்வது பெரிய அளவில் லாபத்தை தராது என்று பலரும் விவசாயத்தை விட்டு வேறு தொழில்களுக்குப் போன நிலையில, சில ஆண்டுகளுக்குமுன் எங்க நிலத்துல இருந்த கருவை மரங்களை அப்புறப்படுத்தி இயற்கை முறையில்  குதிரைவாலியை விவசாயம் செய்தேன், அது நன்றாக விளைந்தது.

அதோடு விவசாய ஆசையை நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில் அப்போது இருந்த ராமநாதபுரம் கலெக்டர், நான் வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்வதாக சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். அந்த உந்துதலில் அந்த 23 ஏக்கரோடு பக்கத்தில் உள்ள நிலங்களையும் வாங்கி பெரிய தோட்டமாக்கி அனைத்து வகையான சிறு தானியங்கள், பயிர்கள், பழமரங்கள், காய்கறிகள் என விவசாயம் செய்யத் தொடங்கினேன்.

இது மட்டுமில்லாமல், இன்னும் இரண்டு இடங்களிலும் இயற்கை விவசாயப் பண்ணைகளைத் தொடங்கினேன். தினமும் விற்பனை என நல்ல லாபம் கிடைத்தது.

ஆரம்பத்தில், என் தோட்டத்தில் விளையும் பொருள்களை அப்படியே விற்பனை செய்துவந்த நான், அவற்றை மதிப்பு கூட்டி பல்வேறு உணவுப்பொருள்களாக விற்பனை செய்யலாம் என ஐடியா தோன்றவும் கொஞ்சம் கொஞ்சமாக நேரடி விற்பனையை ஆரம்பித்தேன். குடும்ப நிகழ்ச்சிகளில், முக்கியமான விழாக்களில் மதிப்பு கூட்டிய பொருள்களில் தயாரான உணவுகளை வைத்தேன். சாப்பிட்ட மக்களுக்கு ரொம்ப பிடித்துபோனது. அதோடு கடைகளைத் தொடங்கினேன்.

தரணி ஃபுட்ஸ்

கருப்பட்டி அல்வா, கம்பு லட்டு, திணை லட்டு, ராகி லட்டு, வேர்க்கடலை லட்டு, எள்ளு லட்டு, நாட்டுப்பசு நெய் லட்டு அதோடு சிறுதானியங்கள்,பருப்புகள், மூலிகைகளைக் கலந்து தயாரித்த சத்துமாவு, அனைத்து வகையான சிறுதானியங்கள் மூலம் இடியாப்ப மாவு, புட்டு மாவு, மரச்செக்கு மூலம் தரமான அனைத்து எண்ணெய்களும் தயாரித்து விற்பனை செய்தோம்.

நாட்டுப்பசு மாடுகளை வளர்த்து,  நேரடியாகவும், வீடு தேடிச்சென்றும் பால் விற்பனை செய்கிறோம். ஒருமுறை எங்களிடம் பால் வாங்கி பயன்படுத்திய மக்கள் அவர்களாகவே எங்கள் கடைகளைத் தேடிவருகிறார்கள்.

இயற்கை முறையில் விளைவித்தால் லாபம் கிடைக்காது; ரசாயன உரங்களைப் பயிருக்குப் போட்டால்தான் நல்ல மகசூல் கிடைக்கும் என்று சிலர் சொல்வார்கள், அது பொய். விளைவித்த பொருள்களை மதிப்பு கூட்டி, சுத்தமாகவும், தரமாகவும் மக்களுக்கு கொடுத்தால் என்ன விலை கொடுத்தும் மக்கள் வாங்கத் தயாராக உள்ளார்கள். அப்படி செய்தால், நம் உழைப்பு வீண் போகாது.

அந்த அடிப்படையில்தான் எங்களுடைய பொருள்களை பிரத்யேக கடைகள் அமைத்து விற்பனை செய்கிறோம். சந்தையில் 700, 800 ரூபாக்கு நெய் கிடைக்கும்போது நாங்கள் கிலோ 2000 ரூபாய்க்கு விற்கிறோம். காரணம்,  சுத்தமான நாட்டுப் பசு நெய் என்பதால், அந்த விலைக்குத்தான் கொடுக்க முடியும். அதை வாங்க மக்கள் வருகிறார்கள். எங்களுக்கென்று ஆயிரக்கணக்கான ரெகுலர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

‘தரணி’ முருகேசன்

தற்போதைய தலைமுறையினர்  எந்த மாதிரியான மாடர்ன் உணவுகளை விரும்புகிறார்களோ, அவற்றை சிறுதானியங்கள் மூலம் செய்து சுவையாக வழங்குகிறோம். எங்கள் இயற்கை விவசாய பொருள்களை மதிப்பு கூட்டி 70 வகையான பொருள்களாக தயாரித்து நாடு முழுவதும் அனுப்புகிறோம். ஆர்டர் செய்தால் அவர்கள் இடத்துக்கே பொருள் சென்று சேரும். காய்கறிகள் விற்பனைக்காகவே தனியாக ஒரு அவுட்லெட் வைத்துள்ளோம்.

கடந்த ஆண்டு எங்களுடைய விற்பனை ரூ.1.5 கோடி. இந்தாண்டு ரூ.3 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளோம். யோகா பயிற்றுநர், பிசினஸ்மேன், அரசியல்வாதி என பல்வேறு அடையாளங்கள் எனக்கு இருந்தாலும், பகுதி நேரமாக ஆரம்பித்த இத்தொழில் மூலம் மக்கள் மத்தியில் கிடைத்த தனித்த அடையாளம் பெருமையாக உள்ளது.

இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். இயற்கை விவசாய பொருள்களை எப்படி மதிப்பு கூட்டி மார்க்கெட்டிங் செய்யலாம் என்பதை கற்றுக்கொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து  தொழில்முனைவோர்கள் என்னைக் காண வருகிறார்கள்…” என்று உற்சாகமாகப் பேசினார் முருகேசன்.

வேலை, உழைப்பு, சுறுசுறுப்பு முருகேசனை என்றும் ஜெயிக்க வைக்கும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.